குறைந்த முதலீட்டுப் படங்கள் எடுப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ஆணவக்கொலை மேட்டர் என்று போய்விடாமல் சமூகத்தில் இருக்கும் மற்ற பிரச்சினைகளையும் முன்வைத்து ஒரு சிறு முதலீட்டுப் படத்தை இயக்கியிருக்கிறார் அருண்காந்த்.
ஏற்கனவே இவர் இயக்கிய கோகோமாகோ இதேபோல் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு தயாரிப்பாளருக்கு ஒரு லாபத்தையும் பெற்றுத் தந்தது என்று அறிகிறோம்.
இந்தப்படத்தில் இன்றைய ஐடி இளைஞர்களுக்கு வழக்கமாக இருக்கும் வேலைச்சுமையையும், அதிகாரிகளின் கெடுபிடியையும் முன்னிறுத்தி சொந்தத் தொழில் தொடங்கும் போக்கை முன்னிறுத்துகிறார் அவர். அப்படி ஹீரோக்களான ராம்குமார் சுதர்ஷனும், அஷ்வின் குமாரும் சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்து நிவேதா சதிஷுடன் இணைந்து இண்டர்நெட் ரேடியோ ஒன்றை தொடங்குகிறார்கள்.
ஏற்கனவே அந்த துறையில் இருக்கும் சாம்ஸ் அவர்களுக்கு உதவி செய்கிறார். தங்கள் ரேடியோவின் முதல் நிகழ்ச்சியால் பத்திரிகை நிறுவனம் ஒன்றுக்கு பாதிப்பு ஏற்பட, அவர்கள் சட்ட ரீதியாக ரேடியோ நிறுவனத்தை மூடும் நடவடிக்கையில் இறங்குகிறார்கள். அதிலிருந்து இவர்கள் தப்பினார்களா என்பது மீதி.
நாட்டில் இருக்கும் முக்கிய பிரச்சினையான மேட்ரிமோனியல் சிக்கல்களை எடுத்துக்கொண்டு கதை சொல்லியிருப்பதை வரவேற்கலாம். அதில் மக்களின் அறியாமையையும் பேராசையையும் இயக்குநர் எடுத்துக் காட்டியிருக்கிறார். ஆனால், அனைத்திலும் ஒரே லொகேஷனில் எல்லோரும் பேசிக்கொண்டிருப்பதே கொஞ்சம் அலுப்படைய வைக்கிறது.
அதிலும், இரண்டு செட்களே படத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒன்று ரேடியோ ஸ்டேஷன். இன்னொன்று நீதிமன்றம். அதுவும் பின்பாதிப்படம் இந்த நீதி மன்றத்திலேயே பெரும்பாலும் கழிகிறது.
ராம்குமார் சுதர்ஷனம், அஷ்வின் குமார் ஆகியோரின் நடிப்பும் மாடுலேஷனும் சொல்லிக்கொடுத்தைச் செய்தது போலவே இருக்கிறது. நிவேதா சதிஷ் சமளித்து நடித்திருக்கிறார். காமெடியன் சாம்ஸுக்கு பெரிய வேலையில்லை. மேடை நாடகம் போல் இருந்த இடத்திலிருந்தே மைகேல் ஜாக்ஸன் பாணியில் நம்மை சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்.
ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய பாத்திரம் ஏற்றிருக்கிறார். அவருடன் டெல்லி கணேஷ், டி.எம்.கார்த்திக் போன்றோர் வருகையில் நாம் சினிமா பார்க்கிறோம் என்ற நினைவே வருகிறது. மற்றபடி இந்தத் திரைக்கதையை மேடை நாடகமாகவே நடித்துவிட்டுப் போக முடியும்.
இந்தப் படத்தை இயக்கியிருப்பதுடன் இசை, பாடல்கள், எடிட்டிங், கலை, சவுண்ட் டிசைனிங், கலரிங், ஆடை வடிவமைப்பு, கிராபிக் டிசைன் ஆகிய பணிகளையும் மேற்கொண்டிருக்கிறார். வேறு யாருக்கும் சம்பளம் கொடுத்து விடக்கூடாது என்று நினைத்தாரோ…? இருந்தாலும் அத்தனை பொறுப்புகளையும் ஏற்றதில் போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் அவருக்கே போய்விட வாய்ப்பு இருக்கிறது.
அந்த நீதிமன்ற செட்டை மட்டும் வெளிநாட்டு நீதிமன்ற பாணியில அமைத்திருப்பதும், நீதி மன்ற உரையாடல்களும் வித்தியாசமாக அமைந்திருக்கின்றன.
நல்லவேளையான ஒளிப்பதிவுக்கு மட்டும் இன்னொருவரை நம்பியிருக்கிறார் சுகுமாரன் சுந்தரின் கேமராவுக்கு சுற்றிச்சுழல வாய்ப்பில்லை. அதனால் அவுட்டோர் கிடைத்தால் ஒரு ஏரியல் ஷாட்டை எடுத்து தெறிக்க விட்டிருக்கிறார்.
குறைந்த செலவில் படம் எடுத்தாக வேண்டும் என்று நினைத்த அருண்காந்தின் முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால், அது திரைப்படம் பார்த்த திருப்தியையும் தரவேண்டும் அல்லவா..? அதற்கான முயற்சியை அவர் அடுத்த படத்தில் எடுத்தால் நல்லது.
இந்தப்படத்தின் சீகுவலே எடுக்கப்படும் நம்பிக்கையில் அடுத்து மருத்துவத்துறையில் நடக்கும் வியாபாரத்தைப் பற்ரி நாயகர்கள் பேசுவதுடன் படம் முடிகிறது. அதுவும் நல்ல கருத்துதான். அதில் இன்னும் நேர்த்தியைத் தருவார் என்று நம்பலாம்.
ஆக, ‘இந்த நிலை மாறும்’ என்பது சமூகத்துக்காக மட்டுமல்ல, அவருக்காகவும்தான்..!