கல்லூரி மாணவரான நாயகன் ராஜுவின் அம்மா சரண்யா பொன் வண்ணனுக்கு, தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் தோழி தேவதர்ஷினியின் மகள் ஆதியாவை தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசை.
ஆனால், ஆதியாவோ விஜே பப்புவை காதலிக்க, ராஜுவோ தனது சக மாணவி பவ்யா ட்ரிகாவை காதலிக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க, ராஜுவின் உற்ற நண்பன் மைக்கேல் தன் காதலில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக ராஜுவின் நட்பில் இருந்து விலகிச் செல்கிறார்.
இத்தனை குழப்பங்களுக்குள் ராஜுவின் காதலும், சரண்யா பொன்வண்ணனின் ஆசையும் என்ன ஆனது? என்று சொல்லும் கதை இது.
காலம் காலமாக காதல், நட்பு, மோதல் எல்லாம் இருந்தாலும் இதை எல்லாம் இந்தக் காலக்கட்ட இளைஞர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்று இளமை ததும்ப சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் ராகவ் மிர்தாத்.
நாயகனாக நடித்திருக்கும் ராஜு ஒரு புதுமுகம் போலவே தெரியவில்லை. இயல்பாக நடித்திருப்பதுடன் காமெடியும் அவருக்கு நன்றாக வருகிறது.
நாயகிகளாக நடித்திருக்கும் பவ்யா ட்ரிகாவும் , ஆதியாவும் இளமை அழகில் ஜொலிக்கிறார்கள். பவ்யாவுக்கு நடனம் பிளஸ் பாயிண்ட் என்றால் ஆதியாவின் சுறுசுறுப்பும் நடிப்பும் பலமாக இருக்கிறது. அவரது பாடி லாங்குவேஜ் ‘ பலே..!’
ஆதியா காதலிக்கும் விஜே பப்பு, சரியான கலக’லப்பு.’ அவர் வரும் காட்சிகளில் சிரிப்பு சத்தம் தியேட்டரை அதிர வைக்கிறது.
நாயகனின் நண்பன் மைக்கேலின் நடிப்பும் ‘நச்..!’
சார்லி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் தேவர்தர்ஷினிக்கு இந்த வேடங்கள் எல்லாம் தண்ணீர் பட்ட பாடு என்றாலும் கொஞ்சம் மிகையாக அவர்களிடத்தில் இயக்குனர் வேலை வாங்கி விட்டாரோ என்று தோன்றுகிறது.
விக்ராந்த் படத்தில் ஒரு காட்சியில் விஜய் வந்தால் எப்படி இருக்கும்..? அப்படி இருக்கிறது பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தில் விக்ராந்த் வரும் காட்சிகள்.
பாபு குமார்.ஐ.இ, யின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஏ.ஐ செய்தது போல் அத்தனை வண்ணமயமாக இருக்கின்றன..!
இளமை துள்ளும் இசைக்கு சொந்தக்காரரான நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன. பின்னணி இசையும் யூத்ஃபுல்..!
இளமை ததும்ப இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கும் ராகவ் மிர்தாத், அங்கங்கே பழைய டிரெண்டில் கருத்து சொல்வதை தவிர்த்து இருக்கலாம். டபுள் மீனிங் வசனங்களும் படத்தின் தரத்தை கீழே இருக்கின்றன.
ஆனாலும் கிளைமாக்ஸில் நிறைவு ஏற்படுவதைச் சொல்லியாக வேண்டும்..!
பன் பட்டர் ஜாம் – இளமைக் கொண்டாட்டம்..!
– வேணுஜி
.