சந்தானத்தை எங்கே ஆளையே காணோம் என்று பார்த்தால் ‘தில்லுக்கு துட்டு இரண்டாம் பாக’த்தை எடுத்து முடித்துவிட்டு பிரஸ்மீட்டில் சந்தித்தார்.
ஆள் அடையாளமே தெரியாமல் மாறியிருந்தார். அதற்கு படத் தயாரிப்பாளரானதே காரணம் என்றவர் விழாவில் பேசியதிலிருந்து…
“நீண்ட நாள் கழித்து அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. ‘தில்லுக்கு துட்டு’ முதல் பாகத்தில் கடைசி 20 நிமிடம் ரசிகர்கள் இடைவிடாமல் சிரித்தார்கள். அண்ஹ்த 20 நிமிடம் போல இப்படம் முழுக்க நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று அனைவரும் கலந்து பேசி படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்.
‘லொள்ளு சபா’ தொலைக்காட்சி நிகழ்ச்சி வித்தியாசமானது என்று பெயர் வாங்கியது போல், இப்படத்திலும் வித்தியாசமான நகைச்சுவையாக இருக்க புது முயற்சி எடுத்திருக்கிறோம்.
ஷ்ரதா சிவதாஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். படத்தின் இரண்டாவது பாதி கேரளா பின்னணியில் இருப்பதால் கேரளப் பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவரைத் தேர்ந்தெடுத்தோம்.
‘மொட்டை’ ராஜேந்திரன், விஜய் டிவி ராமர், விபின், சிவசங்கர் மாஸ்டர், விஜய் டிவி தனசேகர், சி.எம்.கார்த்திக், ஊர்வசி, இயக்குநர் மாரிமுத்து, ஜெயப்ரகாஷ், பிரஷாந்த் இன்னும் பலரும் பணியாற்றியிருக்கிறார்கள்..!” என்றவர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் சிரிக்க வைத்த ஹைலைட்ஸ்…
“நடிகராக இருப்பதை விட தயாரிப்பாராக இருப்பது தான் கஷ்டம்.
இப்போது பலரும் ஆர்யா திருமணத்தைப் பற்றிதான் கேட்கிறார்கள். அதை அவரிடமே கேட்டு சொல்கிறேன்.
வருடத்திற்கு ஒரு படம் தான் நடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. நான் என்ன டாம் க்ரூஸா… ஒரு மிஷன் இம்பாஸிபிள் எடுத்துவிட்டு வருஷம் முழுக்க பார்க்க வைப்பதற்கு..? ஏற்கனவே 3 படங்கள் முடிந்த நிலையில் இருக்கிறது. வெளியாவதற்கு தாமதம் ஆகிறது.
நான் இயக்குநரானால் ஆர்யாவை வைத்து தான் படம் எடுப்பேன். சிம்புவிற்கென்று கதை எழுதி தான் இயக்க வேண்டும். எந்த படம் எடுத்தாலும் நல்ல படமாக இயக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது..!” என்றவரிடம்,
“டிரைலரில் பேய்களாக வருகின்றன. கதாநாயகியைக் காணோமே…” என்ற கேள்வி கேட்கப்பட்டபோது, “டிரைலரில் கதாநாயகியும் வந்தார். ஆனால், நீங்கள் அவரை பேய் என்று நினைத்து விட்டீர்கள் போலிருக்கிறது..!” என்றபோது அரங்கம் அதிர்ந்தது.
இதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கிறோம் சந்தானம்..!