17 வருடங்களுக்கு முன் இந்தக் காமெடிப்படம் வந்தபோது இதன் இரண்டாவது பாகம் எடுப்போம் என்று அவர்களுக்கே கூட தெரியாது. அதே பிரபு, அதே பிரபுதேவா, அதே இயக்குநர் ஷக்தி சிதம்பரம் கூட்டணி அமைத்து இப்படியொரு அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
என்ன ஒன்று, கால மாற்றம் பிரபுதேவாவை மட்டும் ஹீரோவாகவும், முந்னதில் அவரது நண்பராக வந்த பிரபுவை இதில் அவரது மாமனாராகவும் மாற்றியிருக்கிறது. அதேபோல் அதில் பிரபு ஒரு பொய் சொல்லப்போக, படம்முழுதும் பிரபுதேவா மாட்டிக்கொண்டு முழிப்பார். இதிலும் அதே மாட்டிக்கொண்டு விழிக்கும் வேடம்தான் பிரபுதேவாவுக்கு. ஆனால், அதற்குக் காரணமாக இதில் பிரபு இல்லை. அவருக்கு பதிலாக அந்த வேலையை விவேக் பிரசன்னா செய்கிறார்.
இதில் நிக்கி கல்ராணியைப் பார்த்துக் காதல்வயபடும் பிரபுதேவா, விவேக் பிரசன்னா செய்த குளறுபடியால் நிக்கியைக் கண்டபடி திட்டி செல்போனில் வீடியோ அனுப்ப, அதை வைத்து ஒரு காமெடிக் கூத்தை அரங்கேற்றியிருகிறார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம்.
பட ஆரம்பத்தில் அறிமுகக்காட்சியில் மிர்ச்சி சிவா சொல்கிற மாதிரி வயசே தெரியாமல் இருக்கிறார் பிரபுதேவா. அந்த கட்டமைப்பே அவரை இந்னும் கதாநாயகனாக வைத்திருக்கிறது. என்ன நடந்தாலும் அதை அசால்டாக எதிர்கொள்ளும் அவரது நடிப்பும், சண்டைக்காட்சிகளிலும் நடனத்தைப் போன்ற துல்லியமும் ரசிக்க வைக்கின்றன.பிரபுவை அறிமுகம் செய்யும்போது குறும்பர் சிவா சொல்லும் ‘வெயிட்’டான கேரக்டருக்கு அவர் ரொம்பப் பொருத்தமாகவே இருக்கிறார். அவ்வப்போது வடை, இட்லி, கெட்டிச்சட்னி என்று அவர் பாட்டுக்கு அலப்பறையில் இறங்கிக் கொண்டிருக்கிறார்.
‘தானுண்டு தன் தொடையுண்டு’ என்றிருக்கும் நிக்கி கல்ராணி படம் முழுக்க தோல்சீவிய பப்பாளியாக வலம் வருகிறார். அவர் மீது இயக்குநருக்கு என்ன கோபமோ, அவரைப் பார்த்து இன்னொரு நாயகியாக வரும் ஆதா சர்மா, “டிராபிக்ல நுங்கு விக்கிற பொண்ணு மாதிர் இருக்கா…” என்று பேசும் ஒரு டயலாக்கை விட்டுப் போட்டுத் தள்ளியிருக்கிறார். அந்த ஆதாசர்மாவும் இரண்டாம் பாதிப் படத்தின் கவர்ச்சிக்குக் கட்டியம் கூறுகிறார்.
எதை எதுத்தாலும் குழப்பம் விளைவிக்கும் விவேக்பிரசன்னாவை என்ன காரணத்துக்காக துபாயில் இருந்து வரவழைத்து பிரபுதேவா ‘ஆப்பை’ செருக்கிக் கொள்ள வேண்டும்..? அவர் வரவுக்கு ஒரு அழுத்தமான காரணத்தைச் சொல்லியிருக்கலாம். பிரபுதேவா கூடவே இருக்கும் அர்விந்த் ஆகாஷும் அடையாளம் இல்லாமல் இருக்கிறார்.
தமிழ்நாட்டையும், ஆந்திராவையும் அழகு மிளிரும் சொர்க்கபுரியாக்கியிருக்கிறது செளந்தர்ராஜனின் ஒளிப்பதிவு. அம்ரீஷின் இசையில் பாடல்கள் ‘மசாலா டோஸ்டா’க இருக்கின்றன.எல்லாவற்றையும் மிஞ்சி வெளியே அதிரி புதிரியாக ஹிட்டான ‘சின்ன மச்சான்’ பாடல் எப்போது வரும் என்று ஏங்கவே வைத்துவிடுகிறார்கள். அந்த ஒரு பாடலே கொடுக்கிற காசுக்கு ‘ஒர்த்.’
நகைச்சுவைக் கதையானதால் எந்த லாஜிக்கும் பார்க்காமல் ஒரு திரைக்கதையை ரெடி பண்ணியிருக்கிறார் ஷக்தி சிதம்பரம். அங்கங்கே அழுத்தம் கொடுத்திருந்தால் முதல் பாகத்தை மிஞ்சியிருக்கும்.
சார்லி சாப்ளின் – ப்ளூ டிக்..!