December 26, 2024
  • December 26, 2024
Breaking News
December 25, 2024

அலங்கு திரைப்பட விமர்சனம்

By 0 121 Views

மன்னர்கள் காலத்திலிருந்து விண்வெளி சென்றது வரை நாய்களுக்கு இந்தப் பூவுலகில் தனி இடம் உண்டு. மனிதர்களுக்கு நாய்கள் உதவுவது காலம் காலமாக நடைபெறும் நிகழ்வு என்று இருக்க, இந்தப் படத்தில் அதற்கு மாற்றாக ஒரு நாயின் நல்வாழ்வுக்கு சில மனிதர்கள் எவ்வாறு உதவுகிறார்கள் என்று சொல்கிறார் இயக்குனர் எஸ்.பி.சக்திவேல்.

தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள மலை கிராமத்தில் நடக்கிறது கதை. அங்குள்ள பழங்குடிகளில் பலர் மலையை விட்டுக் கீழே இறங்கி நடைமுறை வாழ்க்கைக்கு வந்து விட்டாலும் ஒரு சிலர் மட்டும் பூர்விகம் தொட்டு மலைகளிலேயே வசித்து வருகின்றனர்.

அப்படி நாயகன் குணாநிதியின் அம்மா ஶ்ரீ ரேகா, காட்டில் கணவன் யானைக்கு பலியாகியும் கூட தாங்கள் வாழ்ந்து பழக்கப்பட்டு விட்ட மலை கிராமத்தில் இருந்து வெளியேற மனமின்றி மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். 

கணவனைப் போல் பிள்ளைகளுக்குக் காட்டு வேலை வேண்டாம் என்று அவர்களைப் படிக்க வைக்கிறார். 

பட்டய வகுப்பில் படித்து வரும் நாயகன் குணாநிதியும் அவரது நண்பர்களும் அவ்வப்போது பண்ணை வேலைகளைச் செய்து வருகிறார்கள். அப்படி ஒரு நாள் நோய்வாய்ப்பட்ட நாய் ஒன்றை இறந்து விட்டதாக அடக்கம் செய்யச் செல்லும்போது அது இறக்கவில்லை என்று தெரிகிறது. ஆனால் பணித்தவர், அதைக் கொன்றுவிடச் சொல்கிறார். அதற்கு மனமில்லாத குணாநிதி அந்த நாயைத் தானே எடுத்து வளர்க்க ஆரம்பிக்கிறார். இதில் வேலை கொடுத்தவருக்கும் அவருக்குமான முரண் ஒன்று ஏற்படுகிறது. 

இன்னொரு பக்கம் கல்விச் செலவுக்காக அவரிடமே தங்கள் நிலத்தை வைத்து வட்டிக்குப் பணம் வாங்கியிருக்க, அது தொடர்பான கடனைத் தீர்க்க நண்பர்களுடன் சிறிது காலம் கேரளா சென்று வேலை பார்க்கிறார் குணாநிதி. போகும்போது மறக்காமல் நாயையும் உடன் அழைத்துச் செல்கிறார்கள்.

இவர்கள் அங்கே வேலைக்குச் சென்ற நேரம் முதலாளி செம்பன் வினோத்தின் செல்ல மகளை நாய் ஒன்று கடித்து விட, அந்த ஏரியாவில் இருக்கும் அத்தனை நாய்களையும் கொன்று விடச் சொல்கிறார் அவர். 

அவருக்கு வலது கையாக இருக்கும் சரத் அப்பானி அந்த வேலையைச் சிரமேற்கொண்டு அத்தனை நாய்களையும் வேட்டையாட அதில் குணாநிதியின் நாயும் அகப்பட்டுக் கொள்கிறது. அதை மீட்க முயலும் போராட்டத்தில் விபத்தாக சரத் அப்பானியின் கையை வெட்டி விடுகிறார் குணாநிதி.

