சமீபத்தில் தன் அலுவலகத்தில் தன்னுடைய குருநாதர் கே.பாலசந்தர் சிலையை கமல் திறந்தார் அல்லவா..? அந்த நிகழ்வில் ரஜினி மற்றும் வைரமுத்துவை முக்கிய விருந்தினர்களாக அழைத்திருந்தார் கமல்.
அதுதான் சின்மயியை கோபத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. அந்த நிகழ்வைக் குறிப்பிட்டு ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார் சின்மயி.
“பாலியல் குற்றச்சட்டுக்கு ஆளானவர்தான் வெளியே தலை காட்டமுடியாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால், இங்கே வைரமுத்து பல்வேறு திமுக விழாக்கள், ஐஏஎஸ் அகாடமி பயிற்சி நிறுவன விழாக்கள், தமிழ் மற்றும் புத்தக விழாக்களிலெல்லாம் பங்கு பெற்று வருகிறார். ஆனால், குற்றம் சாட்டிய நான் உடனடியாக எல்லா இடங்களிலும் தடை செய்யப்பட்டேன்.
பிரபலமான பாலியல் குற்றவாளியுடன் உறவாடுவதும், குற்றம் சாட்டியவரைத் தடை செய்வதும்தான் தமிழ் சினிமா பெருந்தலைகளின் நீதியா..?” என்று தன் சமூக வலை பக்கத்தில் கேட்டிருக்கிறார்.
அந்த செய்திக்கு கமல் நிகழ்வின் படத்தை வைத்து கேட்டிருப்பதால் அது கமலுக்கு எதிரான கேள்வியாக இருக்கிறது. சின்மயி கமலைக் கேள்வி கேட்டதாகவே முன்னணி ஊடகங்களிலும் செய்தி வந்திருக்கிறது.
இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரசு பஸ்ஸில் தான் பெண்களை உரசியதாக நடிகர் சரவணன் சொன்னபோது, ‘அவரை உடனே கண்டிக்காமல் அதை ஜோக் ஆக்கி எல்லோரையும் சிரிக்க வைத்ததாக’ கமலுக்கு கண்டனம் தெரிவித்து இனி அந்த நிகழ்ச்சியைப் பார்க்க மாட்டேன்..!” என்றார் சின்மயி.
இப்போது இரண்டாவது முறையாக கமலை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறார் அவர்.
நேரடியாக தன் கேள்வியில் சின்மயி குற்றம் சாட்டியவர்களெல்லாம் பதில் சொல்வார்களோ இல்லையோ, கமல் என்கிற மய்யவாதி, மக்கள் நீதிக்குத் தலை வணங்கி பதில் சொல்லத்தானே வேண்டும்..?
சொல்வார் என்று எதிர்பார்க்கலாம்..!