April 20, 2024
  • April 20, 2024
Breaking News
October 4, 2019

அசுரன் திரைப்பட விமர்சனம்

By 0 1167 Views

வட சென்னையில் வஞ்சக முகங்களைத் திரையில் காட்டிய வெற்றிமாறன் அடுத்த முயற்சியாக நெல்லைச் சீமைக்குப் பயணப்பட்டு நெகிழ வைக்கும் கதை ஒன்றைச் சொல்லும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார். அதற்கு உந்து சக்தியாக பூமணி எழுதிய ‘வெக்கை’ புதினமும், உறுதுணையாக தனுஷும், ஆதாரமாக தயாரிப்பாளர் எஸ்.தாணுவும்  இருந்திருக்கிறார்கள். 

தனுஷ் ஏற்றிருக்கும் சிவசாமி என்கிற நடுத்தர வயதுடைய, சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்து மனிதனின் கதையை ரத்தமும், கண்ணீரும் தெறிக்கச் சொல்லியிருக்கிறார் வெற்றிமாறன். பஞ்சமி நில மீட்பு காலத்தில் தொடங்கித் தொடர்கிற கதை.

‘சிவசாமி’யின் மீது சுமத்தப்பட்ட பணி, உடன் வந்த காதல், ஊற்றெடுத்த சுய மரியாதை, எதிர்பாராமல் அமைந்த குடும்பம், எதிர்ப்படும் ஏற்றத்தாழ்வு, எதிர்க்கும் சாதீயம் இவை பற்றியெல்லாம் ஒரு இரண்டரை மணிநேரத்தில் சொல்லி நம்மைக் கதை நடந்த காலத்துக்கே அழைத்துச் சென்றிருக்கிறார் அவர்.

அதில் தனுஷின் பங்கு மிகப்பெரியது. இதுவரை அவர் திரையில் வந்த வேடங்களெல்லாம் அவரது வயதுக்கானவையோ அல்லது குறைந்தவையாகவோ இருந்திருக்கின்றன. ஆனால், இதில் அவர் ஏற்றுக்கொண்டிருக்கும் சிவசாமி வேடம், அவர் வயதைக் காட்டிலும் முதிர்ந்தது.

அது மட்டுமல்லாமல் முழுக்க டிகிளாமரைஸ் செய்துகொண்டு ஒரு கிராமத்தானாகவே தெரியும் அவரது அர்ப்பணிப்பு மகத்தானது. பிறந்த குடும்பத்தை இழந்து… அமைந்த குடும்பத்தையாவது காப்பாற்றிக் கொள்ள தன் சுயமரியாதையையும், வீரத்தையும் இரண்டு கக்கத்துக்குள்ளும் மறைத்து வைத்து நடக்கும் அடக்கம்… அற்புதம்..!

மூத்த மகனின் உயிருக்காக… அது நியாயத்துக்குப் புறம்பாக இருந்தும் ஊர்க்காரர்களின் வீட்டுக்கு வீடு போய் அவர்களின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்கும் அவலத்தை ஆகட்டும், அப்படியும் அவன் உயிரைக் காக்க முடியாமல் வீறிடும் கதறலில் ஆகட்டும், மீதி இருக்கும் மகன், மகளையாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்ற பொறுப்பில் பொங்கி வரும் கோபத்தை அடக்கிக் கொண்டு அமைதி பெறுவதில் ஆகட்டும், அந்த அமைதியே பதின்பருவம் நிரம்பாத தன் இன்னொரு மகனையும் கொலைகாரனாக்கியது கண்டு பொருமுவதில் ஆகட்டும்… அந்த மகனும் “அண்ணன் செத்ததுக்கு நீ செத்துப் போயிருக்கலாம்…” என்று பொங்கியது கண்டு நாடி ஒடுங்கி நிற்பதில் ஆகட்டும்… அந்த மகனையும் இழக்க நேர மறைத்து வைத்திருந்த ரௌத்திரத்தை மீண்டும் கையில் எடுப்பதில் ஆகட்டும்… இன்னொரு தேசிய விருதுக்கு பரிந்துரை செய்ய வைக்கிறார் தனுஷ்.

அவருக்கு நிகராக மனத்தில் பதிகிறார் அவர் மனைவியாக வரும் மஞ்சு வாரியர். “தன் குடும்பத்தைக் காப்பாத்த இவ்வளவு பேர் உயிரை எடுத்திருக்கான்னா இவன்தான் என்னையும், என் புள்ளையையும் வச்சு நல்லா பாத்துப்பான்…” என்று கொலைகாரர் தனுஷை மணக்கச் சம்மதிப்பதில் தொடங்கி, சொன்னதுடன் நிற்காமல் தங்கள் கிணற்றில் நீரைறைக்கும் ஆதிக்க வர்க்கத்தினரை சங்கில் தொரட்டி வைத்து இழுக்கும் தோரணை வரை நெல்லைச் சீமையின் வீரத் தமிழச்சியை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார் மஞ்சு வாரியர். அவரது போராட்ட குணத்துக்காக அவரை மஞ்சு ‘Warrior’ என்றே சொல்லலாம்.

இவர்களது மகன்களில் கொஞ்ச நேரமே வரும் வரும் டீஜே அருணாசலமும், படம் நெடுக வரும் கென் கருணாஸும் அற்புதத் தேர்வுகள். அதிலும் தன் தந்தையின் மனசாட்சியை வெளியே கொண்டுவரும் பதின்வயது பாலகன் கென் நடிப்பிலும் அசத்தியிருக்கிறார்.

