இந்த பூமிப்பந்து உருவாக எத்தனைக் கோடி கோடி ஆண்டுகள் ஆயினவோ… ஆனால், இந்தப் புவியை ஒருமுறை அல்ல பலமுறை முற்றிலும் அழிப்பதற்குத் தேவையான ஆயுதங்களை நாம் சேமித்து வைத்திருக்கிறோம்.
அதேபோல் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையேயான போர் என்பது அவரவர்களின் எல்லைக்குட்பட்ட தனிப்பட்ட பிரச்சினையாகவே கருத்தில் கொள்ளப்படுகிறது. ஆனால், ‘இல்லை…’ என்கிறார் இந்தப்பட இயக்குநர்.
ஒரு போரில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களும் அதன் பாதிப்புகளும் வான்வழியாக காற்றிலோ, மழையிலோ நீர் வழிக் கடலிலோ கலந்து அதன் ஆபத்துகள் நூற்றாண்டுகள் கடந்தும் எல்லை தாண்டுகின்றன என்ற பயங்கரத்தை எடுத்துரைப்பதுடன் அந்த ஆயுதங்கள் அதனுடன் சம்பந்தமில்லாத மனித உயிர்களைப் பலி கொள்வதையும் சுட்டிக் காட்டுகிறார் அவர்.
“எனில், தன் நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற ஆயுதங்களை வைத்திருப்பதாக ஒவ்வொரு நாடும் கூறிக்கொண்டிருப்பது எப்படி சரி..?” என்ற உலகளாவிய ஒரு கேள்வியையும் எழுப்புகிறார் இந்தப்படம் மூலம் தன்னைத் தமிழின் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக நிறுவிக்கொண்டிருக்கும் அதியன் ஆதிரை.
இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிக்காத குண்டுகள் கடல் வழியே பல நாடுகளைச் சேர்ந்து பல பயங்கரங்களை ஏற்படுத்துகின்றன. அப்படித் தமிழகத்தில் கரை ஒதுங்கிய குண்டு என்னவாகிறது என்பதையும் அதன் பின்னாலிருக்கும் ஒரு அரசியலையும் தன் முதல் படத்திலேயே உரக்கப் பேசியிருக்கிறார் இயக்குநர்.
இது மட்டும்தானா படத்தின் சிறப்பு என்றால் “இல்லை… அத்துடன் நாம் கண்டுகொள்ளாத எளிய மனிதர்களின் விளிம்பு நிலை வாழ்க்கை அதன் ஒவ்வொரு நகர்த்தலிலும் எப்படி போராட்டங்களைச் சுமந்து கொண்டு செல்கிறது என்றும் காட்டியிருக்கிறார்.
அதற்கு அவர் கைக்கொண்டிருப்பது இரும்புக்கடை ஒன்றின் களத்தை. இதுவரை இப்படியான இரும்புக் கடை மற்றும் குடோன்களை நாயகனும் வில்லனும் சண்டையிட்டுக்கொள்ளும் இடமாகவே பார்த்த நமக்கு அங்கே பலரது வாழ்க்கையும் பழைய இரும்புகளுடன் வைத்து நசுக்கப்பட்டும், பிரித்தெடுக்கப்பட்டும் சிதிலமடைந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையை இரும்பும், துருவுமாகச் சொல்லி மூச்சு முட்ட வைக்கிறார் அதியன்.
எந்த நேரம் எவருக்குக் கைபோகும், எந்த நேரம் எவருக்கு கால் முறியும் என்றே சொல்ல முடியாது. ஒரு காட்சியில் அங்கு வேலை செய்யும் ரமேஷ் திலக்குக்கு காலில் இரும்பு விழுந்து ரத்தம் பெருக்கெடுக்க, அவரை ஏற்றிப்போகும் வண்டியில் அந்த ரத்தம் கொடூரமாகச் சிதறிக்கிடக்க, அதன் அவலம் தெரியாதிருக்க மண்ணைப் போட்டு மூடுகிறார்கள். இப்படி எவ்வளவு தொழிலாளர்களின் ரத்தத்தை இந்த ‘மண்’ மறைத்துக் கொண்டிருக்கிறது என்று நம் ரத்த ஓட்டத்தை ஒருநிமிடம் நிறுத்தி நினைக்க வைக்கிறது அந்தக்காட்சி.
