பல தலைவர்களுக்கும் அவர்கள் சார்ந்திருந்த இனத்தின் குறியீடாக அடையாளம் இருக்கும். ஆனால், ‘ இவர் அப்படிப்பட்டவர் அல்ல, இந்த தேசத்துக்கே சொந்தமானவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்…’ என்பதை பல்வேறு நிகழ்வுகளின் மூலம் நிறுவுகிறார் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் ஆர்.அரவிந்தராஜ்.
இந்திய சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கும் கதையில் சுதந்திர தாகத்துடன் அதற்கான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த முத்துராமலிங்க தேவர், சுதந்திரத்துக்குப் பின்னான இந்தியாவில் காங்கிரசிலிருந்து விலகி ஃபார்வேர்டு பிளாக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தனது பணிகளைத் தொடர்கிறார்.
அத்துடன் நேதாஜி இறந்துவிட்டார் என்கிற நேருவின் கூற்றுக்கு மாறாக அவர் இறக்கவில்லை உயிருடன்தான் இருக்கிறார்… என்று அறிவித்ததும், காமராஜர் தமிழகத்தின் முதல்வராக வருவதற்கு அவர் ஆட்சேபம் தெரிவித்ததும், காங்கிரஸின் அதிருப்திக்கு அவரை ஆளாக்குகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த தமிழகத்தில் அப்போது ஏற்பட்ட சாதி பிரச்சனைகளின் காரணமாக பல்வேறு இனக் குழுக்கள் இடையே ஒற்றுமையைப் பேணும் நோக்கில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து ஒரு இனத்தைச் சேர்ந்த இம்மானுவேல் சேகர் வெட்டிக் கொல்லபபடுகிறார்.
ஏற்கனவே முத்துராமலிங்கத் தேவர் மீது அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் இப்போது அவரைக் கைது செய்கிறது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் எப்படி வெளியே வந்தார் அதன் பிறகு என்ன ஆனது என்பதெல்லாம் மீதிப் படமாக விரிகிறது.
முத்துராமலிங்க தேவர் சிலைக்கு உயிர் கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படித் தோன்றுகிறார் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெ.எம்.பஷீர்.
நடை, உடை, பாவனை, நெற்றியில் திருநீற்று பட்டை என்று இனிவரும் காலங்களில் நடமாடும் முத்துராமலிங்க தேவரைப் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு பஷீர் மட்டுமே முன் மாதிரியாக இருப்பார்.
மற்றபடி நாம் அறிந்திருக்கும் தலைவர்களான நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், காமராஜர் ஆகியோரது கதாபாத்திரங்களில் வருபவர்களும் ஓரளவுக்கு உருவ அமைப்பில் ஒத்திருக்கிறார்கள்.
இவர்களுடன் இயக்குநர் பாரதிராஜா, ராதா ரவி, வாகை சந்திரசேகரின் ஆளுமையும் அனுபவ நடிப்பும் படத்துக்கு பலமாகி இருக்கிறது.
இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை படத்தின் உயிராகி இருந்தாலும் “போற்றி பாடடி பெண்ணே…” பாடலுக்கு ஈடான ஒன்று உள்ளேன் வந்திருந்தால் இன்னும் உயிர்ப்பாக இருந்திருக்கும்..!
அகிலனின் ஒளிப்பதிவு, காலகட்டத்திற்கு ஏற்ப இந்தியாவை காட்சிகளில் கொண்டு வந்திருக்கிறது.
உன் பாதி படத்தை வட பெண் பாதி படம் விறுவிறுப்பாக நகர்கிறது.
முன்பிருந்த அரசியல் நிகழ்வுகளை பாரபட்சம் இன்றி படமாகி இருப்பதோடு, முத்துராமலிங்க தேவர் பற்றி அறிந்தவர்களும் அறியாதவர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் இயக்கி இருக்கும் அரவிந்தராஜுக்கு பாராட்டுகள்.
இந்த நிழல் முத்துராமலிங்கத் தேவரை போற்றாமல் பாராட்டலாம்..!
– வேணுஜி