July 1, 2025
  • July 1, 2025
Breaking News
February 27, 2020

கல்தா திரைப்பட விமர்சனம்

By 0 1657 Views

கலைப் படைப்பின் முக்கிய நோக்கமே சமுதாய பிரச்சனைகளை சரியானபடி சொல்லி அதற்கான தீர்வுகளை தேடுவதுதான். ஆனால் இன்றைக்கு எடுக்கப்படும் படங்கள் அப்படி இருக்கின்றனவா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி.

கோடிகளைக் கொட்டி உச்ச நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்படும் படங்களில் சமுதாயப் பொறுப்புணர்வு உள்ள கருத்துக்களை சொல்கின்றனவா என்பதும் ஆச்சரியக்குறி தான்.

இந்நிலையில் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் சமுதாயத்தின் முக்கியமாக தமிழ்நாட்டு எல்லையோர கிராமங்களில் வசிப்பவர்கள் அன்றாடம் படும் அல்லல்களை சொல்கிறது அந்த வகையில் இந்த படம் பிரம்மாண்ட படங்களை விட தனித்து நிற்கிறது.

இன்றைக்கும் தமிழ்நாடு கேரள மாநில எல்லைப் பகுதிகளில் பொதுமக்கள் சந்தித்து வரும் பிரச்சனை கேரளாவில் இருந்து லாரிகளில் மாமிச மற்றும் மருத்துவ கழிவுகள் தமிழ்நாட்டு கிராமங்களுக்குள் கொண்டுவந்து கொட்டப்படுவதுதான்.

அந்த கழிவுகளில் இருந்து வீசும் துர்நாற்றம் வெளியேறும் கிருமிகளும் மக்களுக்கு பலவிதமான வியாதிகளை தருவதோடு சமயத்தில் அவர்களது உயிரை பறித்தும் விடுகின்றன.

அப்படி ஒரு எல்லையோர கிராமத்தில் பிரச்சினையை தான் இந்தப் படத்தில் இயக்குனர் ஹரி உத்ரா எடுத்துக் காட்டியிருக்கிறார்.

Antony, Dhivya

Antony, Dhivya

இறைச்சி மற்றும் மருத்துவக்கழிவுகளால் ஒரு கிராமமே கடும் நோய்த்தாக்குதலுக்கு உள்ளாக அதிலிருந்து அம்மக்களைப் பாதுகாக்க வேண்டிய  அதிகாரிகளே அந்த அநியாயத்துக்குத் துணை போக, அக்கிராமத்திலுள்ளோர் அதற்கெதிராகப் போராட, அவர்கள் வென்றார்களா… இல்லையா..? என்பதை இந்தப்படம் சொல்கிறது.

அறிமுக நாயகன் சிவநிஷாந்த், மேற்குத் தொடர்ச்சி மலை நாயகன் ஆண்டனி ஆகியோர் முன்னணி நாயகர்களாக வருகின்றனர். கோபம், வேகம், மனைவியுடனான காதல் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார் ஆண்டனி. முழுமையான கதாநாயகனாகும் தகுதி உள்ளவர் என்பதை சிவநிஷாந்த் இந்தப்படத்தில் காட்டியிருக்கிறார். நன்றாக நடனம் ஆடுகிறார். ஆக்ரோசமாகச் சண்டை போடுகிறார். 

ஆண்டனி ஜோடியாக வரும் திவ்யா, சிவநிஷாந்த் ஜோடியாக நடித்திருக்கும் அய்ரா ஆகிய இருவருமே தங்கள் வேடங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.

வில்லனாகி பிறகு நல்லவனாக மாறும் அப்புக்குட்டி, போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ராஜசிம்மன், ஹீரோவின் அப்பாவாக நடித்திருக்கும் கஜராஜ், வில்லனாக நடித்திருக்கும் டைகர் தங்கராஜ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களது பணியை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

ஜெய்கிரிஷின் இசையில் பாடல்கள்களை விட பின்னணி இசை தேவையான அளவு இருக்கிறது. பி.வாசுவின் ஒளிப்பதிவு அளவாக இருக்கிறது. 

சமுதாயத்துக்குத் தேவையான கருத்துகளைச் சொல்லி அதன் மூலம் அரசியல் பழகச் சொல்லியிருக்கும் இயக்குநர் சொல்ல வந்த விஷயத்தை அழுத்தமாகவும், தைரியமாகவும் சொல்லியிருக்கிறார்.

கல்தா – எச்சரிக்கை மணி..!