வித்தியாசமான சிந்தனை உள்ள படங்களை அதன் தலைப்பே காட்டிக்கடுத்துவிடும் அப்படி ஒரு படம்தான் அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க…
சிறுவயது காதல் வாலிபர் காதல் என்றெல்லாம் தமிழ் சினிமாவில் பார்த்து அலுத்துப் போன இந்தப் படத்தின் இயக்குனர் இதில் தள்ளாத வயதில் காதலை மட்டும் தள்ளாத ஒரு ஜோடியை பற்றிய கதை சொல்லியிருக்கிறார்.
காதலர்களை சேர்த்து வைப்பது என்றால் அவர்களுடைய நண்பர்களுக்கு ஏக குஷி. அது வாலிப வயது ஆனாலும் சரி வயதான காலத்திலும் சரி அப்படி வயதான ஜோடிகள் சந்திஹாசன், ஷீலாவை அவர்களது நண்பர்கள் சேர்த்து வைக்க முயற்சி செய்யும் கதைதான் இது.
கமலஹாசனின் அண்ணன் சாருஹாசன் புகழ்பெற்ற நடிகராக இருக்க மிகச்சில படங்களில் மட்டுமே நடித்திருக்கும் கமலின் இன்னொரு அண்ணன் சந்திரஹாசன் ஹீரோவாக ஆகியிருக்கும் படம் இது. இவர் நடித்த கடைசி படமும் இதுவே என்பது கூடுதல் செய்தி.
கமல் குடும்பத்திற்கு யாரும் நடிப்பை கற்றுத்தர வேண்டியதில்லை என்கிற அளவில் சந்திரஹாசனும் இந்த வயதில் அந்த பாத்திரத்தை சரியாக புரிந்து கொண்டு நடிப்பில் அசத்தியிருக்கிறார். இன்னும் இளமையான வயதில் நடிக்க வந்து இருந்தால் இவரும் ஒரு சுற்று வந்து இருப்பார்.
அதேபோல் கதாநாயகியாக நடித்திருக்கும் ஷீலா. டிவி சீரியல் பார்ப்பவர்களிடத்தில் மிகப்பிரபலம். ஆனால் சினிமா மட்டுமே பார்க்கும் ரசிகர்களுக்கு இவர் யார் என்பது ஒரு கேள்வி குறியாக இருக்கும். அவர்களுக்கான ஒரு பதில் நடிகர் விக்ராந்தின் அம்மா தான் இந்த ஷீலா. அதாவது விஜய்யின் சித்தி.
டிவியில் நடித்த அனுபவத்தில் இந்தப் படத்திலும் தன் நடிப்பில் நேர்த்தியை தொட்டிருக்கிறார் ஷீலா டிவி பிரியர்களுக்கு இந்த படம் கூடுதல் மகிழ்ச்சியை தரும். படம் முழுவதும் அதிகம் பேசாமல் வந்தாலும் பேச வேண்டிய கிளைமாக்ஸில் நச்சென்று வசனங்களை பேசி அசத்தியிருக்கிறார்.
ஒருபக்கம் சந்திரஹாசன் ஷீலாவை அவர்களது குடும்பத்தினர் தேடிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் அவர்களது நண்பர்களாக டெல்லி கணேஷ், காத்தாடி ராமமூர்த்தி, சண்முகசுந்தரம், ஜெயராவ், முதலானோர் இந்த ஜோடியை சேர்த்து வைக்க முயற்சிப்பதும் சுவாரசியமான கட்டங்கள்.
காஞ்சிபுரம் படத்தின் கதை களமாக இருப்பதால் அந்த மாவட்டத்தில் காரர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
படத்தில் களமும் பட்ஜெட்டும் சிறியதாக இருப்பதால் ஒருவித நாடகத் தன்மையுடன் நகருகறது படம்.
இருந்தாலும் வயதானவர்களின் பிரச்சனையை தொட்டு ஒரு கதை சொன்னதற்காக இயக்குனர் ஸ்டீபன் ரங்கராஜனைப் பாராட்டலாம்.
வயதில் மூத்தவர்கள் வீட்டில் இருந்தால் அதை ஒரு பிரச்சினையாக கருதும் இன்றைய இளம் தலைமுறையினர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
அன்புக்கு ஏங்கும் அப்பத்தாவ ஆட்டைய போட்டது தப்பில்லை..!