April 19, 2024
  • April 19, 2024
Breaking News
November 26, 2018

அரசியல்வாதிகள் கடமையைச் செய்தால் நமக்கு வேலை இருக்காது – ஆரி

By 0 868 Views
“தோனி கபடி குழு” படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியிட்டு நிகழ்ச்சி இன்று நடந்தது.
 
நிகழ்வில் படத்தின் இயக்குநர் ஐயப்பன் பேசுகையில்,

 

“இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் 5 படங்களில் பணிபுரிந்திருக்கிறேன். இப்படத்தின் கதையை முடிவு செய்த பிறகு எனது நண்பரான இப்படத்தின் தயாரிப்பாளரிடம் உதவி கேட்கச் சென்றேன். அவர் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு முன்பணம் கொடுத்தார்.

இப்படத்தை நான் தான் தயாரிப்பேன். அதுமட்டுமல்லாமல், இப்படத்தை வெளியிடும் செலவையும் நான் செய்கிறேன் என்றார். இப்படம் வாடிக்கையாக வரும் கதையாக இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது என்றும் கூறினார். மேலும், எவ்வளவு விரைவாக இப்படத்தை எடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக இப்படத்தை எடுக்க வேண்டும் என்றார்.

அதுபோல, நான்கு மாதத்திலேயே இப்படத்தை எடுத்து முடித்தோம். பிறகு நடிகர், நடிகைகள் மற்றும் மற்ற கதாபாத்திரங்களுக்கு புதுமுகங்களுக்கே வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அபிலாஷ் மற்றும் லீனா இருவரும் கதையைக் கேட்டவுடனேயே ஒப்புக் கொண்டனர். லீனா ‘மதராசபட்டிணம்’ படத்தில் ஆர்யாவிற்கு தங்கையாக நடித்திருப்பார்.

ஒரு ஊரில் ஏற்படும் பிரச்சனையைத் தீர்க்க கிரிக்கெட்டா? கபடியா? இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நம் நாட்டிற்கு வருமானம் ஈட்டும் கிரிக்கெட்டா? அல்லது மண்ணின் வீர விளையாட்டான கபடியா? எதைத் தேர்வு செய்கின்றனர் என்பதே படத்தின் கதை.

இப்படத்திற்காக கள்ளக்குறிச்சி, பாதூர் போன்ற கபடி விளையாடும் ஊர்களுக்குச் சென்று அதன்படி ‘செட்’ அமைத்தோம். மற்றும் படப்பிடிப்பும் நடத்தினோம்..!” என்றார்.

நடிகர் ஆரி பேசுகையில்,

நம் பாரம்பரிய விளையாட்டை முதன்மைப்படுத்தி எடுத்திருக்கும் இப்படத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

சென்னைக்கு ஒன்று நேர்ந்தால் மட்டும்தான் அனைவரும் குரல் கொடுக்கின்றனர். எங்கெங்கிருந்தெல்லாமோ நிவாரண உதவி குவிகிறது. சென்னையைத் தாண்டி புற இடங்களில் ஏதாவது நேர்ந்தால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. அப்படி உதவி சென்று சேர்ந்திருந்தால் இன்று ஒரு விவசாயி தற்கொலை செய்துக் கொண்டிருக்கமாட்டார் என்று கூறினார்.

அரசியல்வாதிகள் அவர்கள் கடமையைச் சரியாக செய்தாலே நமக்கு வேலை இருக்காது என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும், சினிமாவை வாழவைக்க வேண்டும் என்றும், திரையரங்கத்தில் ஆன்லைன் பதிவுக்கு வசூலிக்கும் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றும், சிறிய படங்களுக்கு மாலை மற்றும் இரவு காட்சிகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.