இது சமூக வலைதளங்களின் காலம். அதிலும் இக்காலத்தை யூட்யூப் யுகம் என்றே சொல்லலாம். அதில் நல்ல விஷயங்கள் ஒரு பக்கம் வந்தாலும் இன்னொரு பக்கம் தங்களுடைய பார்வையாளர்களைப் பெருக்கிக் கொள்வதற்காக பொதுமக்களை பாதிக்கும் விஷயங்களும் நிறைய வந்து கொண்டிருக்கின்றன.
அப்படி சமூகத்தைக் கெடுப்பவர்களை தேடித் தேடிக் கொல்கிறார் ஒரு கொலையாளி. அவரிடம் யூ டயூப் ஜோடியான மகேந்திரனும் லீமா ரேவும் மாட்டிக்கொள்ள கொலையாளியிடம் இருந்து அவர்கள் தப்பினார்களா? அதன் பின்னணி என்ன என்பதுதான் கதை.
யூ டியூபராக மஹேந்திரன் நடித்திருக்க, அவர் அங்கங்கே வாட்டர் மெலன் திவாகரை நினைவுபடுத்துகிறார். என்ன சூழ்நிலை என்றாலும் சிப்ஸ் தின்று கொண்டிருப்பது காமெடியாகத் தோன்றவில்லை.
சீரியஸாகவே போய்க்கொண்டிருக்கும் கதையில் அங்கங்கே நாயகி நீமா ரே காட்டியிருக்கும் கவர்ச்சி ஆறுதலைத் தருகிறது.
ஆனாலும் இவர்கள் செய்வதாகக் காட்டப்படும் ஒரு கண்டென்ட் உண்மையிலேயே ரொம்ப ஓவர்தான்.
கொலையாளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் இயக்குநர் சிக்கல் ராஜேஷ், படத்தைப் பொறுத்த அளவில் வில்லன் என்றாலும் நியாயப்படி அவர்தான் ஹீரோ என்று சொல்ல வேண்டும்.
சிறப்பாக நடித்திருக்கிறார் என்றாலும் அவரே இயக்குனராக ஆனதால் ‘ கட் ‘ சொல்ல மறந்து போய் அதிகபட்சமாகவே நடித்திருக்கிறார்.
கொலையாளியாக மிரட்டினாலும், ஒரு பாசமுள்ள அண்ணனாக நெகிழ வைக்கிறார். அவர் தங்கையாக நடித்திருப்பவரும் தன் பங்குக்கு பாசத்தைப் பொழிகிறார்.
அந்த அண்ணன் தங்கை எபிசோட் நம் நெஞ்சைத் தொடுகிறது.
இவர்களுடன் நிழல்கள் ரவி, சேரன் ராஜ், சிசர் மனோகர் உள்ளிட்டோர் தங்கள் முகத்தால் இதை ஒரு கமர்சியல் படமாக உணர வைத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பாஸ்கர் தன்னால் முடிந்த அளவுக்கு படத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். காட்டுக்குள் நடக்கும் கிளைமாக்ஸ் இரவுக் காட்சிகள் பல சந்தர்ப்பங்களில் பகல் போலவும் தெரிகின்றன.
ஏ.எம்.அசார் இசையில் பாடல்களைக் கேட்கலாம் . அதில் அஸ்மிதா ஆடும் குத்துப்பாடல் போனஸ்.
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சிக்கல் ராஜேஷ், சமூக வலைதளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவராக இருப்பாரோ எனும் அளவுக்கு திரைக்கதையில் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இரவின் விழிகள் – இருட்டிலும் பார்க்கும்..!
– வேணுஜி