July 27, 2024
  • July 27, 2024
Breaking News
December 23, 2023

சபா நாயகன் திரைப்பட விமர்சனம்

By 0 202 Views

திரும்பிய பக்கம் எல்லாம் காதல் சிதறும் படம். நாயகன் அசோக் செல்வனுக்கு இந்தப் படத்தில் அத்தனை காதல்கள் வருகின்றன. எது உண்மை, எது எல்லாம் பொய் என்று தெரியாத அளவுக்கு இனிமையாக இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் சி.எஸ். கார்த்திகேயன்.

ஆனால் திரைக்கதை இவ்வளவு எளிதானதாக இல்லை. கோயம்புத்தூரைச் சுற்றி நடக்கும் கதையில் ஒரு இரவில் போதையில் வரும் அசோக் செல்வனை ரோந்து வரும் இன்ஸ்பெக்டர் மைக்கேல் தங்கதுரை தன் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் செல்கிறார்.

போகும் வழியில் சரக்கு வாங்கி வரும் ஒரு இளைஞரையும் அந்த ஜீப்பில் ஏற்றிக் கொண்டு செல்ல, அவனுக்குக் காதல் தோல்வி என்பதால் விட்டு விடுகிறார் மைக்கேல்.

இதில் பரபரப்பாகும் அசோக் செல்வன் என் காதல் எப்படிப்பட்டது தெரியுமா என்று தன் பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் நடந்த காதல் தோல்விகளை சொல்ல ஆரம்பிக்கிறார்.

இன்ஸ்பெக்டர் மைக்கேலுடன் சேர்ந்து மயில்சாமி உள்ளிட்ட இரண்டு போலீஸ்காரர்களும் அந்த கதையை கேட்டு கண்ணீர் வடிக்க என்ன ஆகிறது என்பதுதான் எதிர்பாராத திருப்பம் உள்ள கிளைமேக்ஸ்.

பள்ளியில் படிக்கும் மாணவன் வேடத்தில் அசோக் செல்வன் ஃபிட் ஆவாரா என்று மிகப்பெரிய கேள்வி நமக்கெல்லாம் ஏழும் ஆனால் அப்பட்டமாக பள்ளி சிறுவனாகவே மாறி இருக்கிறார் அவர். அதில் கொஞ்சம் முதிர்ச்சி கொடுத்து கல்லூரி மாணவனாகவும் அவரே வருகிறார்.

நடிப்பில் எப்போதும் போல என்ன தேவையோ அதைச் சரியாக செய்திருக்கும் அசோக் செல்வன் நடனம் ஆடுவதில் ரொம்பவே தேறியிருக்கிறார். ஒவ்வொரு பாடலிலும் நடனத்தில் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்.

மனிதருக்கு எங்கே மச்சமோ..? பள்ளியில் படிக்கும் போது கார்த்திகா முரளிதரன், கல்லூரியில்  சாந்தினி சௌத்ரி, உயர் கல்வியின்போது மேகா ஆகாஷ் என்று லட்டு லட்டான நாயகிகளைக் காதலிப்பது எல்லா நடிகர்களுக்கும் வாய்க்குமா என்ன..?

கார்த்திகா முரளிதரன் அத்தனை அழகு என்றால், சாந்தினி வேறு ரகம். மேகா ஆகாஷின் வனப்பு பற்றி சொல்லத் தேவையில்லை. இவர்களுLl கார்த்திகா முரளிதரனுக்கு நன்றாக நடிக்கவும் வருகிறது என்பது பெரிய பிளஸ் பாயிண்ட்.

கதையை ஆரம்பித்து வைக்கும் மைக்கேல் தங்கதுரை படத்தை முடிவுக்கும் கொண்டு வருகிறார். சிறிய வேடம் என்றாலும் அவருக்கு அழுத்தமான வேடம் – அமைதியாக நடித்துக் கடக்கிறார்.

லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி அமர்க்களமாக அமைந்திருக்கிறது. ஒரு முழுமையான காதல் படத்துக்கு என்ன இசை தேவையோ அதைத் தர முடிந்திருக்கிறது அவரால்.

பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் என்று மூன்று பேர் ஒளிப்பதிவு செய்து இருந்தாலும் எந்த நெருடலும் இல்லாமல் வானவில்லாக நகருகிறது படம்.

கிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்று யாராலும் யூகிக்க முடியாது என்கிற அளவில் இயக்குனர் எஸ்.கே.கார்த்திகேயன் வெற்றி பெற்று விடுகிறார்.

படம் சற்றே நீளம் என்பதுதான் ஒரு குறை. அத்துடன் இப்படி ஒரு அருமையான காதல் படத்துக்கு சபாநாயகன் என்று அரசியல் தலைப்பு போல் வைத்திருப்பது இன்னொரு குறை.

இந்தக் குறைகளைத் தவிர்த்து இருந்தால் படம் எங்கேயோ போயிருக்கும்.

சபா நாயகன் – சகல கலா காதலன்..!