காதல் கதைகளில் பெரும்பாலும் ஏழைக்கும் பணக்காரனுக்குமான காதலே முதலிடம் பிடிக்கும். ஆழமான காதல் என்றால் அது பெரும்பாலும் ஏழைகளுக்கிடையில் வருவதாகவே இருக்கும். உலகம் முழுக்க சினிமாவில் இதுவேதான் நிலை.
ஆனால், இந்தப்படத்தில் பணக்காரர்களுக்கான காதலைச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர்.
பெரிய தொழிலதிபரின் மகன் கார்த்திக்கு தன் மனம் போல் வாழப் பிடித்திருக்கிறது. கூடவே சாதிக்க வேண்டுமென்ற ஆவலும் இருக்கிறது. இன்னொரு பக்கம் தன் தந்தையின் மீதான வெறுப்பால் ஆண்கள் மேல் நம்பிக்கையில்லாமல் இருக்கும் இளம் தொழிலதிபரான ‘ரக்குல் ப்ரீத் சிங்’ தன் தாயுடன் வசித்து வருகிறார்.
நண்பர்களின் தூண்டுதலால் ரக்குலை கார்த்திக் காதலிக்க ஆரம்பிக்க, அந்தக் காதல் இருவரின் மன நிலையில் என்ன விதமான மாறுதல்களை ஏற்படுத்துகிறது..? இருவரின் காதல் நிறைவேறியதா..? என்ற கேள்விகளுக்கு பதிலைத் தேடும் கதையாக இது இருக்கிறது.
அவ்வப்போது இப்படி இளமையும், ரொமான்ஸும் கலந்த வேடங்களில் கார்த்திக்கைப் பார்க்க பிடிக்கிறது. அவரும் அதை விரும்புகிறார் என்பது உற்சாகமான அவரது ஈடுபாட்டில் இருந்தே தெரிகிறது. டிராவல் போட்டோகிராபராக இருக்கும் அவர் எவரெஸ்ட்டில் ஏற வேண்டுமென்ற தாகம் கொண்டிருப்பது இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத புது ஐட்டம்.
ரக்குல் ஏற்றிருக்கும் வேடம் அவரது அழகுக்கும், மிடுக்குக்கும் பொருத்தமாக இருக்கிறது. ஆனால், தந்தை மீதான அவரது கோபம் நியாயமாக இருந்தாலும் கார்த்தியைத் தானும் காதலிக்க ஆரம்பித்தபிறகு தனக்காக அவர் நேரம் ஒதுக்கவில்லை என்ற அற்ப காரணத்துக்காக… அதுவும் அந்த நேரத்தையும் அவர் தனக்காகவே செலவழித்தார் என்று தெரிந்தும், கார்த்தி வீட்டு சுப காரிய நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறுவது நாகரிகமில்லாமல் இருக்கிறது.
இப்படி ஒரு பெண்ணை எப்படி அதற்கு மேல் ஒரு இளைஞனால் காதல் கொண்டு வாழ்க்கையில் இணைத்துக்கொள்ள முடியும்..?
அதேபோல் கார்த்திக்கு ரக்குல் மீது வரும் காதலும் இயல்பாக இல்லாமல் உடன் இருக்கும் விக்னேஷ் கொடுக்கும் நிர்ப்பந்தத்தில் வருவதும் வலுவில்லாமல் அமைகிறது. இப்படி ஒரு காதலின் அகல நீளங்கள் சரியாக அமையாது போனதால் இது வழக்கமான காதல் கதையாக ரசிக்க இயலாமல் போய் விடுகிறது.
மற்றபடி இந்திப்படங்களையொத்த பிரமாண்டம், வேல்ராஜின் ரம்மியமான படமாக்கம், ஹாரிஸ் ஜெயராஜின் துள்ளலான இசையில் தாமரையின் பாடல் வரிகள் என்று படம் வானவில்லாக நகர்கிறது. அந்த எவரெஸ்ட் காட்சிகள் ‘ஆஸம்..!’
கார்த்தி, ரக்குல் இருவர் மட்டுமே மொத்தப் படத்தையும் அடைத்துக் கொள்வதால் உடன் வரும் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் யாருமே ஸ்கோர் செய்ய வாய்ப்பில்லை. கார்த்தியின் உடன் வரும் தோழி அம்ருதா கதைக்குப் பயன்படவேயில்லை.
கார்த்தியைவிட அதிகமான காட்சிகள் காமெடியன் விக்னேஷுக்கு. ஆனால், ஒரு இடத்திலும் சிரிக்க வைக்காமல், கதையின் நகர்த்தலுக்கு ஸ்பீட் பிரேக்கராக இருக்கிறார். அவர் காட்சிகளை நிறைய நறுக்கலாம்.
தேவ் – படமாக்கத்தில் இருக்கும் நேர்த்தி திரைக்கதையில் இருந்திருந்தால் ‘வாவ்…’ சொல்லியிருக்கலாம்..!