’ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்பை பார்த்ததும் நல்ல சரக்குள்ள படம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது இல்லையா? உள்ளூர் சரக்கு அடிப்பவர்கள் கூட ஃபாரின் சரக்கு என்றால் நாக்கை சப்பு கொட்டிக் கொண்டு வந்து விடுவார்கள். அந்த ஃபாரின் சரக்கை எப்படி கடத்துகிறார்கள் என்ற கதை போலிருக்கிறது என்றுதான் தலைப்பை பார்த்ததும் நினைக்க தோன்றுகிறது.
ஆனால் படத்தில் மருந்துக்கு கூட சரக்கு வாசனை இல்லை. இவர்கள்’ பாரின் சரக்கு ‘ என்று சொல்வது கொடுமையான குற்றவாளியாக தேடப்படும் ஒருவரை மாநிலம் விட்டு மாநிலம் கடத்தி பாதுகாப்பாக வைக்க… அந்த குற்றவாளியின் சங்கேத குறியீட்டுப் பெயர்தான் ‘ ஃபாரின் சரக்கு’.
குஜராத் அமைச்சர் ஒருவரின் மகன் கொடுஞ்செயல்களை புரிந்து விட்டு ரகசியமாக தமிழகத்துக்கு வர, தமிழக அமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டின் மூலம் அவரை 10 நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு வில்லன் உசேன் தலைமையிலான ரவுடி கும்பலிடம் ஒப்படைக்கப்படுகிறது.
அதே சமயம், குஜராத் அமைச்சரின் மகனை கண்டுபிடிப்பதில் சில குழுக்கள் ஈடுபடுகிறார்கள். இறுதியில் அவரை கண்டுபிடித்தார்களா? இல்லையா?, அவர்கள் யார்? குஜராத் அமைச்சரின் மகன் எதற்காக தமிழகத்தில் ரகசியமாக தங்க வைக்கப்படுகிறார்? ஆகிய கேள்விகளுக்கான பதில்கள் தருகிறது ‘ஃபாரின் சரக்கு’
அறிமுக இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புச்சாமி எழுதி இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் அறிமுக நடிகர்கள் கோபிநாத், சுந்தர், உசேன், சுரேந்தர் சுந்தரபாண்டியன், அஃப்ரினா, ஹரினி, இலக்கியா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் கோபிநாத், சுந்தர் ஆகியோருக்கு முதல் படம் என்றாலும் நியாயமாக நடித்திருக்கிறார்கள். என்ன ஒன்று… எல்லோர் வசன உச்சரிப்பும் மேடை நாடக பாணியில் இருக்கிறது.
இருந்தாலும நடிகர், நடிகைகள், இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும், படத்தின் கதைக்களமும், அதை படமாக்கிய விதமும் புதுமையாக இருக்கிறது.
மகாலிங்கம் என்ற கதாப்பாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் உசேன், கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு நடிப்பிலும் கவனிக்க வைக்கிறார். சுரேந்தர் சுந்தரபாண்டியனும் அளவாக நடித்து கவனம் பெறுகிறார்.
அஃப்ரினா, ஹரினி, இலக்கியா ஆகியோர் கதாநாயகிகளாக அல்லாமல் கதையின் நாயகிகளாக இயல்பாக நடித்திருப்பதோடு, ஆக்ஷன் காட்சிகளிலும் அதிரடி காட்டியிருக்கிறார்கள்.
பிரவீன் ராஜ் இசையில் பாடல்கள் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. வசனம் குறைவான படத்தில் பின்னணி இசையே பல இடங்களில் வசனமாக அமைந்துள்ளது.
ஒளிப்பதிவாளர் சிவநாத் ராஜனின் கேமரா இந்த பட்ஜெட் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. இரவு காட்சிகளில் அவர் திறமை வெளிச்சம் போட்டுக் கொள்கிறது.
முழுக்க முழுக்க புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த படத்தில் பட்ஜெட் காரணமாக சிறு குறைகள் இருக்கவே செய்கின்றன. நல்ல பட்ஜெட்டும் பெரிய நடிகர்களும் அமையும் பட்சத்தில் இயக்குனர் நிறைய சாதிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
‘ஃபாரின் சரக்கு’ – இதற்கு சைட் டிஷ் தேவையில்லை..!