தமிழில் ஸ்போர்ட்ஸ் படங்கள் வருவதே அபூர்வம் என்றிருக்க, ‘வெண்ணிலா கபடிக்குழு’ மூலமாகவும், ‘ஜீவா’, ‘கென்னடி கிளப்’ படங்கள் மூலமாகவும் விளையாட்டு மற்றும் விளையாட்டின் அரசியல் பற்றியும் தெளிவாக புரிந்து கொள்ளவும், விவாதிக்கவும் வைத்தவர் இயக்குநர் சுசீந்திரன்.
அவர் நாளை ‘சாம்பியன்’ என்ற கால் பந்தாட்டப் படம் மூலம் இன்று வெள்ளித்திரைக்கு வருகிறார். கால்பந்தாட்டத்தை முன்வைத்து ஒரு சூப்பர் ஹீரோவின் பின்னணியில் இல்லாமல் இந்தப்படத்தில் ‘விஷ்வா’ என்ற புதுமுகத்தை அறிமுகம் செய்கிறார் ‘தில்’லான சுசீ.
சாம்பியன் ஹீரோ உண்மையிலேயே ஒரு விளையாட்டு வீரர்தான். வில்வித்தை மற்றும் நீச்சலில் மாநில, தேசிய விருதுகளை வென்றவர். நாளை முதல் தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய ஹீரோவாகும் அவரிடம் பேசியபோது…
“பொதுவா வாழ்க்கையில மாதா,பிதா, குரு, தெய்வம்னு முன்னேற்றத்துக்கான வழிகோலிகளைச் சொல்வாங்க. எனக்கு என் வாழ்க்கையில எப்பவுமே அப்படித்தான், நான் ஒரு சாம்பியனாவறதுக்கு முன்பே என் அம்மா என் செயல்களுக்கு தனியா கைத்தட்டி என்னை உற்சாகப்படுத்தியிருக்காங்க. என்னை காலையில சீக்கிரம் எழுப்பி பயிற்சிக்கு அழைத்துப்போய் உதவியது என் அப்பா.
இப்ப என் குரு சுசீந்திரன் சார். விளையாட்டுப்படம்னு ஏதோ விளையாட்டா எடுக்காம, என்னை ஒரு வருஷம் கால்பந்து முறையா கற்க வச்சார். படத்துக்காக ஒப்பந்தமான மாஸ்டர் நான் அடிச்ச ஷாட்களைப் பாத்துட்டு “நீ புட்பால் பிளேயரா..?” ன்னு கேட்டார். அந்த அளவுக்கு ஒரு பிளேயராகவே என்னை மாத்தினார். தெய்வம்கிறது என் தாத்தா. அவர்தான் எங்களை வழிநடத்துற எங்க குடும்ப தெய்வம்…” என்றவரிடம்,
“பிகில்ன்னு ஒரு பெரிய ஹீரோவோட படம் வந்து வெற்றியடைஞ்சிருக்கும்போது உங்க படம் வர்ரதுல உங்களுக்கு பதட்டம் இல்லையா..?” என்றதற்கு தன்னபிக்கையுடன் பதில் வருகிறது அவரிடமிருந்து…
“விஜய் சார் படம் அவருக்காகவே பார்க்கிறாங்க. சூப்பர் ஹீரோவான அவர் என்ன கேரக்டர்லயும் வரலாம். அதை நாம ரசிக்கலாம். தொழில்நுட்ப விஷயங்களும், பிரமாண்டமும் தாண்டி எந்தக் கேள்வியும் பெரிசா இருக்காது. ஆனா, எனக்காக சாம்பியன் படம் இல்லை. அதனால, எந்தத் தவறு இருந்தாலும் உடனடியா தெரிஞ்சிடும்.
அதனால, இந்தப்படத்துல கால்பந்தாட்ட விஷயங்கள்ள எந்தத் தப்பும் வராம பண்னியிருக்கோம். இந்தப்பட்த்து மேல இருக்கிற எதிர்பார்ப்புன்னா அது சுசீந்திரன் சார்மேல இருக்கிற நம்பிக்கைதான். அதைக் காப்பாத்துற அளவில கடுமையா உழைச்சு உருவாக்கியிருக்கிற படம். அதனால் ‘பிகில்’ பாத்து ரசிச்சவங்க இதைப் பார்த்தாலும் இரண்டுக்குமான ஒப்பீடு இல்லாம இது வேற முயற்சியா தெரியும். எங்க உழைப்புக்காக ரசிக்க முடியும்.
அதோட ‘பிகில்’ படத்துக்கு முன்னாலேயே தொடங்கிய படம் இது. நாலு வருஷத்துக்கு முன்னாடியே தொடங்கிட்டோம். இதுல நான் ஸ்கூல் பையனா தொடங்கி கல்லூரி மாணவனா வர்ரேன். அதனால அந்த மெச்சூரிட்டியை மேக்கப்பை நம்பாம, நேரடியா தெரிய வைக்கவும் இந்தக் காலக்கட்டம் தேவைப்பட்டது. இதுல முறையான பயிற்சிக்கும் ஒரு வருஷம் செலவிட வேண்டி இருந்தது.
அதோட விளையாட்டு சாதனையை மீறிய ரிவஞ்ச் ஒண்ணும் படத்துல இருக்கு. அது வித்தியாசமா இருக்கும்..!”
“ஸ்போர்ட்ஸ்னாலே கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமிருக்கும். டிரைலர்ல அசத்தலா நீங்க அடிக்கிற ஷாட்கள் உண்மையானவையா, கிராபிக்ஸா..?”
“ஒவ்வொரு காட்சியும் உண்மையிலேயே பண்னியது. கிராபிக்ஸ் எங்கேயும் பயன்படுத்தலை. நீங்க டிரைலர்ல பார்த்த அந்த ஷாட் எல்லாம் நான் உண்மையாகவே அடிச்சது. மண் தரை உள்ள கிரவுன்ட்ல ஷூட் பண்ணியதால ரத்தக் காயமில்லாம ஷூட் முடிஞ்சு வீட்டுக்குப் போன் நாட்கள் குறைவு.
ரத்தம் சிந்தி நடிச்சிருக்கேன் சார். அதையெல்லாம் கிராபிக்ஸ்னு சாதாரணமா சொல்லிடாதீங்க..!”
“விலையாட்டுக்கு பயிற்சி சரி… காதல் காட்சிகள் நெருக்கமா இருக்கே… அதுக்கு எத்தனை நாள் பயிற்சி எடுத்தீங்க..?”
“கலாய்க்கிறீங்கன்னு நினைக்கிறேன். அதுக்கெல்லாம் பயிற்சி எதுவுமில்ல. டைரக்டர் அங்கே ஷாட்ல என்ன சொன்னாரோ அதை செய்தேன்… அவ்வளவுதான்..!”
வெட்கப்பட்டு சிரிக்கிறார் விஷ்வா. அதில் எதிர்கால விஜய்யோ, தனுஷோ கொஞ்சம் தெரிந்தார்கள்..!