தலைப்பைப் பார்த்துவிட்டு இது ஏதோ ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் டைனோசர் படம் போல இருக்கிறது என்று குடும்பத்தோடு போக திட்டமிட்டு விடாதீர்கள்.
இந்த டைனோசர்ஸின் விஷயமே வேறு. Die No Sirs என்று இதற்கு விளக்கமும் வருகிறது படத்தில். அதாவது “நான் சாக விரும்பவில்லை சார்வாள் …” என்பதுதான் தலைப்பின் பொருள்.
அது மட்டும் இல்லாமல் ஊரையே நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கிற தாதாவானாலும் அவருக்குத் தலை வணங்காத ஒரு சுள்ளான் அவர் கண்களுக்கு டைனோசராக தெரியக்கூடும் என்பதுதான் படத்தின் கரு.
வடசென்னைதான் கதையின் களம். மானெக்ஷா, கவின் ஜெய்பாபு இரண்டு தாதாக்களும் சென்னையை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்க அதில் கவினின் ஆளை மானெக்ஷாவின் அல்லக்கைகள் போட்டுத் தள்ளி விடுகிறார்கள். அவர்கள் உயிருக்கு கவினால் ஆபத்து வரக்கூடும் என்பதால் அவர்கள் அத்தனை பேரையும் ஜெயிலுக்கு அனுப்பி விடுகிறார் மானக்ஷா.
அந்த கொலையாளிகளுக்குள் இருக்கும் முக்கிய நபரான மாறா, தன்னுடைய உயிர் நண்பன் என்பதோடு சமீபத்தில்தான் திருமணம் ஆனவன் என்பதாலும் அவனுக்கு பதிலாக சிறைக்குப் போகிறார் ரிஷி.
இந்த விஷயம் அரசல் புரசலாக கவினுக்குத் தெரிய வர, வெளியே இருக்கும் அந்த நபர் யார் என்று மாறாவைக் கண்டுபிடித்துப் போட்டுத் தள்ளி விடுகிறார்.
இந்தக் கதைக்குள் எந்த இடத்திலும் இதுவரை நாயகன் உதய் கார்த்திக் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம். விஷயம் தெரியாமல் மாறாவின் கொலைக்குக் காரணமாகிறார் உதய்.
ரிஷியின் தியாகமும், நட்பும் புரிவதுடன் அவர்களுக்குப் பின்னால் இருக்கும் தாதாக்களின் சுயநலமும் புரிந்து அடுத்து உதய் என்ன செய்கிறார் என்பதுதான் மீதிக் கதை.
வடசென்னை என்றாலே ரத்தமும் ரவுடியிசமும்தான் என்று இருக்க இந்தப் படத்தில் சற்று வித்தியாசம் காட்ட எண்ணி படம் முழுவதையும் ஜாலி மூடில் கொண்டு சென்று இருக்கிறார் இயக்குனர் எம்.ஆர்.மாதவன். அது சரியாக ஒர்க் அவுட்டும் ஆகி இருக்கிறது.
முதல் பாதிப் படம் கடந்ததே தெரியவில்லை காட்சிகளிலும் வசனத்திலும் இயல்பிலும் அத்தனை விறுவிறுப்பு.
சிறிய உருவம் என்றாலும் நாயகன் உதய் கார்த்திக் மனதைக் கவர்கிறார். “என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்…” என்கிற ரீதியாக தலைக்கு கத்தியே வந்தாலும் வன்முறையின் பக்கம் போக மாட்டேன் என்கிற பிடிவாதத்துடன் இருக்கும் அவர் வருகிற காட்சி எல்லாம் அதிரி புதிரியாக இருக்கிறது.
கிழவிகளிடம் அவர் செய்யும் அலப்பறையும் அவரிடம் தப்பி வந்த கிழவி இன்னொரு கிழவியிடம் “அந்த பக்கம் போகாதே… ஒருத்தன் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கிறான்…” என்று சொல்ல “யார் நம்ம விஜய் சேதுபதிதானே..?” என்று அந்தக் கிழவி வெட்கப்பட்டு பதில் சொல்வதும், “அவர் ஆம்பளைகளுக்குதான் முத்தம் கொடுப்பார். இவன் எல்லாருக்கும் கொடுக்குறான்…” என்று இந்தக் கிழவி பதில் சொல்வதும் அக்மார்க் அதகளம்.
மோதலைத் தவிர்த்தாலும் காதலில் களை கட்டுகிறார் உதய். ஆனால் கிணற்றுக்குள் மாட்டிக்கொண்ட நபர்களின் மேல் அவர் சிறுநீர் கழிப்பதாக வரும் காட்சி மட்டும் “உவ்வே..!”
அவரது காதலியாக வரும் சாய் பிரியா தேவாவுக்குக் காதலிக்கத் தோதான களையான முகம்.
முழுக்க நட்பிலும், தியாகத்திலும் உருவாக்கப்பட்டிருக்கும் ரிஷியின் பாத்திரம் மனம் கவர்கிறது.
மாறாவின் மரணம் நிச்சயிக்கப்படும் இடமும் அதற்கான கவுண்ட் டவுனும் அற்புதமான நிமிடங்கள். அந்த ட்ரீட்மென்ட்டுக்காகவே இயக்குனர் மாதவனைப் பாராட்டலாம்.
அந்த அல்லா, கோயிந்தா, அல்லேலூயா காமெடி அள்ளுகிறது..!
இரண்டு தாதாக்களும், ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்களாகத் தெரியவில்லை. மானக்ஷாவின் பார்வையே பயமுறுத்துகிறது.
உதய்யின் அம்மாவாக வரும் ஜானகி உள்ளிட்டு துண்டு துக்கடா பாத்திரங்களும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஜோன்ஸ் வி.ஆனந்தின் ஒளிப்பதிவு அழுக்கில் அழகியல் தேடியிருக்கிறது. போபோ சசியின் இசை அப்பட்டமான சென்னையின் வார்ப்பு.
வன்முறைப் பாதைக்குப் போக மாட்டேன் என்று பிடிவாதமாக நின்றாலும், வெளியே தெரியாத வன்முறை மூலம் தாதாயிசத்தை உதய் முடிவுக்குக் கொண்டு வரும் கிளைமாக்ஸ் ஓகே.
என்ன ஒன்று… முதல் பாதியில் இருக்கும் பரபரப்பு விறுவிறுப்பும் இரண்டாவது பாதியில் குறைந்து விடுவது கொஞ்சம் தொய்வைத் தருகிறது. அதேபோல் படம் முழுவதும் வசனங்களால் நிறைந்து வழிகிறது – எல்லோருமே பஞ்ச் அடித்துப் பேசப் பிரியப்படுகிறார்கள்.
என்ன தேவையோ அதைப் பேசி இருந்தால் படமும் முழுமையாகப் பேசப்பட்டிருக்கும்.
டை நோ சார்ஸ் – வட சென்னை ஓவர் லோடட்..!