வழக்கமாக, தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் அழகாக இருக்க வேண்டும் என்றுதான் ஆண்கள் விரும்புவார்கள். ஆனால், இந்தப் படத்தில் நாயகன் ரிஷி, அழகான பெண்கள் என்றாலே வெறுப்பதுடன் அழகற்ற அல்லது ஊனமுற்ற பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உடையவராக இருக்கிறார்.
அதற்குக் காரணம், அழகான ஒரு பெண்ணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்ட அவர் தந்தை பாதிக்கப்பட்டதால் மகனை அழகான பெண்கள் ஆபத்தானவர்கள் என்று சொல்லியே வளர்த்திருக்கிறார்.
இந்நிலையில், தான் வேலை பார்க்கும் வங்கிக்கு வரும் கரீனா ஷாவை பார்க்கும் ரிஷி, கரீனா முகம் தீயினால் பாதிக்கப்பட்டிருக்க, அவரைக் காதலிக்கத் தொடங்குகிறார்.
ஒரு விபத்தினால் பாதிக்கப்பட்டிருந்த கரீனா ஷாவுக்கு ரிஷியின் விபரீத குணம் தெரியாது. அழகற்ற தன்னையும் ஒரு ஆண் காதலிக்கிறானே என்று அவருக்கு சர்ப்ரைஸ் வைக்க, தன் முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகாகிறார். தன்னைப் பார்த்ததும் ரிஷி மகிழ்ச்சியடைவார் என்பது அவர் எண்ணம்.
ஆனால், கரீனாவை பார்த்தவுடன் அதிர்ச்சியாகும் ரிஷி கரீனாவின் முகத்தை சிதைக்க பல வழிகளில் முயல, கரீனாவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்த டாக்டர் இந்த விஷயம் தெரிந்து, கரீனாவை காப்பாற்ற முடிவெடுக்க, என்ன ஆனது என்பது படத்தின் மீதிக்கதை.
கிராமத்து பண்ணையார் தந்தையாகவும், நாகரிக மகனாகவும் இரு வேடங்களில் ரிஷி. இவ்வளவு காலம் எங்கே போயிருந்தார் என்று கேட்கும் அளவிற்கு இரண்டு வேடங்களிலும் வித்தியாசத்தைக் காட்டி சிறப்பாக நடித்திருக்கிறார்.
அதிலும் இருதலைக் கொள்ளி எரும்பாக தவிக்கும் மகன் வேடத்தில் தன் தவிப்பை நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார் ரிஷி.
அழகிப் போட்டியில் வென்றவராக வரும் கரீனா ஷா, இன்னொரு பக்கம் தீயினால் பாதிக்கப்பட்ட முகத்துடனும் வருவதால் அவருக்கும் கிட்டத்தட்ட இரண்டு வேடம் போன்ற கெட்டப். வழக்கமான ஹீரோயின்கள் போல் வந்தோம் போனோம் என்று இல்லாமல் கதைக்கு வலு சேர்க்கும் விதத்தில் கரீனா கவனிக்க வைக்கிறார்.
வித்தியாசமான ஒரு கதையை கொடுத்துள்ள இயக்குனர் கோ.ஆன்ந்த் சிவா, நடிகராகவும் இரண்டு வேடங்களில் தலைகாட்டி இருக்கிறார்.
இவர்களுடன் ஆதேஷ் பாலா, மனநல மருத்துவராக ஆனந்தன், சிங்கமுத்து நடித்திருக்கிறார்கள்.
தயாரிப்பாளரே ஒளிப்பதிவு செய்திருப்பதால் ஆர். தீபக்குமார் பட்ஜெட்டுக்கு தக்கவாறு உழைத்து இருக்கிறார்.
இலக்கியன் இசையில் வெ.இறையன்பு, தமிழ் முருகன் ஆகியேரின் பாடல்களை ரசிக்கலாம்.
அழகு இருக்கும் இடத்தில் ஆபத்து இருக்கும் என்ற வழக்கமான சிந்தனையே மாற்ற முயற்சித்து இருக்கும் இயக்குனருக்கு பெரிய நடிகர்களும் பட்ஜெட்டும் கிடைத்திருந்தால் இன்னும் கவனிக்கத்தக்க படத்தை கொடுத்திருப்பார்.
பியூட்டி – பாஸ் மார்க்..!