மணிரத்னத்தைப் பொறுத்தவரை இளையராஜாவில் ஆரம்பித்து, கருத்து மோதலில் ஏ.ஆர்.ரஹ்மானை சினிமாவுக்குக் கொண்டு வந்தவர். ‘ரோஜா’வில் தொடங்கிய ரஹ்மானுடனான பந்தம் இன்று வரை தொடர்கிறது.
அதேபோல் ஷங்கருடைய முதல் படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மானே அவரைப் பெரிய அளவில் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் ஷங்கர் சூழ்நிலைக்கே முக்கியத்துவம் தருபவர் என்பதை இடையில் ‘அந்நியன்’, ‘நண்பன்’ படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜை ஒப்பந்தம் செய்து உலகுக்குப் புரிய வைத்தார்..
இப்போது மேற்படி இருவருமே தங்களது அடுத்த படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானை இசைக்க விடாமல் கைவிட்டு விட்டார்கள்.
ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்துக்கு இசையமைப்பவர் ‘அனிருத்’ என்ற தகவல் ஏ.ஆர்.ரஹ்மானை விட இசை ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது.
காரணம், இப்போது ‘பேட்ட’ படம் வசூல் ரீதியாக வெற்றியடைந்தாலும் அதன் மைனஸ்களில் ஒன்று அனிருத்தின் பின்னணி இசைதான் எனலாம். பாடல்கள் ஹிட் ஆனாலும் அத்தனையும் எளிதில் கண்டுபிடித்து விட முடிகிற பழைய டியூன்கள்..!
என்ன காரணத்துக்காக ஷங்கர் அனிருத்தைப் பிடித்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.
அடுத்து மணிரத்னம் ஒரு சரித்திரப்படம் எடுக்கவிருப்பதாகத் தகவல்கள் வந்த நிலையில், அதற்கு முன்னதாக ஒரு அவசரப்படம் இயக்கவிருக்கிறாராம். அதற்கு இசை 96 புகழ் ‘கோவிந்த் வசந்தா’ என்கிறார்கள்.
இசைப்புயல் தன் இசையால் யாரையும் கைவிடாத நிலையில் மற்றவர்கள் அவரைக் கைவிடுகிறார்கள் என்றால் இழப்பு அவருக்கு அல்ல..!