July 20, 2025
  • July 20, 2025
Breaking News
July 20, 2025

சென்ட்ரல் திரைப்பட விமர்சனம்

By 0 38 Views

சென்னையின் குறிப்பிடத்தக்க அடையாளங்களில் ஒன்று சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வந்திறங்கும் இடமாக இது இருக்கிறது. 

கதை நடக்கும் களம் அங்கேதான் என்றாலும் படத்தின் நாயகன் காக்கா முட்டை விக்னேஷ் வந்து இறங்குவது கோயம்பேடு மார்க்கெட்டில் தான். 

அரியலூரில் இருந்து இவர் கிளம்பிய நேரம் பார்த்து பஸ் கிடைக்காமல் போகவே கோயம்பேடு மார்க்கெட் வரும் ஒரு வேனைப் பிடித்து சென்னை வந்து சேர்கிறார். வந்து சேர்ந்த நோக்கம் பள்ளி இறுதித் தேர்வு முடிந்த இரண்டு மாத விடுமுறையில் அப்பாவுக்கு ஒத்தாசையாக வேலை பார்த்து குடும்பக் கடனை அடைக்க உதவுவது. 

இந்தப் படத்துக்கான விளம்பரங்களில்  பள்ளிச் சீருடையில் நாயகனையும் நாயகியையும் பார்த்ததும் வழக்கம் போல இது ஏதோ பள்ளிப்பருவத்து காதல் கதை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

ஆனால் காதலைத் தாண்டிய கனமான கதை இது. 

குடும்பத்தை அரியலூரில் விட்டு விட்டு குடும்பக்கடனை அடைப்பதற்காக விக்னேஷின் தந்தை கோயம்பேடு மார்க்கெட்டில் ஓயாமல் மூட்டை தூக்கி உழைக்கிறார். இருந்தும் இங்கு கடன்காரன் அவ்வப்போது வீட்டில் வந்து அப சொற்களால் திட்டி விட்டுப் போவதைப் பார்த்து மனம் நொந்த விக்னேஷ் விடுமுறையில் கொஞ்சம் பணம் சம்பாதித்து அப்பாவின் சுமையைத் தீர்க்க விரும்புகிறார். 

அதற்காக அவர் வந்து சேர்ந்த இடம்தான் சென்ட்ரல். அங்கு வால்டாக்ஸ் ரோட்டில் இயங்கும் ஒரு நூல் தொழிற்சாலையில் அவருக்கு வேலை கிடைக்கிறது. ஆனால் சேர்ந்தவுடன்தான் தெரிகிறது அதன் முதலாளியும் , பொறுப்பாளரும் மனித மிருகங்கள் என்று.

சின்னச் சின்ன தவறுகளுக்கெல்லாம் அடி உதை என்று நடத்துபவர்கள் தங்களை எதிர்க்கும் தொழிலாளிகளைக் கொல்லும் அளவுககும் போகிறார்கள்.

வேலைக்கு சேர்ந்த முதல் நாளே முதலாளியிடம் அடி வாங்கும் விக்னேஷ் அந்தக் கொட்டடியில் இருந்து மீள முடிந்ததா, அவரது எண்ணப்படி அந்த விடுமுறையில் காசு சேர்த்து அப்பாவுக்கு உதவ முடிந்ததா என்பதையெல்லாம் மீதிக் கதை சொல்கிறது.

காக்கா முட்டையில் பார்த்த விக்னேஷ் இவ்வளவு பெரியவனாக வளர்ந்து விட்டாரா என்று ஆச்சரியமாக இருக்கிறது. முதல் காட்சியிலிருந்து குடும்பத்தின் கஷ்டங்கள் புரிந்து அந்தக் குடும்பத்துக்கு உதவ நினைக்கும் முனைப்பை தன் நடிப்பில் நன்றாக வெளிக் காட்டி இருக்கிறார். 

சுடுகாட்டு சாம்பலில் இருந்து அவருக்கு விபூதி வைத்துவிடும் அவரது தாத்தா, “உனக்கு இந்த தொழில் வேண்டாம் படித்து நல்ல நிலைமைக்கு வா..!” என்று வாழ்த்தும்போது அவரது சமூகச் சூழலும் நன்றாக புரிகிறது. 

அந்த ஒரு காரணத்துக்காகவே கனிந்து கைகூடி வந்த காதலைக் கூட அப்படியே விட்டுவிட்டு தேர்வு முடிந்த அன்றே வேலைக்குக் கிளம்பி விடுவதில் ‘ தெய்வ மகனாக’ காட்சியளிக்கிறார் விக்னேஷ். 

நாயகி சோனேஸ்வரியும் நல்ல தேர்வுதான். தேர்வு முடிந்த அன்றே விக்னேஷ் கிளம்புவதை அறிந்து மனம் விரும்பினாலும் அவர் எண்ணப்படியே  ஊருக்குச் சென்று வரட்டும் என்று நினைப்பதில் நிஜக் காதலைப் பிரதிபலிக்கிறார். 

