‘மலர் மூவி மேக்கர்ஸ்’ மற்றும் ‘ஐ கிரியேஷன்ஸ்’ இணைந்து வழங்கும் திரைப்படம் ‘கல்தா’. மருத்துவகழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் சமூக நோக்குடன் இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
படத்தின் துணைத்தலைப்பாக ‘அரசியல் பழகு’ என்று போடுகிறார்கள். அதனால், விழாவுக்கு வந்திருந்த யாரும் அரசியல் தொடாமல் பேச முடியவில்லை.
நடிகர் ராதாரவி பேசியது….
“இந்தப்படம் நன்றாக இருக்கும் என டிரெய்லரிலேயே தெரிகிறது. ஹீரோ அழகாக இருக்கிறார். தயாரிப்பாளர்களை அணுசரித்து செல்லுங்கள். நீங்கள் சிறப்பாக வரலாம். இசையமைப்பாளர் அற்புதமாக இசையமைத்துள்ளார். நான் படம் எடுத்து கடனாளியாக மாறினேன். இப்போது படம் எடுப்பவர்கள் மிகுந்த கவனமுடன் இருங்கள். ஹீரோயின் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் அழகாக தமிழ் பேசுகிறார். இந்தப்பட இயக்குநர் சமூக பிரச்சனையை மையமாக வைத்து படம் எடுத்துள்ளார். இந்தப்படம் நன்றாக ஓட வேண்டும்.
சகோதரர் லெனின் பாரதி இங்கு வந்துள்ளார் சின்ன படம் எடுத்து ஜெயிப்பது எப்படி என்று நிரூபித்துள்ளார். மக்கள் மாற வேண்டும். மக்கள் மாறாத வரை எதுவும் மாறாது. அதைப்புரிந்து கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் படும் கஷ்டம் யாருக்கும் தெரியாது. அவர்களுக்கும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது..!” என்றார்.
இயக்குநர் லெனின்பாரதி பேசுகையில்…
“கலை என்பது மக்களுக்கே என மாவோ சொல்லியுள்ளார். ஹீரோவைக் கொண்டாடும் சினிமாவில் இப்படி சமூக பிரச்சனை பேசிய குழுவுக்கு வாழ்த்துகள். அரசியல் என்பது மக்களை மிரட்டும் கருவி என்கிறார் லெனின். இப்போது அரசியலில் மதமும் கலந்து பயமுறுத்துகிறது. அரசு என்பது மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு அமைப்பு. இந்த அறிவு மக்களுக்கு இல்லையெனில் நாடு கெட்டுப்போகத்தான் செய்யும். அரசியலை மக்கள் பழகினால் மட்டுமே மாற்றம் வரும்..!” என்றார்.
இயக்குநர கே.பாக்யராஜ் பேசுகையில்…
“அரசியல் பழகு’ என டைட்டிலில் சொல்கிறார்கள். அது அவ்வளவு எளிதல்ல. எம் ஜி ஆர் இறந்த நேரம் என்னை பலரும் அரசியலில் இறங்க சொன்னார்கள். பலர் நீங்கள் ஜெ பக்கம் இணைந்திருக்க வேண்டும் இது கூடவா உங்களுக்கு தெரியாது. ஜெயிக்கும் பக்கம் இணைவதே அரசியல் என்றார்கள். சாதரணமானவர்களுக்கு அரசியல் வராது. ஆனால் அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும். இந்தபடத்தில் நல்ல கருத்துக்களை கூறியுள்ளார்கள். படத்தின் காட்சிகள் நன்றாக இருக்கிறது..!” என்றார்.
இத்தனை பேர் அரசியலைத் தொட்டுப் பேசியும் இயக்குநர் ஹரி உத்ரா பேசும்போது ‘கல்தா’வுக்கான விளக்கம் கொடுத்தார்.
“கல்தா” எனது மூன்றாவது திரைப்படம். மருத்துவ கழிவுகள் எப்படியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை மையமாக வைத்து தான் இந்தப்படம் செய்துள்ளோம். பல தயாரிப்பாளர்களிடம் சென்றது. எல்லோரும் கிண்டல் செய்தார்கள் ஆனால் தயாரிப்பாளர் ரகுபதி என்னை நம்பி தயாரித்துள்ளார். “மேற்கு தொடர்ச்சி மலை” ஆண்டனி மற்றும் சிவ நிஷாந்த் இதில் நாயகனா நடித்திருக்கிறார்கள். ஐரா, திவ்யா ஆகியோர் நாயகியா நடிச்சிருக்கிறார்கள். வைரமுத்து சார் இதில் பாடல்கள் எழுதியிருக்கார். ஜெய் கிரிஷ் இசையமைச்சிருக்கார்.
கல்தாங்கிறது வழக்கமா நாம் வாழ்க்கையில் கையாளும் சொல்லாடல் தான். அரசியல்வாதிகள் தொடர்ச்சியா மக்களுக்கு கல்தா கொடுத்திட்டு இருக்காங்க. அதை அடிப்படையா கொண்டுதான் இந்த டைட்டில் வைத்தோம். அரசியல் பழகு அப்படிங்கிறது தான் இந்தப்படம் சொல்லும் கருத்து..!” என்றார்.
அப்படியானால் ‘கல்தா’ தலைப்பைத் தூக்கிட்டு அரசியல் பழகுன்னே வச்சிருக்கலாம்..!