October 16, 2025
  • October 16, 2025
Breaking News
August 21, 2025

இந்திரா திரைப்பட விமர்சனம்

By 0 97 Views

பெண் பெயரில் தலைப்பு கொண்ட படமாக இருப்பதால் இது ஒரு பெண்ணைச் சுற்றிய கதையமைப்பைக் கொண்டிருக்கும் என்று நினைத்தால் அது தவறு. 

நாயகன் வசந்த் ரவிதான் ஹீரோ. அவர்தான் இந்திரா. இப்படி தலைப்பிலேயே ஒரு ட்விஸ்ட்டை வைத்திருக்கும் இயக்குனர் படம் முழுவதும் அப்படியே பல திருப்பங்களை வைத்து இந்த திரில்லரைத் தந்திருக்கிறார். 

கதைப்படி அபிமன்யு என்ற சீரியல் கில்லர்  அங்கங்கே கொலைகளைச் செய்து நகரை நடுங்கி வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் கொலை செய்யும் ஸ்டைலே அலாதியானது ஒருவரை கொன்ற பின் அவர்களின் கையை மட்டும் தனியே அறுத்து விடுவார். இது போலீசுக்குத் தீராத தலைவலியைக் கொடுத்து வருகிறது. 

இன்னொரு பக்கம் போலீஸ் துறையைச் சேர்ந்த ஆய்வாளர் வசந்த் ரவி ஒரு நாள் போதையில் ஓட்டி வந்த போலீஸ் வேன் விபத்துக்குள்ளாகிறது. இதனால் சஸ்பென்ஷனில் இருக்கிறார் அவர். 

அதன் காரணமாக மேலும் குடிபோதையில் விழுந்த அவருக்கு ஒரு கட்டத்தில் பார்வையும் பறிபோக, அவரது காதல் மனைவி மெஹ்​ரீன் பீர்சாடா அவரது கண்ணுக்குக் கண்ணாக இருக்கிறார். 

மீண்டும் அவருக்கு பார்வை வருவதற்கான சிகிச்சையில் இருக்கும் வேளையில் எதிர்பாராத விதமாக மெஹ்​ரீன் பீர்சாடா கொல்லப்படுகிறார் அதுவும் எப்படி..? முன்னரே நிகழ்ந்த சீரியல் கொலைகளைப் போல் கைகள் துண்டித்த நிலையில்.

இதன் முடிவு என்ன என்பதுதான் இந்த சஸ்பென்ஸ் திரில்லர் சொல்லும் கதை.

வசந்த் ரவி நடிக்கும் படங்கள் எல்லாமே சற்றே வித்தியாசமான கதை அமைப்பை கொண்டிருப்பதை விட அவருக்கு நடிக்கவும் வாய்ப்பு தரும் பாத்திரமாக அமைவது நல்ல விஷயம்தான். அவரும் அதை புரிந்து கொண்டு தன்னுடைய பாத்திரத்தை நடிப்பில் நிறைவு செய்து விடுகிறார். 

காதல் மனைவிக்கு ஏற்ற களையான முகம் மெஹ்​ரீனுக்கு. கணவன் பற்றிய கவலையில் இருந்தாலும் அவரது குழந்தையை வயிற்றில் சுமக்க வேண்டும் என்று எண்ணி தாய்மை கொள்வதற்குள் அவர் பலியாவது சோகம். 

தெலுங்கு நடிகர் சுனில் ஏற்கும் பாத்திரங்கள் அலாதியானவை. இதில் சீரியல் கில்லர் ஆக வரும் அவர் நடிப்பும் சிரிப்பும் மிரட்டல்.

சோசியல் மீடியாக்களில் கிளாமராக வந்தாலும் இந்த படத்தில் அனிகா சுரேந்திரனுக்கு அடக்கமான வேடம். அதற்காக… அவர் சட்டென்று இறந்து போய் அடக்கம் செய்யப்படுவது பரிதாபம்.

அனிகா வின் காதலராக வரும் சுமேஷ் மூர் அமர்க்களப் படுத்தியிருக்கிறார். பார்வைக்கு சாதாரண பையனைப் போல் இருப்பவர் நடிப்பில் அதிரிப்புதிரி ஆட்டம் காட்டி இருக்கிறார்.

வசந்த் ரவியின் நண்பனாக வரும் ராஜ்குமார் வழக்கம்போல்…

விரைப்பாக கொஞ்சம் முறைப்பாக அறிமுகமாகும் விசாரணை இன்ஸ்பெக்டர் கல்யாண் கடைசிவரையில் எதையும் கண்டுபிடிக்கவில்லை என்பது தான் சோகம். 

எழுதி இயக்கியிருக்கும் சபரீஷ் நந்தா திடீர் திருப்பங்களை கொடுத்த நம்மை திடுக்கிட வைக்கும் முயற்சி நல்ல பலன் தந்து இருக்கிறது. 

அதற்கு உறுதுணையாக இருந்த ஒளிப்பதிவாளர் பிரபு ராகவையம், இசையமைப்பாளர் அஜ்மல் தஹ்சீனையும் பாராட்டியாக வேண்டும். இன்னொரு சாம் சிஎஸ் ஆகத் தெரிகிறார் அஜ்மல் தஹ்சீன்.

கடைசியில் யார் கதாநாயகன் யார் வில்லன் என்று தெரியாத நிலையிலேயே பணம் முடிகிறது. அதனை அடுத்த பாகத்தில் சொல்வாரோ இயக்குனர்..?

இந்திரா (வை) – வச்சு செய்த தந்திரா..!

– வேணுஜி