எம்ஜிஆர் நடித்த பறக்கும் பாவை படத்தில் காதலை புரிந்து கொள்ள முடியாத நாயகி சரோஜாதேவி, “அழகை காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ..?” என்று ஒரு பாடலை பாடுவார்…
அப்படி ஒருவர் மனதில் உள்ள காதலை கண்டுபிடிக்கும் கருவியை இந்த தொடரின் நாயகி பாடினி குமார் கண்டுபிடிக்கிறார். அதன் விளைவாக அந்தக் கருவியை வைத்து சோதித்தால் காதலிப்பவர்களில் யார் மெய்யாக இருக்கிறார்கள், யார் பொய்யாக இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து விட இயலும். அப்படி இரண்டு காதல்களில் சோதிக்க போய் இரண்டு காதல்களும் தோல்வியடைகின்றன.
இந்நிலையில் சூரியனுக்கே லைட்டு அடிக்கிற விஷயம் மாதிரி காதல் மெஷினை கண்டுபிடித்த பாடினி குமாரையே காதலிக்கிறார் நாயகன் குரு லக்ஷ்மன். ஆனால் அவர் மீது பாடினி குமாருக்கு காதல் வரவில்லை.
ஆனாலும் அவரை விடாத ஹீரோ தன் காதலை நிரூபிக்கப் போராடுகிறார்.
அந்தக் காதல் மெய்யானதா, பொய்யானதா… அதில் பாடினி குமார் கண்டுபிடித்த ஹார்ட்டிலே பேட்டரியின் பங்கு என்ன என்று சொல்வதுதான் இந்த சீரீஸின் கதை.
ஒரு நவீனம் என்றால் அதில் நாயக நாயகி இருவருக்கும் தெளிவான நடிப்புக்கான போட்டி இருக்க வேண்டும். அது இந்த சீரிஸில் அழுத்தமாகவே இடம்பெற்று இருக்கிறது.
பாடினி குமார் எட்டடி பாய்ந்தால் குரு லக்ஷ்மன் 16 அடி பாய இவர் பதிலுக்கு 32 அடி பாய என்று நடிப்பில் இருவரும் போட்டி போட்டு ஜெயித்திருக்கிறார்கள். சினிமா பார்ப்பதை விடவும் சீரியஸாக இருக்கிறது இந்த சீரீஸ்.
லவ் மீட்டரால் குருவின் நண்பனின் காதல் பணால் ஆனாலும், அதன்பிறகு அவர் காமெடிக்கு உதவுவது கச்சிதம்.
குருவின் அப்பாவாக வருகிற ஜீவா மற்றும் சுமித்ரா தேவி, அனித் , யோகலெஷ்மி, இனியாள், பிரவீனா பிரின்ஸி, கலை, பவித்ரா, சீனு உள்ளிட்டோர் இன்ன பிற பாத்திரங்களை இட்டு நிரப்பி இருக்கிறார்கள்
ஒளிப்பதிவாளர் கூலி சௌந்தரராஜனுக்கு அதிகமான கூலியை கொடுத்து விட்டார்களோ என்று நினைக்கும் அளவிற்கு கதையில் ஒன்றி வேலை பார்த்திருக்கிறார்.
காதலுக்கேற்ற துள்ளலான இசையை எள்ளளவும் குறையாமல் இசைத்து வழங்கி இருக்கிறார் மைக்கேல் ஆகாஷ்.
தொய்வு ஏற்படாத ஓட்டத்துக்கு கட்டியம் கூறுகிறார் எடிட்டர் நிஜாம்.
எழுதி இயக்கியிருக்கும் சதாசிவம் செந்தில் ராஜன் எழுத்துகளில் நேர்த்தி தெரிகிறது. கதையாக சொல்லிப் பார்த்தால் காதலை எல்லாம் கண்டுபிடித்து விட கருவி கண்டுபிடிக்க முடியுமா என்றுதான் இருக்கும். ஆனால் அதை நம்மை நம்ப வைத்து விடுகிறது அவரது எழுத்து. இன்னும் கொஞ்சம் உணர்ச்சி கலந்து காட்சிகளை அமைத்திருந்தால் ஒரு வெற்றிகரமான திரைப்படத்துக்கான சாத்தியத்தை இந்த சீரிஸ் தொட்டு இருக்கும்.
ஆனாலும் ஒவ்வொரு எபிசோடும் பார்ப்பவர்களுக்கு அடுத்த எபிசோடு பார்க்கத் தூண்டும் விதமாகவே அமைந்திருப்பது இந்த தொடரின் வெற்றி.
ஜீ 5 தயாரித்திருக்கும் இந்த சீரிஸ் 16ஆம் தேதி முதல் வெளியாகிறது.
ஹார்ட்டிலே பேட்டரி – அடிச்சது காதல் லாட்டரி..!
– வேணுஜி