தலைப்பைப் பார்த்ததும் ஏதோ மன்மத லீலை போன்ற காதல் மன்னன் ஒருவரின் கதையை சொல்லப் போகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.
ஆனால் பாவம் அப்பாவியான அசோக் செல்வன் அவந்திகா மிஸ்ராவைக் காதலித்து எப்படி அவதி மிஸ்ராவாக ஆகிறார் என்பதுதான் லைன்.
அதற்கு முன் அங்கங்கே பருவ வயதில் அவர் செய்த சின்னக் காதலை போகிற போக்கில் சொல்லிக்கொண்டு போகிறார்கள்.
காதலிக்கும் அசோக் செல்வனை அவந்திகா மிஸ்ரா ஒரு தவறான புரிதல் மூலம் பிரிந்து விடுகிறார். காதலியுடன் மீண்டும் ஒன்று சேர அசோக் செல்வன் முயற்சிக்கும் போதெல்லாம் எதாவது ஒரு பிரச்சனை முளைத்து அவர்களை இணைய விடாமல் தடுத்து விடுகிறது. கடைசியில் காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை நகைச்சுவையாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் பாலாஜி கேசவன்.
அசோக் செல்வனுக்கு, காதல் காட்சிகளைத் தாண்டி காமெடியிலும் கலக்கும் வேடம். அவரும் தன்னால் இயன்றதைச் செய்திருக்கிறார்.
வழக்கமான காதல் நாயகியாக வந்தாலும் அவந்திகா மிஸ்ராவின் அளவான உடம்பும் அதற்காக அளவெடுத்த உடைகளும் அவரது கிளாமரைத் தூக்கிப் பிடிக்கின்றன. ஆனால் ஒரு மொக்கை விஷயத்துக்காக காதலனைப் பிரிவது வலுவில்லாத பாத்திரமாக அவரை ஆக்கி விடுகிறது.
அதுவும் ஒருவனைக் காதலித்து வயிற்றில் குழந்தையையும் வாங்கிக் கொண்ட நிலையில் அவனை வேண்டாம் என்று துரத்தி விட்டால் அவன் ஜாலியாக ‘ எஸ் ‘ ஆகிவிட விட மாட்டானா..? ஏதோ அசோக் செல்வன் நல்லவராக இருக்கவே பிரச்சினை இல்லாமல் போயிற்று.
அசோக்கின் அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசி வழக்கம் போலவே அளவுக்கு அதிகமாகப் பேசினாலும் அங்கங்கே ரசிக்க வைக்கிறார்.
அப்பாவாக அழகம்பெருமாள், மாமாவாக படவா கோபி, டாக்டராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டவர்கள் அனுபவ நடிப்பால் அளவாகச் செய்திருக்கிறார்கள்.
நிவாஸ் கே.பிரசன்னாவின் இசை பாடல்களுக்குக் கை கொடுக்கிறது. ஆனால் பின்னணி இசை நகைச்சுவைக் காட்சிகளில் மேடை நாடக அளவுக்கு போய் இருப்பதுதான் இம்சையாக இருக்கிறது.
கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு பார்வைக்குக் குளிர்ச்சி தந்திருக்கிறது.
பழைய காதல் ரசத்தை புதிய பாட்டிலில் பிடித்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் என்றாலும் ஃபேமிலி என்டர்டெய்னராக கொடுத்திருப்பதால் குடும்பத்துடன் பார்க்கலாம்.
சீரியஸாகப் படம் பார்க்கப் போகாமல் சிரித்து விட்டு வரலாம்..!