பாரம்பரிய நடனங்களில் ஒன்றான கதக் நடனத்தில் தன்னிகர் இல்லாமல் தலை சிறந்து விளங்கியவர் லக்னோவை சேர்ந்த பிர்ஜு மகராஜ்.
இந்தியாவின் உயரிய பெருமைகளுள் ஒன்றான பாரத் விபூஷன் பட்டம் பெற்ற அவர் இரண்டு முறை இந்திய சினிமாவில் தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். தவிர உயரிய இசை நடன விருதுகள் பலவற்றையும் அவர் பெற்றிருக்கிறார்.
கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தில் வரும் கதக் நடனங்கள் அனைத்தையும் பிர்ஜு மகராஜ் அமைத்திருந்தார். அதற்காக அவருக்கு 2012ஆம் ஆண்டில் தேசிய விருது கிடைத்தது. அதைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டிலும் சிறந்த நடன அமைப்புக்காக இன்னொரு தேசிய விருதையும் பெற்றார்.
கதக் நடனத்தை பரம்பரையாகவே பெற்ற மகராஜ் தனது 83 ஆவது வயதில் நேற்று நள்ளிரவு மாரடைப்பால் இயற்கை எய்தினார். வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி அவருக்கு 84 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய குடியரசு தலைவரும் பிரதமரும் மற்றும் இந்திய திரையுலகமே பிர்ஜு மகாராஜின் இறப்பு குறித்து தங்கள் அஞ்சலிகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் தனது விஸ்வரூபம் படத்தில் அவரை நடன இயக்குனராக ஒப்பந்தம் செய்து அவரது மேற்பார்வையில் நடனங்களை அமைத்த கமலஹாசன் தனது இரங்கல் உரையில்,
“ஈடு இணையற்ற நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைந்தார்.ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும், விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக் கொண்டவை ஏராளம். இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே..!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஒப்பற்ற அந்த மாமேதைக்கு நாமும் அஞ்சலி செலுத்துவோம்..!