தமிழ் சினிமாவின் தரமான படங்களுக்கென்றே தத்து கொடுக்கப்பட்ட பிள்ளை தினேஷின் நடிப்பைப் பாராட்டுவது எப்படி..? மேற்படி இரும்புக்கடையின் லாரி ஓட்டுநராக வரும் அவர் இந்தப்பட ஹீரோ என்றால் அது ஒட்டாத வார்த்தை. இந்தப்படத்தின் ரத்த ஓட்டமே அவர்தான்.
இரவெல்லாம் லாரி ஓட்டி பகலெல்லாம் தூங்கியும் தூங்காமலும் களைத்து, ஏற்றிய சரக்கு இறக்குமிடத்தில் எடை குறைந்து போனதற்கும், பழுது பார்க்காத லாரியின் மராமத்துகளுக்கும் முதலாளி தன் சம்பளத்தில் கை வைப்பதைத் தட்டிக்கேட்க முடியாமலும் தவிக்கும் அவர், ஒரு பெருநகரை அழிக்கக்ககூடிய பெரும் ஆயுதத்தைக் கையில் வைத்துக்கொண்டு விசுவாசத்துக்கும், மனசாட்சிக்கும் நடுவில் பெண்டுலமாய் ஊசலாடும் பொழுதில், கைவிட்டுப் போன காதலியைக் கூட மீட்க இயலாமல் படும் வெம்மையை அதன் அழுக்கு முகத்துடனேயே விளங்க வைத்திருக்கிறார்.
கடந்த பத்து ஆண்டுகளில் சிறந்த தமிழ்ப்படங்கள் பத்தைப் பட்டியலிட்டால் அதில் அதிகபட்சப் படங்களில் இருக்கும் சாத்தியம் தினேஷுக்கு மட்டுமே இருக்கிறது. இது இன்றைய ‘பிகில’டிக்கும் ரசிகர்களின் வசூல் ஹீரோக்கள் எவருக்குமில்லாத ‘தல’யாய சரித்திர சாதனை. என்ன ஒன்று அந்தக் ‘குக்கூ’ கண்கள் மட்டும் அங்கங்கே வந்து இயக்குநர் ராஜுமுருகனைக் கடிந்து கொள்ள வைக்கிறது.
கயல் ஆனந்தியை இதைவிட பிற படங்களில் காத்லித்திருக்கிறோம். ஆனால், இரும்புக்கடைக்காரனின் காதலின் முன்பு சாதித் துருப்பிடித்த தன் அப்பா தற்கொலைக்கு முயன்று குடும்பமே அரற்றும் பொழுதில் “ஆள் இருக்கும்போதுதான் இவர் தூக்கு மாட்டிப்பாரா..?” என்று எகத்தாளத்துடன் கேட்கும் எஃகு மனுஷியாகப் பார்ப்பது இதுதான் முதல்முறை.
சினிமாவில் புகழ்பெற வேண்டுமானால் புரடக்ஷன் சாப்பாட்டுக்குப் பொங்கும் அரிசியில் உங்கள் பெயரெழுதியிருக்க வேண்டும் என்பார்கள். அப்படி எழுததப்பட்டவர்களில் ஒருவர் முனீஷ்காந்த் ராம்தாஸ்… அவர் தேர்ந்தெடுத்து படங்களில் நடிக்கவில்லை. ஆனால், நல்ல படங்கள் எடுப்பவர்கள் அவரைத் தெரிந்தெடுப்பதன் காரணம் அவரது வெள்ளந்தி நடிப்புதான்.
அதே போன்ற இன்னொருவர் மாரிமுத்து. ஹாலிவுட்டில் பிறந்திருந்தால் இன்னொரு ‘மார்கன் ப்ரீமேன்’ போல வந்திருப்பார். என்ன ஒரு இயல்பான உணர்வு வெளிப்படுத்தல்..? இவர் மற்றும் மேற்படி ராமதாஸின் திறமைக்கான ஒரு காட்சி. வெளியே போன ராமதாஸ் கடை முதலாளி மாரிமுத்துவுக்குப் போன் போட்டு தன் பெயரைச் சொல்ல மாரிமுத்து யாரோ கஸ்டமர் பேசுகிறார்கள் என்று நினைத்து “சொல்லுங்க சார்…” என்பதும், ராம்தாஸும் குழம்பியபடி “நான் பஞ்சர் பேசறேன்…” என்று சொல்ல, “அடப்பாவி பேரைச்சொல்ல மாட்டியாடா..?” என்பதும் இயல்பான வேடிக்கை.
