கால்பந்து விளையாட்டு என்றால் அதில் 11 பேர் ஆடுவார்கள் என்று அறிந்திருக்கிறோம். அது லெவன்ஸ்… ஆனால், நாங்கல் சொல்லப்போவது செவன்ஸ் என்ற ஏழு பேர் ஆடும் விளையாட்டு என்று ஒரு புதிய தகவலைச்சொல்லி படத்தை ஆரம்பிக்கிறார்கள்.
அதிலும் முக்கால் பங்கு கால் பந்து. மீதி ஆவிக்கு கால் பங்கு என்று முடிக்கிறார்கள்.
வட சென்னையில் நடக்கும் கதையில் நாயகன் கதிர், யோகிபாபு உள்ளிட்டோர் அடங்கிய கால்பந்து அணியை மாநில அளவிலான போட்டிகளில் வென்று இந்திய அணியில் இடம்பிடித்து நல்ல வேலை, வாழ்க்கை என்று செட்டிலாகச் சொல்கிறார் அவர்களின் கோச்.
ஆனால், செவன்ஸ் எனப்படும் விதிமுறைகளக் கடைபிடிக்காத விளையாட்டில் கலந்து கொண்டு ஏற்கனவே தங்கள் சீனியர்கள் அதில் பட்ட அவமானகளைத் துடைக்க முடிவெடுக்கிறார். அது முடிந்ததா, எப்படி முடிந்தது என்பதுதான் கதை.
கால்பந்து வீரர் வேடத்துக்கு தன்னை முழுமையாகத் தயார் செய்திருக்கிறார் கதிர். நடிப்பில் வழக்கம்போல் இயல்பு.
இரண்டாவது நாயகன் எனும்படியாக யோகிபாபு வருகிறார். அங்கங்கே அவர் சிரிக்க வைப்பது பெரிய ஆச்சரியம் இல்லை. ஆனால், நடக்கக்கூட மெனக்கெடும் அவர் மைதானத்தில் வந்து ஷாட் அடித்து கோல் போடுகிறார் பாருங்கள்… அதுதான் ஆச்சரியமும்… அட்டகாச சிரிப்பும்..!
முன்னாள் கால்பந்து வீரராக வரும் கிஷோர் இந்த செவன்ஸில் படு கில்லாடி. அதனால் அவர் துரோகத்தாலும், வஞ்சத்தாலும் வீழ்த்தப்படுகிறார். அதிலும் சாதிய குறுக்கீடுகள் இருப்பதை இலைமறைவு காய் மறைவாகச் சொல்கிறார் இயக்குநர்.
நாலு சீன்களில் வந்தாலும் நாயகி ரோஷினி பிரகாஷ் வளமாக இருக்கிறார். அழகாகவும் நடித்திருக்கிறார். அவரையும் அவர் காதலையும் இன்னும் கூடப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.
ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் இதில் மெயின் வில்லனாக வந்து பயமுறுத்தி, கடைசியில் பயப்பட்டு முடிகிறார்..
பிற நடிகர்களும் ஏற்றுக்கொண்ட வேடங்களுக்குப் பொருத்தமாக நடித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு ஏ.ஆர்.சூர்யா. நெருக்கமான வட சென்னைக் காட்சிகளையும் சரி… திகில் பறக்கும் சாத்தான்குளக் காட்சிகளையும் சரி… நன்றாகப் படம்பிடித்திருக்கிறார்.
சாம்.சி.எஸ்ஸின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு முதுகெலும்பாக உதவுகின்றன.
கீழ்த்தட்டு மக்களின் கனவுகளை வசதியானவர்கள் எப்படிக் கலைத்துப்போட்டு ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதைச் சொல்ல வந்திருக்கிறார் இயக்குநர் குமரன்.
வரும் வழியில் ஏதேனும் அவருக்குள் ஆவி புகுந்து விட்டதோ என்னவோ நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் கதையில் ஆவிகளை அவிழ்த்து விட்டு கண்ணாமூச்சி ஆடியிருக்கிறார். அதில் போய்விடுகிறது படத்தின் ஆவி.
ஆவிகளுக்கு அஞ்சுபவர்களா தேசத்துக்காக ஆடி வெல்லப்போகிறார்கள் என்று அலுப்பாக ஆகி விடுகிறது.
ஜடா – ஆவிகளைக் கண்டு வாங்குகிறார் ஜகா..!