ஆனால் கதைப்படியே நாயகி வருவது அந்த ஒரே ஒரு நாள்தான்.

விக்னேஷ் வேலைக்குச் சேரும் தொழிற்சாலையின் கொடுமைக்கார முதலாளியாக அட.. நம்ம பேரரசு.

அவருக்கெல்லாம் கோபம் வருவதை நம்மால் நம்ப முடிகிறதா..? ஆனால் இந்தப் படத்தைப் பார்த்தால் நம்பலாம். “இம்..” என்றால் அடி, “ஏன்..?” என்றால் மிதி என்று நடந்து கொள்பவர் தன்னைப் போலீசில் காட்டிக் கொடுத்ததற்காக சிறப்பு திறனாளியைக்  கொல்லும் காட்சி கொடூரம். 

தமிழ் சினிமாவுக்கு இன்னொரு கொடூர வில்லன் கிடைத்து விட்டார்..!

தொழிற்சாலையின் நிர்வாகியாக வரும் சித்தா தர்ஷனும் அப்படியே. ஆனால் அநியாயத்துக்கு கண்ணில் பார்க்கிறவர்களை எல்லாம்… அது பெண்ணாக இருந்தாலும்… அடித்து துவம்சம் செய்வது ஓவர்.

சின்ன பாத்திரம்தான் என்றாலும் விக்னேஷுக்கு ஆதரவு அளிக்கும் ஆறுபாலா நெகிழ வைக்கிறார். அவர் இருக்கையில் விக்னேஷுக்கு பெரிய பிரச்சனை வராது என்று நாம் நினைக்கையில் அவரும் கொல்லப்பட, நாம் ஷாக் ஆகிறோம். 

விக்னேஷ் தந்தையாக வரும் மேதகு ராஜா மனம் உருக வைக்கிறார்.

இலா இசையில் பாடல்கள் எல்லாம் எங்கோ கேட்டவை மாதிரி இருந்தாலும் ரசித்து தாளம் போட வைக்கின்றன. பின்னணி இசையும் குறைவில்லை. 

சிறிய படம்தான் என்றாலும் ஒளிப்பதிவாளர் வினோத் காந்தி எதிலும் குறை வைக்காமல் பணியாற்றி இருக்கிறார். கிராமத்திலும் சரி நகரத்திலும் சரி டிரோன்களை பறக்கவிட்டு டாப் ஆங்கிளில் டாப் கிளாஸ் ஆக எடுத்து கவனம் பதிக்கிறார். 

படத்தின் இயக்குனர் பாரதி சிவலிங்கம் சொல்ல வந்த செய்தி தொழிலாளர்களால் வயிறு வளர்க்கும் பணக்காரர்கள், தங்கள் உயர்வுக்குக் காரணமான தொழிலாளர்களை எப்படி நசுக்குகிறார்கள் என்பதைத்தான். அந்த தொழிலாளர்களின் கரங்கள் ஒன்று சேர்ந்து உயர்ந்தால் என்ன ஆகும் என்பதையும் புரிய வைத்திருக்கிறார். 

ஆனால் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் சென்ட்ரலுக்கு அருகில் இப்படி ஒரு கொத்தடிமை தொழிற்சாலை இருப்பதை நம்மால் நம்ப முடியவில்லை. அதுவும் கொலை செய்யப்பட்டவர்களை என்ன செய்கிறார்கள் என்று தெரியாத அளவில் தலைநகர போலீசும் அதற்கு உடந்தையாக இருப்பதை எல்லாம் நம்ப முடியவில்லை.

ஆனால் ஆண்டான் அடிமை சமூகம் மாற வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல்  சாதி பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும்  என்று விரும்பும் இயக்குனரின் எண்ணம் உயர்வானது. 

வெட்டியான் பரம்பரையில் வந்த விக்னேஷ் கோயிலுக்குள்ளே சென்று சாமி கும்பிட தயங்கும்போது அந்தக் கோவில் பூசாரியே அவரை கோவிலுக்குள் அழைத்து, “இனி உள்ளே வந்து தான் சாமி கும்பிட வேண்டும்..” என்று சொல்வது ஆகச் சிறப்பான காட்சி.

இப்படி அரியலூரை உயர்த்தி இருப்பவர் சென்னையை மட்டும் கொஞ்சம் சிக்கலுக்கு உள்ளாக்கி இருக்கிறார்.

ஆனால் அரியலூர் நாயகன் சென்னை வந்து சேர்வதற்கு முன்பாகவே பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து அந்த தொழிற்சாலைக்கு ஏற்கனவே வடக்கன்ஸ் வந்து தங்கி இருப்பதாக காட்டுவதும் குறிப்பிடத்தக்க சென்னையின் நடைமுறைக் குறியீடு.

சென்ட்ரல் – முதலாளிகளின் முரட்டு கவனத்திற்கு..!

– வேணுஜி