இதுவும் கிரைம் திரில்லர் வகைப் படம்தான். ஆனால் நாகரீகம் என்பது எல்லை மீறிப் போகும்போது என்ன ஆகும் என்பதை ஒரு எச்சரிக்கை மணியாக ஒலிக்க விட்டுச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா.
கிரைம் திரில்லர் வகைப் படங்களுக்கே உரிய இலக்கணமாக ஒரு கட்டுமானம் நடக்கும் இடத்தில் இளம்பெண்ணின் உடல் ஒன்று முகம் சிதைக்கப்பட்டு கண்டுபிடிக்கப்படுகிறது.
விசாரணையில் அது அபி நட்சத்திராவின் உடல்தான் என்று உறுதி ஆகிறது. குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் தன் தாயுடன் வசித்து வருகிறார் அபி நட்சத்திரா.
பல வீடுகளில் வீட்டு வேலை செய்து மகளை கான்வென்டில் படிக்க வைக்கிறார் அவரது தாய். அவருக்கு உடல்நிலை சரியில்லாத நேரங்களில் அபி நட்சத்திரா அருகில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளுக்குச் சென்று வேலை செய்து வருகிறார்.
அந்தக் குடியிருப்பில் இருந்து விசாரணையை தொடங்குகிறார் அந்த கேசை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நாகராஜ். அவரது டீமில் அவருக்கு பக்கபலமாக இருக்கிறார் ரச்சிதா மகாலட்சுமி. இன்னொரு வகையில் பார்த்தால் ரச்சிதாவுக்கு ராஜ்குமார் நாகராஜ் மேலதிகாரி மட்டுமல்லாமல் அக்காவின் கணவராகவும் இருக்கிறார்.
ஆனால் அக்காவின் குழந்தை அசந்தர்ப்பமாக இறக்க, அதற்கு ராஜ்குமார் நாகராஜ்தான் காரணம் என்று சொல்லி அவருடன் வாழாமல் இருக்கிறார் ரச்சிதாவின் அக்கா. அதில் மன அழுத்தத்துடன் இருக்கிறார் ராஜ்குமார்.
விசாரணை நடைபெறும் போது பல்வேறு விதமான நெருக்கடிகள் ஏற்பட ராஜ்குமார் நாகராஜை அந்த வழக்கிலிருந்து விடுவித்து அதற்கு பதிலாக ரச்சிதாவிடம் ஒப்படைக்கிறார் போலீஸ் கமிஷனர்.
ரச்சிதா குற்றவாளிகளை கண்டுபிடித்தாரா, அபி நட்சத்திராவுக்கு உண்மையிலேயே நியாயம் கிடைத்ததா, ராஜ்குமார் நாகராஜின் இல்வாழ்க்கை என்ன ஆனது என்று எதிர் நிற்கும் கேள்விகளுக்கெல்லாம் விடையாக அமைகிறது மீதிப் படம்.
கதாநாயகிக்கு போலீஸ் வேடம் என்றாலே சிக்கென்று காக்கிச் சட்டை அணிவித்து கையையும், காலையும் தூக்கிச் சண்டை போடுமாறு அமைத்து விடுவார்கள். ஆனால் அப்படியெல்லாம் ரச்சிதாவைக் கொடுமைப் படுத்தாமல், கண்ணியமாக பயன்படுத்தியதற்காக இயக்குனரைப் பாராட்டலாம்.
ரச்சிதா சிறப்பாக நடித்தாரா என்றெல்லாம் யோசிக்க முடியாத அளவில் அவர் வரும் காட்சிகள் எல்லாம் திரை நிறைந்து இருக்கிறது. அப்படி ஒரு அங்க லட்சணம் அவருக்கு.
இளம் பெண்ணாக நடித்திருக்கும் அபி நட்சத்திரா, அப்பாவித்தனத்துடன், பகட்டான வாழ்க்கைக்கு ஏங்கும் ஏழைப் பெண் பாத்திரத்தில் மிகச் சரியாகப் பொருந்தி இருக்கிறார்.
இன்ஸ்பெக்டராக வரும் ராஜ்குமார் நாகராஜுக்கு நல்ல உடற்கட்டு. சொந்த வாழ்க்கை சோகத்துடனும் வழக்கு தரும் அழுத்தத்துடனும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். அதற்காக உண்மையிலேயே தவறு செய்த மனைவியை ஒரு வார்த்தை கூட எதிர்த்து கேட்க மாட்டாரா..?
நாகரிக மோகத்தில் திளைக்கும் பெண்ணாக வரும் அம்ரிதா ஹல்டர், நவ நாகரிக உடைகளில் வந்து விருந்தளிக்கிறார். ஆனால் அதுதான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைகிறது.
ஒரு கட்டத்தில் தன் தவறை உணர்ந்து அவர் வருந்துவதாக வருவது பெண்ணியப் பார்வையில் சரியானதாகத் தோன்றவில்லை.
நாகரீகமாக ஆடை அணிவதால் மட்டுமே ஒரு தவறு நடந்து விடும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
வில்லனாக வரும் சிவம் தேவ் மீது நமக்கு ஆரம்பத்தில் எந்த சந்தேகமும் வராதது அந்த பாத்திரப்படைப்பின் வெற்றி.
ஆனந்த் நாக்தான் ஏதோ பிரச்சினை செய்து விட்டார் என்று நினைத்தால் அவர் கடைசியில் நல்லவராக இருக்கிறார்.
அபி நட்சத்திராவின் அம்மாவாக நடித்திருக்கும் சரிதா, ராஜ்குமார் நாகராஜின் மனைவியாக நடித்திருக்கும் ராஜேஸ்வரி ராஜி உள்ளிட்டவர்கள் அந்தந்த வேடங்களுக்குப் பொருந்தி இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் டிஜே பாலா, இசையமைப்பாளர் எம்.எஸ்.ராஜ்பிரதாப், படத்தொகுப்பாளர் ராம்கோபி மூவரும் கைகோர்த்து இந்த திரில்லரைத் தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள்.
யூகிக்க முடியாதபடி பரபரப்பாக செல்லும் திரைக்கதை படத்துக்கு பலம்.
ஆனால் போதை மருந்து கைமாற்றி விடுபவர்கள்தான் குடிதண்ணீர் கேன் சப்ளை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது போல் காட்டியிருப்பது அனாவசியமான பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அபிநட்சத்திராவைக் கொன்றவர்கள் கடைசியில் பிடிபட அதற்குப்பின் இன்னொரு டிவிஸ்ட் வைத்திருப்பதில் அந்த சிறிய பெண் என்ன பாடுபட்டு இருப்பார் என்று பதை பதைக்க வைத்து விடுகிறது.
எக்ஸ்ட்ரீம் – எல்லை மீறுவது எதிலும் ஆபத்து..!
– வேணுஜி