HMM என்பதன் விரிவாக்கம் Hug me More என்பதறிக. அதற்காக இது ஏதோ ஆங்கிலப் படம் என்று நினைத்து விட வேண்டாம். அக்மார்க் தமிழ்ப் படம்தான்.
டைட்டில் போடும்போது கூட விண்வெளியில் சேட்டிலைட் எல்லாம் காட்டி ஏதோ ஆங்கிலப்படம் பார்க்கப் போகிறோம் என்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியிருப்பதும் நிஜம்.
ஆனால் தரைக்கு இறங்கி, கதைக்கு வந்ததும் இது தமிழ்ப் படம் தான் என்று உணர வைத்து விடுகிறது.
காட்டுக்குள் தனியே இருக்கும் காட்டேஜில் ஒரு விஞ்ஞானியாக இருக்கும் நாயகன் நரசிம்மன் பக்கிரிசாமி, தன் சக விஞ்ஞானியுடன் சேர்ந்து ஏதோ ஒரு (!) சர்வதேச ப்ராஜெக்ட் ஒன்றை அரசுக்குத் தெரியாமல் ரகசியமாக செய்து கொண்டிருக்கிறார்.
அவர் ஏதோ வேலையாக (!) வெளியூர் சென்று இருக்கும்போது இந்தக் கதை தொடங்குகிறது. அந்த காட்டேஜுக்குப் பக்கத்திலேயே இருக்கும் பங்களாவில் நரசிம்மன் பக்கிரிசாமியின் காதலி சுமிரா இருக்க, அன்று அவரது பிறந்த நாளாகவும் அமைகிறது. அந்த நேரம் பார்த்து ஏதோ அமானுஷ்யம் நிகழப் போவதாக சூழ்நிலைகள் உணர்த்த… அதைத்தொடர்ந்து சுமிராவைப் பார்த்து வாழ்த்து சொல்லி விட்டுப் போகும் அவரது தோழி கொல்லப்படுகிறார்.
முகமூடி அணிந்த மனிதன் அந்தக் கொலையை நிகழ்த்தியிருக்க அதற்கடுத்த டார்கெட்டாக சுமிராவை அவன் குறி வைக்க… சுமிரா அவனிடமிருந்து தப்பினாரா, அந்தக் கொலைகளுக்கான காரணம் என்ன என்பதெல்லாம் மீதிப் படத்தைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.
படத்தைத் தயாரித்து இயக்கி நாயகனாகவும் நடித்திருப்பதாலோ என்னவோ நடிப்பில் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை நரசிம்மன். அதற்காக இயக்கத்திலும் தயாரிப்பிலும் அலட்டிக்கொண்டாரா என்று கேட்கக் கூடாது.
எந்த தயாரிப்பாளருக்கும், ஹீரோவுக்கும் தொல்லை கொடுக்காமல் தான் எப்படிப் படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தாரோ அதைத் தன் சொந்த சம்பாத்தியத்தை வைத்து எடுத்த அவரைப் பாராட்டலாம்.
சுமிரா ஒரு வெளிநாட்டு அழகி என்று சொல்லி விடுவதால் அவர் முகம் நமக்கு அன்னியமாக இருப்பதைப் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. ஆனால் என்ன உடை அணிந்தாலும் கிளாமராக இருப்பதால் அதுவே படத்தை நகர்த்தும் காரணியாக அமைகிறது.
போதாக்குறைக்கு அவரது தோழியாக வரும் ஷர்மிளாவும் கவர்ச்சியாக இருப்பதால் இவர்கள் இருவரும் வரும் காட்சி அலுப்புத் தட்டவில்லை.
படத்தை லைவ் சவுண்டில் எடுத்தார்களா என்று தெரியவில்லை அவர்கள் பேசும்போது ஏற்படும் நான் சிங்க் தவறுகள் கூட பிசிறு இல்லாமல் அப்படியே ஒலிப்பதிவில் வந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கிரண் எங்கேயும் கேமராவை கீழே வைத்து விடாமல் கையிலேயே வைத்துப் படம்பிடித்து இருப்பார் போல. படத்தொகுப்பாளர் துரைராஜுக்கும் அதிக வேலை… அல்லது வேலையே இல்லை. சுமிரா ஒரு முட்டைப் பொரியல் செய்வதை, இயல்பாக முட்டைப் பொரியல் செய்யும் நேரத்தை விட அதிகமாக எடுத்துக்கொண்டு செய்ய… எங்கேயும் எடிட் செய்யாமல் அந்த பொரியல், கரியல் ஆகும் வரை விட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
திரையில் ஒளி வந்ததிலிருந்து ஏதோ பயங்கரம் நடக்கப் போகிறது என்கிற உணர்ச்சியுடன் இசைக்க ஆரம்பித்து இருக்கிறார் இசையமைப்பாளர் புருஷ் . அவருக்கே கொஞ்சம் அயர்ச்சி ஏற்படும் இடங்களில் எல்லாம் Hug me more என்ற பாடலைப் போட்டு அட்ஜஸ்ட் செய்து விடுகிறார்.
புட்டேஜ் காட்ட வேண்டும் என்பதற்காக எந்த காட்சியையும் நறுக்காமல் அப்படி அப்படியே நீளமாக எடுத்து வைத்திருக்கிறார்கள். இதைவிட சுவாரசியமாக திரைக்கதையில் இன்னும் பத்து காட்சிகள் சேர்த்து இருக்கலாம்.
இருக்கிற நிலத்தை வைத்து எள்ளு பயிரிடும் குறு விவசாயியைப் போல தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து ஒரு த்ரில்லர் படத்தைத் தயாரித்து திருப்திப் பட்டிருக்கிறார் நரசிம்மன்.
கொஞ்சம் பயிற்சியும் இருந்திருந்தால் ரசிக்கத்தக்க படமாகவே இதைக் கொடுத்திருக்க முடியும்.
இருந்தாலும் முயற்சிக்குப் பாராட்டுகள்..!