கொரோனா அபாயத்தில் எட்டு மாதங்கள் மூடிக் கிடந்தபின் தீபாவளியன்று திறக்கப்பட்ட திரையரங்குகளில் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்க, சந்தானம் நடிப்பில் ‘பிஸ்கோத்’ வெளியாகி வெற்றி பெற்று இருக்கிறது.
இந்த மீட்சி பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன் கூறியது…
கொரோனாவால் சினிமாவுக்கு மட்டும் தான் 100 சதவிகித நஷ்டம். ஏனென்றால், கோடை கொண்டாட்டமாக ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தோம். ஆனால், மார்ச் 22 ஆம் தேதியே ஊரடங்கை அறிவித்து விட்டார்கள்.
ஒரு படத்தை எடுத்துவிட்டு 8 மாதங்களாக வெளியிட முடியாமல் இருந்தால் எந்தளவு வலியும் வேதனையும் இருக்கும் என்று எங்களுக்குதான் தெரியும்.
ஊரடங்கு தளர்வை அரசாங்கம் அறிவித்ததும் இப்படத்தை ஓடிடி-யில் வெளியிடலாமா? அல்லது திரையரங்கில் வெளியிடலாமா? என்று ஆலோசித்தோம்.
திரையரங்கில் வெளியிட்டால் ரசிகர்கள் வருவார்களா.. மாட்டார்களா என்ற சந்தேகம் இருந்தது. பின் தைரியத்துடன் வெளியிட முடிவு செய்தோம்.
சந்தானம் இல்லையென்றால் இந்த படம் வெளியாக வாய்ப்பே இல்லை. இன்னும் 2 மணி நேரம்தான் இருக்கிறது. ரூ.50 லட்சம் இருந்தால் தான் இப்படத்தை வெளியிட முடியும். ஏதாவது உதவி செய்யுங்கள் என்று சந்தானம் வீட்டிற்கு சென்று கேட்டேன். அவர் உடனே உதவி செய்தார்..
தமிழகம் முழுவதும் 400 திரையரங்குகளில் வெளியிட்டுள்ளோம். இதற்கு சந்தானம், ரவி ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தார், தேனப்பன் என்று பலரும் உழைத்திருக்கிறார்கள்.
இப்படத்தில் நடித்த ‘சௌகார்’ ஜானகி தற்போது பெங்களூருவில் இருக்கிறார். அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார். அவருக்கு இது 400வது படம்.
இப்படத்தில் நடித்த மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சொந்த ஊரில் இருப்பதால் அவர்களை அழைக்க முடியவில்லை.
இந்த கொரோனாவால் 9 மாதங்களுக்கான வட்டி மட்டுமே 3 கோடி வந்துவிட்டது. பைனான்சியர் ராம் பிரசாத் அடுத்த படத்தில் கொடுத்தால் போதும் என்று கூறிவிட்டார். இதுபோன்ற உதவியை செய்தாலே போதும்..!
இந்த வலியை பிஸ்கோத் வெற்றி மறக்கச் செய்யட்டும்..!