November 22, 2024
  • November 22, 2024
Breaking News
November 19, 2021

கோஸ்ட் பஸ்டர்ஸ் ஆஃப்டர்லைஃப் (Ghostbusters Afterlife) ஹாலிவுட் திரை விமர்சனம்

By 0 882 Views
திடுக்கிட வைக்கும் ஆவிக் கதைகளில் திடீரென்று ஹாரர் காமெடி வகைக் கதைகள் வந்து நம்மை சிரிக்க வைத்தன அல்லவா..? அந்த ஐடியாவுக்கு இந்தப் படத்தின் மூலப்படத்தை முன்னோடியாகச் சொல்லலாம்.
 
1984-ம் வருடம்தான் இவான் ரெயிட்மனின் (Ivan Reitman) இயக்கத்தில் கோஸ்ட் பஸ்டர்ஸ் (Ghostbusters) வரிசையில் முதல் படம் வெளியானது. சிங்கம், புலியை எல்லாம் கிராபிக்ஸில் குழந்தைகளுக்குக் காட்டி அலுத்துப்போன வேளையில் அதன் அடுத்த கட்டமாக ஆவிகளையும், பேய்களையும் இப்படி சிஜிக்கு உள்ளாக்கி அவற்றையும் காமெடியாகச் சொன்னதில் குழந்தைகளுக்கு இந்தப்படம் ரொம்பவே பிடித்துப் போனது – பெரியவர்களுக்கும்தான்.
 
இந்தப்படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து 1989-ம் ஆண்டு அதே இவான் ரெயிட்மனின் இயக்கத்தில் கோஸ்ட் பஸ்டர்ஸ் 2 வெளியானது. பிறகு 2016-ல் மூன்றாவது படம் தயாராக இதோ இப்போது கோஸ்ட் பஸ்டர்ஸ் 2 வின் தொடர் கதையாக இந்த நான்காவது கோஸ்ட் பஸ்டர்ஸ் ஆஃப்டர்லைஃப் (Ghostbusters Afterlife) வெளியாகியுள்ளது. இந்தப்படத்தை மேற்படி இவான் ரெயிட்மனின் மகன் ஜேஸன் ரெயிட்மன் (Jason Reitman) இயக்கியிருக்கிறார்.
 
30 வருடங்களுக்கு முந்தைய கதையின் தொடர்ச்சியாக வருவதால் அதில் வந்த பாத்திரங்களின் மூன்றாம் தலைமுறை இதில் வருகிறது.
 
அந்த பாகத்தில் வந்த ஆவிகளை விரட்டிப் பிடிக்கும் பாத்திரத்தில் வந்த ஹெரால்ட் ரமீஸின் (Late Harold Ramis) பேரன் பேத்தியாக இதில் ஃபின் உல்ஃபார்டும், (Finn Wolfhard) மெக்கன்னா கிரேஸும் (McKenna Grace) வருகிறார்கள். இவர்களது அம்மாவாக கேரி கூன் (Carrie Coon)  வருகிறார். 
 
இவர்கள் மூவரும் ஒக்லஹோமாவில் உள்ள ஒரு சிறிய ஊரில் மறைந்த தாத்தாவின் வீட்டில் குடியேறுகிறார்கள். கோஸ்ட்பஸ்டரான  தாத்தா (Late Harold Ramis) அந்த வீட்டில் கண்ணூக்குத் தெரியாமல் ஆவியாக இருப்பதுடன் தன் தொழிலான பேய் விரட்டும் வேலையை இன்னும் விட முடியாதவராக இருந்து, தன் பேத்தியை அந்த வேலையில் ஈடுபட அமானுஷ்யமாகவே உதவுகிறார்.
 
அவர் வைத்திருக்கும் சாதனங்களில் பேயைப் பிடிக்கும்ம் பொறியும் ஒன்று. அதனைத் தவறுதலாக மெக்கன்னா கிரேஸ் திறந்து விட அந்தப் பேய் வெளியேறி தாத்தா பக்கத்து மலையில் அடைத்து வைத்திருக்கும் பிற பேய்களைத் திறந்து விட பேத்தியால் அந்தப் பேய்களை மீண்டும் சிறைப்பிடிக்க முடிந்ததா என்பதே கதை. அதன் தொடர்பான, சுவையான நிகழ்வுகளே முழுப்படம்.
 
பொறியிலிருந்து பேய் வெளிப்படும் காட்சி, பழைய தோழிற்சாலையில் அடைந்து கிடக்கும் இரும்பு தின்னிக் காமெடியைப் பேயை கேரி கூன் விரட்டிப் பிடிக்கும் சேஸிங், கிளமாக்ஸ் காட்சி என்று பரபரக்கும் காட்சிகள் படத்தை சுவார்ஸ்யப் படுத்துகின்றன. 
 
நம்மூர் கிரேஸி மோகனின் வசனங்களைப் போல அடுத்தடுத்து நகைச்சுவை ததும்ப எழுதப்பட்ட வசனங்கள் படத்தை சிரித்து சிரித்து ரசிக்க வைக்கின்றன. ஒரு வசனத்தை ரசிப்பதற்கு முன் அடுத்த வசனம் என வந்து காமெடி அதகளம்தான்.
 
தனக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியருடன் நட்பு ஏற்பட்டு அவருடன் அம்மா டின்னருக்கு செல்ல, மகள் கேரி கூன் “என்ன டேட்டிங்கா..?” என்பதெல்லாம் அவர்களின் கல்சருக்கு ஓகே.
 
எரிக் ஸ்டீல்பெர்க்கின் (Eric Steelberg) ஒளிப்பதிவும், ரான் சிமோன்ஸனின் (Ron Simonsen) இசையும் அமர்க்களப் படுத்தியிருக்கிறது.
 
சோனி பிக்சர்ஸ் (Sony Pictures) வெளியிட்டிருக்கும் இந்தப் படத்தை குழந்தைகள் ரசிப்பார்கள். அவர்களைக் கூட்டிப் போகும் சாக்கில் பெரியவர்களும் ரசிக்க முடியும்.