எந்த ஏற்பாடும் செய்துகொள்ளாமல் எதிரியைக் கொலை செய்யப்போகும் அவர் எப்போது மாட்டிக்கொள்வாரோ என்று பதைபதைக்க வைக்கிறார். அத்துடன் “என்னை பாத்துக்க எனக்குத் தெரியும்…” என்று பெரிய மனுஷத்தனமாகச் சொன்னாலும் நெருக்கடியில் மாட்டிக்கொள்ளும்போது குழந்தையாகி நெகிழ வைக்கிறார். சீக்கிரமே ஹீரோவாகப் பார்க்கலாம் கென்னை..!

மஞ்சு வாரியரின் அண்ணனாக வரும் பசுபதியின் நடிப்பு பற்றித் தனியாகச் சொல்லவேண்டியதில்லை. ஆனால், சாதீயத்தைத் தூக்கிப் பிடிக்கும் இயக்குநர்கள் ஏ.வெங்கடேஷும், முதல் முறையாக நடிப்புக்குள் வந்திருக்கும் இன்ஸ்பெக்டர் பாலாஜி சக்திவேலும் அப்படிப் பொருந்தியிருக்கிறார்கள்.

யார் என்ன நடித்தாலும் தன் நடிப்பில் தனிப்பாதை வகுத்துக்கொள்ளும் பிரகாஷ்ராஜ் வழக்கம்போலவே இதிலும் நடிப்பில் பிரமிக்க வைக்கிறார். ‘வேணுகோபால சேஷாத்ரி’ என்ற பெயரைத் தாங்கி வரும் வழக்கறிஞராக உடல் மொழியிலேயே இனக் குறியீடு மற்றும் இரண்டு பருவங்களையும் காட்டி மிகையில்லாமல் மின்னியிருக்கிறார். துணைப் பாத்திரத்துக்கான இன்னொரு தேசிய விருதுக்கு இவரைப் பரிந்துரைத்தே ஆக வேண்டும்.

தனுஷின் அண்ணனாக வரும் சுப்ரமணியம் சிவா, அடையாளம் காண முடியாத அளவுக்கு தோழர் பாத்திரத்தில் தோள் கொடுத்திருக்கிறார். அதில் தனித்து ஒலிக்கும் அவரது பின்னணிக்குரலும் ஒரு காரணம்.   

அதிகப் படங்களில் பார்த்து சலித்த ஆடுகளம் நரேனும், பவனும் மட்டுமே உயிரோட்டமுள்ள இந்த வாழ்க்கையை சினிமாவாக உணரவைக்கிறார்கள்.  

ஜிவிபிரகாஷின் கிராமிய மணம் கொண்ட பாடல்களுக்கான இசையும், குறிப்பாக பின்னணி இசையும் மிரட்டியிருக்கின்றன. வேல்ராஜின் ஒளிப்பதிவு வறண்ட பூமியையும், வறண்ட மனங்களையும் நன்றாகவே காட்சிப் படுத்தியிருக்கிறது. அவரும் ஒரு கேரக்டரில் வந்து நடிப்பிலும் “அடடே…” போட வைக்கிறார்.

தனுஷின் பிளாஷ்பேக்கில் வரும் அம்மு அபிராமி நெஞ்சை அள்ளுகிறார். செருப்பு போட்டுக்கொண்டு ஊருக்குள் நடந்ததால் உருக்குலைந்து போகும் அவரது பாத்திரம் உருக்கமானது.

படம் நெடுக நின்று கண்ணுக்குத் தெரியாமல் பாராட்டுப் பெறுபவர் வசனகர்த்தா ‘சுகா’. நெல்லைத் தமிழ் வசனங்களுக்கு இவரை விட்டால் ஆளில்லை எனலாம். துரத்தும் ஆபத்துக்குப் பயந்து கென்னுடன் காட்டில் இறங்கிச் செல்கையில் தனுஷ் காட்டில் எப்படி நடந்து கொள்ளவேண்டுமென்று சொல்ல, “இது தெரிஞ்ச பழைய காடுதானே..?” என்று கென் சொல்ல, “ஆனா… குத்தம் செஞ்சுபதுங்கிப் போறது புதுசாச்சேடா..?” என்று தனுஷ் சொல்வது நயம்.

அதுபோல், இறுதிக் காட்சியில் “நம்ம பணம், நிலம் எல்லாத்தையும் அவனுங்க பிடுங்கிப்பாங்க. ஆனா, நம்ம படிப்பை அவங்களால பிடுங்க முடியாது. நீ நல்லா படி…” என்று மகனுக்கு தனுஷ் உரைப்பது இயல்பான உரையாடல் மட்டுமன்றி சமூகத்துக்கான நீதி.

படம் நெடுக தெறிக்கும் ரத்தம் உறுத்தல். வெற்றிமாறனின் இயக்கக் குறியீடே ரத்தம் மட்டும்தான் என்று ஆகிவிடாமல் அடுத்தடுத்த படங்களில் அவர் பார்த்துக்கொள்ளலாம். அதே போல் காலம் காலமாக சாதியம் தம்மை அடிமைப்படுத்தியதை வாழ்வின் ஓரிடத்திலும் அறிந்துகொள்ளாமலிருக்கும் தனுஷ், தான் பாதிக்கப்படும்போது மட்டும்தான்… அதுவும் அன்றைக்குதான் சாதியக் கொடுமைகள் தொடங்கியதைப் போல் உணர்வது பலவீனம்.

அசுரன் – ரௌத்ர தாண்டவம்..!

– வேணுஜி