அந்த அளவுக்கு டிரைவர், கிளீனர், பஞ்சர் என்று தொழில் நிமித்தம் வாய்த்த பெயர்களே அவர்களுக்கு வைத்த பெயரை விட அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கிறதென்பது வேடிக்கை கலந்த வேதனை.
ஒரு குண்டு தன் வாழ்வைத் திசை மாற்ற, பிறிதொருவர் அப்படி பாதித்துவிடக் கூடாதென்று கண்டெடுத்த குண்டைத் தேடி அலையும் தோழராக வரும் ரித்விகாவும் அந்தப் பாத்திரத்தில் அப்பட்டமாகப் பொருந்தியிருக்கிறார். நன்று தோழி..!
இவர்கள் எல்லோரும் ஒரு கட்டத்தில் ஒருவர் பிரச்சினையை மற்றவர் தோளில் மாற்றிச் சுமந்து செல்வது திரைக்கதையின் ஆகச்சிறப்பு. அதேபோல் துப்பாக்கியைக் காண்பித்தால் படம் முடிவதற்குள் அது சுட்டாக வேண்டும் என்கிற சினிமா சித்தாந்தப்படி கண்ணில் காட்டுகிற குண்டு வெடித்தாக வேண்டுமே..?
கிளைமாக்ஸுக்கு முன்பு அப்படி வெடித்து அதன் பாதிப்பு முழுதும் காட்சிப்படுத்தப்படுகிறது. அது எப்படி என்பது திறமையான இயக்க முத்திரை.
கதை போகும் வழியெல்லாம் காண்பிக்கிற மனிதர்களின் வாழ்வியல், கலாச்சார படிமங்களையும் அப்படி அப்படியே காட்சிப்படுத்திப் போயிருக்கும் அதியன், அவர் கண்டுணர்ந்த வாழ்க்கையை அவலமும், ஆனந்தமும் கலந்து ஆவணப்படுத்தியிருக்கிறார். படத்தில் இடம்பெறும் கூத்துக் கலையும் அப்படியானது.
அதற்கு மிகவும் உறுதுணை புரிந்திருக்கிறது ‘தென்மா’வின் இசை. படத்துடன் கலந்து தெரியும் இசை கமர்ஷியல் சினிமாப் பிரியர்களுக்கு ஒத்துவராதென்பது இந்தப்படத்தைப் பொறுத்தவரை குற்றமாகத் தெரியவில்லை. ஒளிப்பதிவாளர் கிஷோர் குமாரின் உழைப்பும் இரும்புத்துகள் கலந்து இறுகிப் பார்க்க வைக்கிறது. அந்த லாரி துரத்தல் காட்சிகளும் அபாரம்..!
இறுதிக்காட்சிக்கு முன்னர் சொல்லப்படும் அந்தக் காகிதக்கொக்கு கதை நம் இதயத்தின் ஓரம் ரத்தம் கசிய வைக்கிறது. பாட புத்தகங்கள் தராத பாடத்தை இந்தப்படம் சாதித்திருக்கிறது.
இத்தனைப் பாராட்டுகளுக்கும் மூல சொந்தக்காரர் அதியன் ஆதிரையைப் பதியன் போட்டு பாடம் சொல்லித்தந்து ஒரு படத்தையும் இயக்கக் கொடுத்த பா.ரஞ்சித் போன்ற ஒரு படைப்பாளி பிரபஞ்சத்தில் எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டார். வந்தனங்கள் தோழர்களே..!
மனிதம் பேசும் இந்த அசாத்திய முயற்சியில் குறைகளைச் சுட்டிக்காட்டி நிறை செய்ய நினைப்பதும் குற்றம்தான்..! பார்க்கக்கூடாத படங்களையெல்லாம் நாம் பாராட்டி ரசிப்பதில் குற்றமில்லையா..?
மக்களுக்கான ஒரு படம் அதன் வலியுணர்ந்த மக்களால் மட்டுமே உருவாக்கப்படும் என்பது இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதைக் கொண்டாடுவதற்கு மக்கள் இன்னும் தயாராகவில்லை என்ற சுடும் உண்மை மட்டுமே இதுபோன்ற படங்களுக்கான சவால்.
அதையும் மக்களுக்குக் கற்றுத்தர இதைப்போன்ற முயற்சிகளால் மட்டுமே முடியும்.
குண்டு – உலக சமாதானத்தை வலியுறுத்தி உள்ளூரிலிருந்து சிறகு விரித்த காகிதக்கொக்கு..!
– வேணுஜி