எதை நினைத்து இந்தப்படத்துக்கு இப்படி ஒரு டைட்டில் வைத்தாரோ இயக்குனர் ராம் பாலா என்று தெரியவில்லை. ஆனால், படமும் திரில்லராகவோ, ஹாரராகவோ, காமெடியாகவோ இல்லமல் குழப்பமாகத்தான் இருக்கிறது.
ஒரு மாதிரியாக நாம் புரிந்து கொள்ளும் கதை என்பது இதுதான்.
இடியட்டுகள் வசிக்கும் ஒரு கிராமத்தில் ஊர் தலைவராக இருக்கிறார் மகா இடியட்டான ஆனந்தராஜ். ஒலிம்பிக் ஜோதி ஏந்தி வந்த தடகள வீரரை ஊரைக் கொளுத்த வந்தான் என்று பிடித்து வைத்து அவரை எரிக்க தீர்ப்பு சொல்ல, நல்லவேளையாக போலீஸ் வந்து மீட்கிறது. அவருடைய மகன் சிவா அப்பாவின் முட்டாள்தனம் புரிந்த அளவுக்கு புத்திசாலி. ஆனால், ஒரு விபத்தில் அவருக்கு மன நலம் பாதிக்கிறது.
இன்னொரு பக்கம் கதாநாயகியாக வரும் நிக்கி கல்ராணி மனநல மருத்துவராக இருக்கிறார். அவரது முன்னோர்கள் முன்னொரு காலத்தில் மன்னர் பரம்பரையை ஏமாற்றி சொத்துக்களை தன்வசப் படுத்திக் கொள்கிறார்கள் என்றொரு பிளாஷ்பேக் சொல்கிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க மூன்றாவது பக்கம் முன்னொரு காலத்தில் இறந்த தன் காதலனை உயிர்ப்பிக்க நிக்கி கல்ராணியின் உயிரை எடுப்பதற்காக சூனியக்காரி அக்ஷரா கவுடா, நிக்கியின் மருத்துவ மனையில் பேஷன்டாக நடித்து சமயம் பார்த்து வருகிறாள். இதே மருத்துவமனையில் நிக்கியிடம் சிகிச்சைக்காக சேரும் சிவாவுக்கு நிக்கி மீது காதல் வருகிறது.
நான்காவது பக்கம்… ஒரு சப்பை வில்லன் ரவிமரியா, நிக்கியைக் கடத்திச்சென்று பணம் பறிக்க முயற்சி செய்கிறார்.
இந்தக் கூத்து குழப்பங்களுக்கு இடையே இவர்கள் அனைவரும் ஒரு பழைய பேய் பங்களாவில் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த பங்களாவுக்குள் பேய்களுக்கு இடையே அனைவருக்கும் அவர்கள் எதிர்பார்த்தது நடந்ததா என்பது மீதிக்கதை.
வழக்கமான பேய் படங்களுக்கான பயமுறுத்தல்களோ அல்லது காமெடிகளோ இல்லை. சிவா கூட முதல் பாதியில் அங்கங்கே சிரிக்க வைக்க முயன்றவர், பின் பாதியில் எதுவும் செய்ய முடியாமல் ஆகிறார். நிக்கி கல்ராணியும் பாதிப்படத்துக்கு மயக்கத்திலேயே இருக்கிறார். மற்ற நடிகர்களும் சிரிக்க வைக்க எவ்வளவோ முயன்று நம்மை சோதிக்கிறார்கள்.
இயக்குனர் ராம்பாலா தன் முந்தைய படங்களைப் போல நகைச்சுவையைக் கொடுக்காதது படத்தின் பலவீனம். கதையும், திரைக்கதையும் சுவாரஸ்யம் இல்லாமல் நகர்கிறது. ஆனந்த்ராஜ், ஊர்வசி, மயில்சாமி, சிங்கமுத்து, ரவிமரியா, ரெடின் கிங்ஸ்லி என்று பெரிய காமெடிப் பட்டாளம் இருந்தும் நம்மால் சிரிக்க முடியாதது பெரும் சோகம்.
ராஜா பட்டாசர்ஜியின் ஒளிப்பதிவு ஓகே. விக்ரம் செல்வாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அதிகம் ஈர்க்கவில்லை.
இடியட் – கடியட்..!
Related