இந்த வாரம் முழுக்க சினிமாவில் ‘பிகில்’, ‘கைதி’ பற்றித்தான் பேச்சாக இருக்கும். இன்னும் இரண்டு தினங்களில் தீபாவளி வெளியீடாக இவ்விரண்டு படங்களும் வெளியாகவிருக்கின்றன.
இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் உதவி இயக்குநர் செல்வா ‘பிகில்’ படத்தின் மீது தொடர்ந்திருந்த கதை புகார் வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பு கூறப்பட்டது.
அதில் படம் அக்டோபர் 25-ம்தேதி வெளியாகத் தடையில்லை. ஆனால், வழக்குத் தொடர்ந்த செல்வா, இதை காப்புரிமை வழக்காகத் தொடர முடியும் என்று கூறியிருந்தார்கள். அதன்படி படம் வெளியாகத் தடையில்லை என்பதில் படக்குழுவினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.
ஆனால், இன்னொரு வகையில் படக்குழுவுக்கு நெருக்கடி வந்தது. கோவில்பட்டியில் பேட்டியளித்த தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு, “தீபாவளிக்கு வெளியாகும் எந்தப்படத்துக்கும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை…” என்று அறிவித்தார். அதற்கு முக்கியக் காரணம் சிறப்புக் காட்சி என்ற பெயரில் டிக்கெட் விலையை அநியாயத்துக்கு ஏற்றி விற்பனை செய்வதாகும். இதைக் கட்டுப்படுத்தும் விதத்திலேயே சிறப்புக் காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அதே வேளையில் சிறப்புக் காட்சிக்கு அதிகக் கட்டணம் வசூலிக்காமல் நியாயமான தொகை வசூலிப்பதாக உறுதியளித்தால் சிறப்புக் காட்சி நடத்திக் கொள்ள பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
அதையடுத்து சிறப்புக் காட்சிக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று எழுத்துபூர்வமாக அமைச்சரிடம் உறுதி அளிக்கப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
அதனால், சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி உண்டா என்பதை அரசின் முறையான அறிவிப்பு வந்தபின்தான் உறுதி சொல்ல முடியும்..!