ஆனந்தன் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள ‘சக்ரா’ நாளை ( பிப்ரவரி 19 ) வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படத்திற்கு தடை விதிக்கக்கோரி தயாரிப்பாளர் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் ‘சக்ரா’ படத்தின் கதையை ஆனந்தன் ஏற்கனவே தன்னிடம் தெரிவித்து படத்தை தயாரிக்க ஒப்பந்தம் போட்டுவிட்டு தற்போது ஒப்பந்தத்தை மீறி விஷால் தயாரிப்பில் படம் வெளியிடுவது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு தாக்கல் செய்யப்பட்டபோது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வர, சக்ரா திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இயக்குநர் ஆனந்தன் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்துக்கு தங்கள் நிறுவனம் பொறுப்பேற்க முடியாது எனவும், இந்த இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டால் தங்கள் நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் எனவும் விஷால் தரப்பில் வாதாடப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதி, சக்ரா நாளை வெளியாக உள்ள நிலையில் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டால் தயாரிப்பு நிறுவனம், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என பலரும் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்து படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கினார்.
இதன் மூலம் ‘சக்ரா’ திரைப்படம் அறிவித்ததுபோல் நாளை (பிப்.19) தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.