வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மருத்துவக் கழிவுகளும், மாமிச கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது
ஆனால், இது பற்றிய எந்த ஒரு விழிப்புணர்வும் மக்களிடம் இல்லாததோடு, இது குறித்து வெளி உலகிற்கும் தெரியாமல் போகிறது.
அதே சமயம், இதற்கு பின்னால் இருக்கும் அரசியலையும், அதற்கு யாரெல்லாம காரணமாக இருக்கிறார்கள், என்பதை வெளி உலகத்திற்கு காட்டும் நோக்கில் உருவாகியிருக்கிறது ‘கல்தா’.
‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தில் ஹீரோவாக நடித்த ஆண்டனி ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில், மற்றொரு ஹீரோவாக சிவ நிஷாந்த் நடித்திருக்கிறார்.
அய்ரா, திவ்யா ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் அப்புகுட்டி, கஜராஜ், ராஜசிம்மன், டைகர் தங்கதுரை, எஸ்.எம்.டி.கருணாநிதி, சுரேஷ், காக்கா முட்டை சசி, முத்து விரா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
தெரு நாய்கள்’ படம் மூலம் விவசாய மற்றும் விவசாயிகள் பிரச்சினையை பேசிய செ.ஹரி உத்ரா இயக்கியிருக்கும் இப்படத்தை மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் சார்பில் மலர்கொடு ரகுபதி, செ.ஹரி உத்ரா, ரா.உஷா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
பி.வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கே.ஜெய் கிரிஷ் இசையமைத்திருக்கிறார். வைரமுத்து, கவிஞர் வித்யாசாகர் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.
மருத்துவக் கழிவுகளால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி பேசியிருக்கும் இப்படத்தில், அதற்கான தீர்வு குறித்தும் சொல்லியிருக்கிறார்களாம்.
அது படத்தின் ஹைலைட்டாக இருப்பதோடு, படத்தின் வசனங்கள் மூலம் தமிழக அரசியலில் பெரிய அதிர்வலை ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
படம் குறித்து பேசிய இயக்குநர் ஹரி உத்ரா, “மருத்துவக் கழிவுகளை அத்துமீறி கொட்டுவது தமிழகத்தில் நடக்கும் உண்மை சம்பவங்கள் தான் என்றாலும், நான் எழுதிய கதை கற்பனை தான். இந்த படத்தில் எந்த ஒரு ஊரையோ நான் குறிப்பிடவில்லை.
அதே சமயம், கற்பனையாக ஒரு கிராமத்தை உருவாக்கி இருக்கிறேன். அதில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால், அந்த மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அதை அரசியல்வாதிகள் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கிறார்கள், அதன் பின்னணி குறித்து தான் சொல்லியிருக்கிறோம்.
ஒரு சில தவறான அரசியல்வாதிகளால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. அதேபோல், நம்மை சுற்றி நடப்பவை எல்லாமே அரசியலாக இருக்கும் போது, நாமும் அரசியலில் ஈடுபடுவதில் தவறில்லை என்பதையும் சொல்லியிருக்கிறேன்.
அதற்காக தான் படத்தின் கேப்ஷனாக ‘அரசியல் பழகு’ என்றும் சொல்லியிருக்கிறேன்.
விழிப்புணர்வு மற்றும் அரசியல் படமாக உருவாகியிருந்தாலும், காதல், காமெடி என்று மறுபக்கம் கமர்ஷியல் விஷயங்களையும் வைத்திருக்கிறேன்..” என்றார்.
வாங்க பழகலாம்..!