January 17, 2026
  • January 17, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலயில் செல்ல வரிகட்ட வேண்டியதுதானே – தனுஷ் வரிவிலக்கு கோரிய வழக்கில் நீதிபதி கேள்வி
August 5, 2021

மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலயில் செல்ல வரிகட்ட வேண்டியதுதானே – தனுஷ் வரிவிலக்கு கோரிய வழக்கில் நீதிபதி கேள்வி

By 0 552 Views

கடந்த 2015-ம் வருடம் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடை கோரி, நடிகர் தனுஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாகச் செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து, தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், 50 சதவீத வரியைச் செலுத்தும் பட்சத்தில் காரைப் பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதை அடுத்து 30 லட்சத்து 33 ஆயிரத்தைச் செலுத்தியதாக, தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விதிகளைப் பின்பற்றி பதிவு செய்ய 2016 ஏப்ரலில் நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று (ஆக. 05) விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ் தரப்பில் அட்வகேட் விஜயன் சுப்ரமணியன் என்பவர் ஆஜராகி, மீதமுள்ள வரியைத் திங்கட்கிழமைக்குள் (ஆக. 09) செலுத்தத் தயாராக இருப்பதாகவும், அதனால் வழக்கை முடித்து வைக்கும்படியும் கோரிக்கை வைத்தார். அத்துடன் இந்த வழக்கை வாபஸ் பெறுவதற்காக மெமோ தாக்கல் செய்திருப்பதாகத் தெரிவித்தார்.

அப்போது, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் குறுக்கிட்டு, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வாங்கும் அளவில் உள்ள தனுஷ், நுழைவு வரி செலுத்துவதை எதிர்த்த வழக்கின் மனுவில், என்ன பணி அல்லது தொழிலில் இருக்கிறீர்கள் எனக் குறிப்பிடாதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

சில விநாடிகள் மெளனமாக இருந்து விட்டு என்ன வேலை என்பதை ஏன் மறைத்தார் என மனுத்தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதி, பணியையோ அல்லது தொழிலையோ வழக்கு மனுவில் குறிப்பிட வேண்டியது அவசியமில்லையா என்று மறுபடியும் கேள்வி எழுப்பினார்.

2018 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்குப் பிறகாவது, வரியைச் செலுத்திவிட்டு வழக்கை வாபஸ் பெற்றிருக்கலாமே எனவும், அப்படி என்றால் உங்கள் நோக்கம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்குப் பிறகும், இதுவரை செலுத்தாத நிலையில், வாபஸ் பெற அனுமதிக்க முடியாது எனவும் நீதிபதி தெரித்தார்.

மக்களின் வரிப் பணத்தில் போடும் சாலையைப் பயன்படுத்தும்போது வரியை செலுத்த வேண்டியதுதானே எனவும், சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து வழக்கறிஞர்தானே மனுதாரருக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ஒரு நாளைக்கு 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் பால்காரர் அல்லது சோப்பு வாங்கும் பொதுமக்கள் போன்ற ஏழை, நடுத்தர மக்கள் கூட வரி செலுத்திதானே பயன்படுத்துகிறார்கள் என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். பெட்ரோலுக்கு ஜிஎஸ்டி செலுத்த முடியவில்லை என, அவர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.

உங்கள் தொழிலில் நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும் சம்பாதியுங்கள், எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் கார் வாங்குங்கள்… ஆனால், அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையை முழுமையாகச் செலுத்துங்கள் என நீதிபதி அறிவுறுத்தினார்.

எந்த தனிப்பட்ட ஒருவரையும் குற்றம் சாட்ட வேண்டுமென்பது தன் நோக்கம் அல்ல என்றும், அரசு விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள்படி நடக்கும்படியும் அறிவுறுத்தினார்.

நடிகர் தனுஷ் நுழைவு வரி பாக்கி எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிகவரித் துறை உடனடியாகக் கணக்கிட்டு, இன்று மதியம் 2:15 மணிக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற நீதிபதி, கணக்கீடு செய்யும் அதிகாரியும் மதியம் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை இறுதி உத்தரவுக்காக மதியம் தள்ளி வைத்தார்.