படம் வெற்றியடைந்தால் மொட்டை போடுவது ஒரு வகை. ஆனால், அந்த வெற்றிக்குக் காரணமான அர்ப்பணிப்புடன் மொட்டை போடுவது இன்னொரு வகை.
இதில் இரண்டாவது வகையாக ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் நிறுவனத்துக்காக தயாரித்து இயக்கும் ‘பூமராங்’ படத்தில் தனது தலையை மொட்டையடித்துக் கொண்டிருக்கிறார் அதர்வா. அதை சற்றும் எதிர்பார்க்காத படக்குழுவினரே அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார்களாம்.
அந்த நிகழ்வைப் பற்றி இயக்குனர் கண்ணன் கூறினார்.
“அதர்வா இயக்குனரின் நடிகர் என்பதை இன்னுமொரு முறை நிரூபித்து விட்டார். சினிமாவில் தனது ஆரம்ப காலகட்டத்திலேயே பாலாவின் பரதேசி படத்தில் யாரும் செய்யத் துணியாத கதாபாத்திரத்தில் நடித்து தன்னை நிரூபித்தவர் அவர்.
அருந்தாலும் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருக்கும் அவரை, மொட்டையடிக்க வேண்டும் என்று நான் கேட்பது நியாயமாக இருக்குமா என்று நிறைய யோசித்தேன். படத்தில் வரும் அவர் கதாபாத்திரத்தின் மூன்று வெவ்வேறு தோற்றங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி நான் விளக்கியவுடன், அவர் அதனுள் ஒன்றி ஒத்துக் கொண்டார்.
நானே தயங்கியபோதும், அவர் திடமான முடிவோடு மொட்டையடித்துக்கொண்டு வந்து நின்றது என்னை மட்டுமல்லாமல் எங்கள் யூனிட்டையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
மூன்றில் முக்கியமான ஒரு தோற்றத்தை பிரீத்திஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிசூஸா ஆகியோர் ப்ரோஸ்தடிக் முறையில் வடிவமைத்திருக்கிறார்கள். அதர்வா இந்த ப்ரோஸ்தடிக் ஒப்பனைக்காக பல மணி நேரம் செலவிட வேண்டியிருந்தது.
இப்படிப்பட்ட கடும் முயற்சியில் ஈடுபடும் எந்த ஒரு நடிகரும், கொஞ்சம் ஓய்வெடுக்கவே விரும்புவார்கள். ஆனால் அதர்வா உடனடியாக படத்தில் முக்கியமான இடத்தில் வரும் காட்சிகளுக்காக தனது தலையை மொட்டையடிக்கத் தயாரானார்.
இந்தக் காட்சிகளை ஒரு தனியார் மருத்துவமனையில் கடைசி கட்ட படப்பிடிப்பின் ஐந்து நாள்களில் படம் பிடிக்க முடிவு செய்தோம். மொட்டை அடித்ததால், இரண்டு மாதங்கள் எந்த படத்திலும் நடிக்காமல் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியது.
எங்கள் படத்துக்காக அவர் அந்தத் தியாகத்தைச் செய்தார். எங்கள் பூமராங்’ படத்திலும் ‘இமைக்கா நொடிகள்’ போலவே அவரின் அர்ப்பணிப்புக்காக ரசிகர்கள் பாராட்டுகளை தருவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்..!”