தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஏரியாவில் பி.ஜே.பி சார்பில் மோடியின் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது. இதற்கான ஏற்பாட்டை தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஜீவஜோதி செய்திருந்தார்.
அங்கே சுமார் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட நிகழ்ச்சிக்கு பின்னர் ஜீவஜோதி செய்தியாளர்களிடம் பேசியது.
“பி.ஜே.பி-யின் வளர்ச்சி தமிழகத்தில் அமோகமாக இருக்கிறது. நிறைய இளைஞர்கள் கட்சிக்கு வருகிறார்கள். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு பிரதமர் மோடியின் பிறந்தநாளைச் சிறப்பாக கொண்டாடியிருக்கிறோம்.
இதுவே பி.ஜே.பி வளர்ந்திருக்கிறது என்பதற்குச் சிறந்த உதாரணம்.
நீட் தேர்வு வரவேற்கத்தக்கது. நீட் தேர்வைவைத்து தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தற்குறியான அரசியல் செய்துவருகிறார்கள்.
நீட் தேர்வுக்காக மதுரையில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் கடிதத்தைப் படித்துப் பார்த்தோம். எங்கள் எல்லோரிடமும் அந்த மாணவி எழுதிய கடிதம் இருக்கிறது. அந்த மாணவி யாரையும் குறை சொல்லி எழுதவில்லை.
தன்னுடையை இயலாமையை, தனக்கு இருந்த பயத்தை வெளிக்காட்டி அந்தக் கடிதத்தை எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
திறமையான டாக்டர்கள் வேண்டுமென்றால் நீட் தேர்வு அவசியமான ஒன்று.
ஆனால் `மனுநீதி தேர்வு’ என நீட் தேர்வை நடிகர் சூர்யா குறிப்பிட்டிருக்கிறார். சூர்யா ஒரு தற்குறியான மனிதர். பிரதமர் மோடியின் பிறந்தநாளில் பேசும் அளவுக்கு சூர்யா ஒன்று பெரிய ஆள் கிடையாது. அவரைப் பற்றிப் பேச விரும்பவில்லை…’’