September 16, 2024
  • September 16, 2024
Breaking News
September 6, 2024

GOAT திரைப்பட விமர்சனம்

By 0 84 Views

Greatest Of All Time என்கிற அற்புதமான பதத்தை GOAT என்று மலிவான சிந்தனையில் சுருக்கியபோதே இந்த ஆடு, அறுப்புக்கு ரெடி ஆகிவிட்டது புரிந்து போனது.

(தவிர்க்க முடியாமல் இதில் நிறைய Spoilerகள் இருப்பதால் படம் பார்க்காதவர்கள் இந்தப் பதிவைப் படிப்பதைத் தவிர்க்கவும்)

30 வருடங்களுக்கு முன் வந்த இந்தியன் பட லைனைப் புளிக்க வைத்து… போன வருடம் ஜெயிலராக்கினார்கள். இப்போது அதே புளித்த மாவை வைத்துத் தன் பங்குக்கு செட் தோசை (2 விஜய்கள்) சுட்டு இருக்கிறார் விபி என்கிற COPY வெங்கட் பிரபு.

அவர் காமெடியாகப் படம் எடுக்கக் கூடியவர் என்பது தெரிந்த சங்கதி. ஆனால் எல்லா சீரியஸான விஷயங்களையும் இவ்வளவு காமெடிப் படுத்தி, காமெடியை சீரியஸ் படுத்தி நம்மைப் ‘படுத்தி’ எடுத்து இருப்பார் என்று நாம் என்ன… அவரே எதிர்பார்த்து இருக்க மாட்டார். 

விஜய் என்கிற மாஸ் ஹீரோவுக்கு எந்த ஆக்ஷன் கதையும் பொருந்தி வந்துவிடும். ஆனால் அவருடன் பிரபுதேவா, பிரசாந்த் போன்ற பூமர் அங்கிள்களை இணைத்து விட்டதால் (என்ன அவசியம், அதற்கு..?) விஜய்யும் அப்படியே நம் கண்களுக்குத் தெரிகிறார். அஜ்மல் என்கிற இன்னொரு ஹீரோவும் குறுக்கே நெடுக்கே வந்து போகிறார். ஒவ்வொருவரையும் குளோஸ் அப்பில் காட்டும்போது டெராபைட் டெரராக இருக்கிறது..!

இந்த நாலு பேரும் SATS என்கிற தீவிரவாத எதிர்ப்பு படையைச் சேர்ந்தவர்களாம். ஆனால், இவர்கள் இப்படி அதிரடி வேலையைச் செய்பவர்கள் என்பது அவர்கள் குடும்பத்துக்குக் கூடத் தெரியாது என்பதை நாம் நம்ப வேண்டுமாம்..!

மகன், மகளுக்கு ஒன்று என்றால் துடித்துத் துவண்டு கேலன் கேலனாகக் கண்ணீர் உகுக்கும் இந்தப் பிஞ்சு நெஞ்சுக்காரர்களை… முதல் நாள் குடியால் ஹேங் ஓவர் தீராத இந்த அமெச்சூர் குடிகாரர்களை நம்பித்தான் Anti Terrorists Squad செயல்படுகிறது என்பதுதான் நமக்கு விபி விட்டிருக்கும் முதல் சவால்..!

அப்படி ஒரு அபாயகரமான ஆபரேஷனுக்காக பாங்காக் செல்லும்போது கர்ப்பிணியான மனைவி சினேகாவையும், ஐந்து வயது மகனையும் அழைத்துக் கொண்டு ஃபேமிலி டூர் என்று அவர்களை நம்ப வைப்பதற்காகக் கூட்டிக்கொண்டு போகிறார் விஜய். 

அவர் உசுருக்கே உத்திரவாதம் இல்லை என்கிறபோது குடும்பத்தினரின் உயிருக்கு மினிமம் கேரன்டி கூட இல்லை என்கிற ‘பேஸிக் சென்ஸ்’ கூட அவருக்கு இல்லை என்பது ஒருபுறம் இருக்க…

Wait… Wait… கர்ப்பிணி மனைவியையும், அஞ்சு வயசு குழந்தையையும் கூட்டிக் கொண்டு யாராவது ஃபேமிலி டூராக பாங்காக், பட்டாயா போவார்களா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இது வெங்கட் பிரபுவின் ஃபேமிலி படம் என்பதையும், VCU (அதாங்க… வெங்கட்பிரபு சினிமா யுனிவர்ஸ்..) குறியீடுகள்தான் அவை என்பதையும் அவ்வப்போது நினைவில் வைத்துக் கொண்டு மேலே தொடருங்கள்…

