April 26, 2024
  • April 26, 2024
Breaking News
March 15, 2023

மெமரீஸ் திரைப்பட விமர்சனம்

By 0 178 Views

சற்றே புதுமையான கதைக் களத்தையும் திரைக்கதையையும் கொண்டிருக்கும் படம்.

கிறிஸ்டோபர் நோலனின் ‘இன்செப்ஷன்’ படத்தை போல ஏன் ஒரு படத்தைத் தமிழில் எடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் உருவான ‘கன்சப்ஷன்’ ஆக இந்தப் படம் இருக்கக்கூடும்.

ஒருவர் மனதில் இருந்து நினைவுகளை நீக்கி சில மணி நேரத்துக்கு வேறு நினைவுகளை உள்ளே புகுத்த அறிவியலால் முடியும் என்ற கற்பனைக் களம் கொண்ட கதை இது.

வித்தியாசமான ஒரு டிவி ஷோ அரங்கேற அதை நடத்துகிறார் ஹரிஷ் பெராடி. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நாயகன் வெற்றி தன் வாழ்வில் நம்ப முடியாத ஒரு கதை நடந்திருப்பதாக அதனைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.

அதில் ஒரு குடும்பத்தில் நால்வர் கொலை செய்யப்பட, அந்த கொலைகளை செய்தது ஒரு உதவி இயக்குனர் என்று அதைத் துப்பறியும் அசிஸ்டன்ட் கமிஷனர் கண்டுபிடிக்கிறார். ஆனால் அந்த அசிஸ்டன்ட் டைரக்டருக்கு தன் நினைவுகள் அற்றுப் போக அவரை சுய நினைவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே இந்த கேசை முடிக்க முடியும் என்ற சூழலில் மனநல மருத்துவரை நாட வேண்டி வருகிறது.

மேலே சொன்ன இந்தக் கதையே மூன்று முறை இந்தப் படத்துக்குள் சுற்றிச் சுழன்று வருகிறது. முதல் இரண்டு கதைகள் காட்சிகள் ஆகவும், கடைசியாக சொல்லப்படும் கதை விவரிப்பின் அடிப்படையிலும் நடக்கிறது.

வெற்றி, ஹரிஷ் பெராடி, ஆர்.என்.ஆர் மனோகர், ரமேஷ் திலக் பங்கு பெறும் இந்த மூன்று கதையிலும் நால்வருமே வேறு வேறு பாத்திரங்கள் ஏற்று வருகிறார்கள். 

முதல் கதையில் அசிஸ்டன்ட் டைரக்டராக வரும் வெற்றி அடுத்த கதையில் அசிஸ்டன்ட் கமிஷனராகவும், மூன்றாவது கதையில் மனநோய் மருத்துவராகவும் வருகிறார். இதேபோன்று மற்ற நடிகர்களும் பிற பாத்திரங்களில் மாறி மாறி வருகிறார்கள். இதுவே புதுமையாகவும், ஆனால் சற்றே குழப்பமாகவும் இருக்கிறது.

கடைசியில் கிளைமாக்ஸ் வரும்போது ஹரிஷ் பெராடியும் இந்த கதைக்குள் இருக்கிறார் என்பது புரிகிறது. அவரே மனநோய் மருத்துவராகவும் வருகிறார்.

இந்தக் கதை புரிந்தால் மட்டுமே எப்படி முடியும் என்பதை யூகிக்க முடியும் அல்லது படத்தைப் பார்த்தாலும் புரிந்து கொள்ள முடியும்.

இப்படித் தமிழில் ஒரு படத்தை எடுக்க நினைத்த தயாரிப்பாளர் சிஜூ தமீன்ஸ் தைரியத்துக்குப் பாராட்டுகள். அதேபோல வித்தியாசமான இந்தக் கதையை இயக்க முடியும் என்று நினைத்த இரட்டை இயக்குனர்கள் ஷியாம், பிரவீனுக்கும் பாராட்டுகள்.

இவர்களை விட துண்டு துண்டாக எடுத்த இந்தப் படத்தின் கதையைப் புரிந்து கொண்டு இதனை குழப்பம் இல்லாமல் தொகுத்த எடிட்டர் சான் லோகேஷுக்கு டபுள் பாராட்டுகள்.

மற்றபடி ஒளிப்பதிவாளருக்கும் இசையமைப்பாளருக்கும் மற்றப்படங்களில் என்ன வேலையோ அந்த வேலைதான் இதிலும். அதை அவர்கள் கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

எல்லாப் படங்களிலும் ஒன்று போலவே நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு வெற்றிக்கு உண்டு. அதை மாற்றிக் காட்ட இந்தப் படம் பெரிதும் உதவி இருக்கிறது. ஏனென்றால்  நான்கு வேடங்களில் அவர் இதில் நடிக்க நேர எல்லாவற்றிலும் ஒரு வித்தியாசம் காட்ட வேண்டி வருகிறது.

அதிலும் பட ஆரம்பத்தில் டிவி நிகழ்ச்சியில் பேசும்போது கன்னங்கள் துடிக்க அவர் நடந்த நிகழ்ச்சியை விவரிப்பது உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது.

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே புரிந்து கொள்ள முடியாத அசிஸ்டன்ட் டைரக்டர் பாத்திரத்தில் அவர் மிளிர்கிறார்.

ஹரிஷ் பெராடி, ஆர்.என்.ஆர் மனோகர் ரமேஷ் திலக்கும் தங்கள் வேடங்களைப் புரிந்து கொண்டு சரியாகச் செய்திருக்கிறார்கள்.

நாயகியாக நடித்திருக்கும் பார்வதி குழப்பம் இல்லாமல் சொன்னபடி நடித்திருக்கிறார்.

படத்துக்கு வசனம் எழுதிய அஜயன் பாலா தன் பங்குக்கு தானும் குழப்பி விடாமல் முடிந்தவரை எளிமையாக இந்த கதையைப் புரிய வைக்க முயற்சி செய்திருக்கிறார்.

மெமரீஸ் – வித்தியாசமான நினைவலைகளை உருவாக்கும் முயற்சி..!