November 22, 2024
  • November 22, 2024
Breaking News
December 28, 2022

டிரைவர் ஜமுனா திரைப்பட விமர்சனம்

By 0 454 Views

பெண்கள் விண்வெளிக்கே செல்லும் இந்தக் காலக் கட்டத்தில் ஒரு பெண் டாக்ஸி ஓட்டும் இந்தக் கதை புதுமையானது இல்லைதான். ஆனால் அப்படி டாக்ஸி ஓட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்வில் அவர் சந்தித்தது என்ன, சாதித்தது என்ன என்பதைப் புதுமையாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் கின்ஸ்லின்.

பக்கவாதம் வந்த அம்மாவுடன் வாழும் ஐஸ்வர்யா ராஜேஷ், தன் இறந்து போன அப்பா செய்த வேலையான டாக்ஸி ஓட்டுனராக இருக்கிறார்.

இன்னொரு பக்கம் மூவர் கொண்ட ஒரு கூலிப்படை பலரைக் கொன்று கொண்டிருக்க, ஒரு மாஜி எம்.எல்.ஏ நரேனைக் கொல்ல அந்தக் கூலிப் படையை தற்போதைய எம்.எல்.ஏ அமர்த்த அந்தப் படை ஐஸ்வர்யா ராஜேஷ் டாக்சியில் பயணமாகிறார்கள்.

ஐஜி ஒருவரின் மகனையும், மருமகளையும் அதே கூலிப்படை கொன்றிருக்க, அந்தப் படையை போலீசும் தொடர்ந்து வருகிறார்கள். அதைத் தெரிந்து கொண்ட கூலிப் படையினர் ஐஸ்வர்யா ராஜேஷை பகடைக் காயாக பயன்படுத்த, வீட்டிலோ அவரது அம்மாவின் நிலை மோசமாக, இதிலிருந்து ஐஸ் தப்பினாரா என்பதுதான் மீதிக் கதை.

ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை எத்தனையோ பாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்திருக்கும் டிரைவர் பாத்திரம் சவாலானது. கிட்டத்தட்ட முக்கால்வாசி படத்துக்கு அவர் காரை ஓட்டிக் கொண்டு நடித்திருப்பது அசாதாரணமானது. முழுக்க கதையைத் தாங்கிச் செல்கிறார் ஐஸ். 

படத்தில் பாடல்களோ, காதல் காட்சிகளோ ஏன் ஒரு ஹீரோவோ கூட இல்லை. ஆனாலும் அலுக்கவில்லை என்பது ஆகப் பெரிய விஷயம்.

நல்லவராக நாம் நினைத்துக் கொண்டிருந்த அரசியல்வாதி ஆடுகளம் நரேன் திடீரென்று வில்லனாக உருவெடுப்பது எதிர்பாராத திருப்பம்.

வழக்கமாக படங்களில் துடிப்பான அழகான அம்மாவாக நாம் பார்த்திருக்கும் ஸ்ரீ ரஞ்சனி இதில் பக்கவாதம் வந்த தாயாக பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கிறது. அவரும் அருமையாக நடித்த தன் பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை பாத்திரம் மனதில் நிற்கிறது.

கூலிப்படையினராக வரும் மூவரும் அந்தப் பாத்திரங்களாகவே மாறிவிட்டது போல் ஒரு பிரமை. அவர்களைப் பார்க்கும் போதே நமக்கு பதறுகிறது.

காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை பயணப்படும் இந்த கதையில் அந்த பயணத்தின் ஊடே நாமும் பயணிப்பது வித்தியாசமான அனுபவம். அதுவும் பதறிக் கொண்டே பயணிக்கிறோம்.

படத்தின் கடைசி 20 நிமிட காட்சிகள் யூகிக்க முடியாதவாறு மாறி திகைப்பை ஏற்படுத்துகிறது.

கோகுல் பினாயின் ஒலிப்பதிவு காருக்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி ஓடி ஓடி பயணப்பட்டு இருக்கிறது. கடைசியில் கார் விபத்துக்குள்ளாகும் காட்சியை படமாகி இருப்பது அற்புதம்.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் இல்லை என்றாலும் பின்னணி இசையில் பதைபதைப்பை உண்டு பண்ணி இருக்கிறார்.

இதுதான் முடிவு என்று ஐஸ் முடிவு செய்துவிட்ட பிறகு இடையில் வரும் காட்சிகள், பில்ட் அப்கள் எல்லாம் ஏன் என்ற லாஜிக் எழாமல் இல்லை.

ஆனாலும் அதையெல்லாம் யோசிக்க விடாமல் படத்தை பரபரப்புடன் இயக்கியிருப்பது இயக்குனரின் திறமைக்கு சான்று.

டிரைவர் ஜமுனா – த்ரில் ரைடு..!