இந்தச் சூழலில் ஐந்து வயது மகனை ஆளில்லாத காரிடாரில், “இங்கேயே இரு… தோ வந்துடறேன்… எங்கும் போயிடாதே..!” என்று உட்கார வைத்து விட்டு விஜய் போகிறார். முந்தைய சீனில்தான் சினேகாவும், “என் மகனுக்கு ஏதாவது ஒண்ணுன்னா என்னால தாங்க முடியாது..!” என்று பதறி இருக்க…

சினேகாவின் வயிற்றில் இருக்கும் கருவுக்குக் கூட தெரிந்துவிடும் அடுத்த காட்சியில் அவன் அங்கே இருக்க மாட்டான் என்று. இது இந்த சுறா புலிக்கு… ஸாரி … சூரப்புலிக்குத் தெரியவில்லை. அடுத்த காட்சியில் பிள்ளை கரிக்கட்டையாகக் கிடைக்க, ‘குய்யோ முறையோ…’ என்று அழுது புலம்பும்போது அவர்மீது நமக்கு எந்த விதமான பரிதாபமும், பதட்டமும் வரவில்லை. (விஜய் அற்புதமாக நடித்திருந்தும் கூட…)

சீரியஸ் அப்படி என்றால் காமெடி இப்படி…

இரவில் தண்ணி அடித்து விட்டு வரும் விஜய் அதிகாலையில் எழுந்து பட்டையைப் போட்டுக் கொண்டு மகனுக்கும் பட்டையைப் போட்டுவிட்டு, மணி ஆட்டிக்கொண்டே, “மருதமலை மாமணியே முருகையா…” பாடலைப் பாடுவது பட்டையைக் கிளப்பும் காமெடியாய் இருக்கும் என்று நினைத்த அளவுக்குக் கற்பனை வறட்சி.

இன்றைய 2k கிட்ஸ்களுக்கு அப்படி ஒரு பாடல் வந்தது கூடத் தெரியுமா என்பது தெரியவில்லை.

மேற்படி புத்திர சோகத்தினால் விஜய்யும், சினேகாவும் பேசிக்கொள்ளாமல் வருடங்கள் உருண்டு புரண்டு ஓடி, வயதளவிலும் விஜய் பூமர் ஆக, வேலை (!) விஷயமாக ரஷ்யா போன இடத்தில் தன் சாயலில் ஒரு இளைஞனைப் (அவர் இன்னொரு AI விஜய் என்பதை சொல்ல வேண்டாம்தானே..?) பார்க்கிறார். 

அவர்தான் இவர் மகன் என்பது முகத்தைப் பார்த்தே தெரியும் அளவில்… தலை முடியைக் கூட… சூப்பிப் போட்டுக் காய வைத்த பனங்கொட்டை போல் இருவருக்கும் ஆக்கி வைத்த அந்த ஹேர் டிரஸரர் மட்டும் கையில் கிடைத்தால் ஒரு ரூமில் அடைத்து ஒரு வாரம் முழுக்க சமீபத்தில் வெளியான ‘வாஸ்கோடகாமா ‘ படத்தைக் குடிக்கத் தண்ணீர் கூட கொடுக்காமல் பார்க்க வைக்கலாம்..!

நல்லவேளை… இருவரும் சந்திக்கும் அந்தக் காட்சியை ரஷ்யாவில் வைத்து எடுத்தார்கள். சென்னை மாநகரில் எடுத்திருந்தால் வெறி கொண்ட தெரு நாய்கள் அவர்களை விடாமல் துரத்தி இருக்கக்கூடும்.  

ஆனால், உண்மையில் படத்தில் வரும் நெகிழ்ச்சியான காட்சி, இருவரும் சந்தித்துக் கொள்ளும் அந்தக் காட்சிதான். அதில் விஜய் நடிப்பும் அமர்க்களமாக அமைந்தும் அதை முழுமையாக ரசிக்க விடாமல் செய்துவிட்டது இந்த மயிரு மேட்டர்.

(அட… டைரக்டர் ஹரி கூட இப்போதெல்லாம் தலை முடியைப் படிய வாரிக் கொண்டு வர்ராருங்க..!)

எந்த சஸ்பென்சும் வைக்காமல் இடைவேளை வருவதற்குள்ளேயே அந்த இளைய (தளபதி) விஜய்தான் வில்லன் என்பதைச் சொல்லிவிடுகிறார் விபி. அதோடு கதையும் முடிவுக்கு வந்து விடுவதுடன், படத்தின் கதையையும் முடித்து விடுகிறார் அவர்.

விஜய்யின் மகன்தான் வில்லன் என்றாக, அவரது பெயரும் சஞ்சய் என்று வைத்திருப்பது யார் பார்த்த வேலை..? அவரது இன்னொரு பெயர் ஜீவன் – நல்ல வேளை ஜேசன் இல்லை.

இடைவேளைக்குப்பின் சுத்தமாகக் கதை இல்லை என்பதால் யார் யாரையோ வில்லனாக்கிக் கொண்டிருக்கிறார் விபி. சினேகா கூட திடீரென்று வில்லியாகி விடுவாரோ என்று நமக்கே பயமாக இருக்கிறது.

இளைய தளபதியை வில்லனாக்கும் கபட வேலையைச் செய்யும் இன்டர்நேஷனல் கோர் வில்லன் யார் தெரியுமா..? மைக் டைசன் எல்லாம் இல்லை… நம்ம ‘மைக்’ மோகன்தான். கேட்பதற்கே சிரிப்பாக இருக்கிறதா… படத்தில் பாருங்கள் – இன்னும் சிரிக்கலாம்.

பூமர் விஜய் மீண்டும் Squad க்கு வர பர்மிஷன் கேட்க, மேலதிகாரி கொஞ்சம் யோசிக்கிறார். அதற்கு விஜய், “எனக்கு வயசு ஆயிடுச்சுன்னு யோசிக்கிறீங்களா..?” என்கிறார். அந்த மேலதிகாரி ஒய்.ஜி. மகேந்திரா – அவருக்கே 70 வயது இருக்கலாம். அவரே Squad டில் இருக்கும் போது இவர் இருக்கக் கூடாதா என்றெல்லாம் நாம் யோசிக்கப் போவதில்லை என்பதே முன்பே யோசித்து இப்படி ஒரு காட்சி வைக்கிறார் விபி.

ஏழு எட்டு விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளுக்கு (அதெல்லாம் கான்ட்ராக்ட் ஹாலிவுட் கம்பெனி புண்ணியம்…) நடுவே இந்த காமெடிக் கதையும் தன் போக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இளைய தளபதி(கள்) வரும் காட்சிகளில் எல்லாம் AI புண்ணியம் கட்டிக் கொள்ள… பட ஆரம்பத்தில் கேப்டன் ரூபத்தில் விஜய் வரும் காட்சியை மட்டும் யாரோ ஒரு AI அப்ரசண்டியிடம் கொடுத்து விட்டார்கள் போலிருக்கிறது. அந்தக் காட்சிகளை எல்லாம் பார்த்தால் கேப்டனின் ஆவி அந்த அப்ரசண்டியைச் சும்மா விடாது..!

தன்னையே நம்பி இருக்கும் தம்பி பிரேம்ஜி மற்றும் சென்னை 28 நிலைய வித்துவான்கள் அத்தனை பேருக்கும் ஏதோ ஒரு கேரக்டரைக் கொடுத்து விட வேண்டும் என்று விபி மூளையைக் கசக்கிக் கொண்டிருப்பதில் கொஞ்சமாவது திரைக்கதைக்குச் செலவிட்டிருக்கலாம். படம் நெடுக பத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களும் நம் அறிவுக்கு எட்டியவரையில் 3 ஆங்கிலப் படங்களும் நினைவில் வந்து போகின்றன.

தன்னால் முடிந்த அளவுக்கு யுவனும் மெனக்கட்டு பாடல்களில் தாலாட்டுகிறார். கிளைமாக்ஸ்-ல் ஐபிஎல் கிரிக்கெட் ஸ்டேடியமும் அதன் சவுண்ட் எபெக்ட்டுகளும் அவர் வேலையைப் பாதியாக குறைத்து விடுகிறது.

ஆனால், பாடல்களில் இசையின் சுணக்கத்தை மீறிய விஜய்யின் நடனங்கள் ரசிக்க வைத்திருக்கின்றன. 

இளைய (தளபதி) விஜய்யின் ரிமார்க்கபிள் நடிப்பும், இந்த நடனங்களும், சண்டைக் காட்சிகளும்தான் ஆறுதல். இவையே படத்தின் தொய்வுகளைப் பெரும்பாலும் சரிக்கட்டி இருக்கின்றன.

நல்லதும் பொல்லாததுமாக மூன்று மணி நேரம் இலக்கில்லாமல் ஓடும் படத்தில் 20 நிமிடம் அவர்களாகத் தூக்கி விட்டாலோ அல்லது நீங்களாகத் தூங்கி விட்டாலோ படத்தை சப்ஜாடாக ரசிக்க முடியும். 

எனிவே, விஜய்யின் Worst Of All Time படங்களான பீஸ்ட், வாரிசு போல உட்கார முடியாத படங்களையே ஓட்டிவிட்ட ரசிகர்களுக்கு இதை ஓட்ட முடியாதா என்ன..?

கோட் – ஓட்டுற வரையில் ஓட்..!

– வேணுஜி