அந்த ஏரியாவில் செல்வாக்கு பெற்ற அவர்களை எதிர்த்த பஞ்சம் பிழைக்க போன குணாநிதியின் கதி என்ன என்பது பரபரப்பான பின் பாதி. 

நாயகனாக நடித்திருக்கும் குணாநிதியின் நடிப்பு வேட்கை புரிகிறது. தன் நிலை என்னவென்று உணராமல் எல்லா இடங்களிலும் தவறுகளைத் தட்டி கேட்டு ஆபத்தை விலைக்கு வாங்கிக் கொள்ளும் அந்தப் பாத்திரத்தில் ஒன்றி அபாரமாக நடித்திருக்கிறார் குணா. இவருக்குத் தமிழில் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. 

 

அவர் பதினாறு அடி பாய்கிறார் என்றால் அவரது அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீ ரேகா 32 அடி பாய்ந்திருக்கிறார் அப்படியே அந்த மலை கிராமத்துப் பழங்குடிப் பெண்ணாக… அதிலும் சற்றே மாற்று செவித்திறன் கொண்டவராக வாழ்ந்தே இருக்கிறார். பை நிறைய நாட்டு வெடிகுண்டும் கையில் அரிவாள் கிடைத்தால் சீறிப்பாய்வதுமாக அவரைப் பார்க்க ஒரு பெண் சிங்கமாகவே தெரிகிறது. 

அவரது மகளாக வரும் சிறுமியும் அப்படியே அவரது மகள் போலவே அப்பட்டமாகப் பொருந்தி இருக்கிறார்.

மலையாள நடிகர் செம்பன் வினோத்தின் நடிப்பு பற்றி சொல்லவே வேண்டாம். வாராது வந்து வாய்த்த மகளுக்காகப் பாசத்தில் ஒரு சைக்கோவாக இருக்கும் அவர் எந்த நேரத்தில் வெகுண்டு எழுவாரோ என்று ஒவ்வொரு கணமும் எதிர்பார்க்க வைக்கிறார். 

அத்தனை பெரிய முரட்டு யானையின் தங்க அங்குசமாக வருகிறார் அவரது மனைவியாக வரும் கொற்றவை. ஒரே ஒரு வார்த்தையில் அத்தனை பெரும் யானையின் மதத்தை அடக்கி விடுகிறார் அவர்.

அவர்களது செல்ல மகளாக வரும் தீக்ஷாவும் அழகில் கொள்ளை கொள்கிறாள்.

செம்பன் வினோத்தின் கையாளாக வரும் சரத் அப்பானியின் உருவம்தான் சிறியதே ஒழிய, உக்கிரம் பெரியது. தன் நாயை விட்டு விடச் சொல்லி குணாநிதி வந்து கேட்கும்போது ஒரு நாயைக் கொண்டு வந்து அதன் தலையைச் சீவி பதை பதைக்க வைத்து விடுகிறார்.

குணாநிதியின் நண்பர்களாக வரும் இதயகுமார், மாஸ்டர் அஜய் நட்புக்கு இலக்கணமாக மனதில் பதிகிறார்கள். 

குணாநிதியின் எல்லா நல்லது கெட்டதுகளுக்கும் உடன் இருக்கும் மாமனாக காளி வெங்கட் கவனத்தைக் கவர்கிறார்.

படத்தில் வரும் போலீஸ் மற்றும் காட்டிலாகா அதிகாரிகளை எப்படித்தான் பிடித்தார்களோ..? அவர்களின் தேர்விலும் நடிப்பிலும் ஒரு சிறிதும் சினிமாத்தனம் இல்லை.

படத்தில் நம்மை ஒன்றைச் செய்யும் விஷயங்களில் முதலாவது அந்தந்தப் பாத்திரங்களுக்குண்டான நடிக, நடிகையரின் தேர்வும், இயல்பு நிலை மாறாத காட்சி ஆக்கமும்தான்.

படம் முடிந்து வெளியே வரும்போது அந்த மலை கிராமத்திலேயே வாழ்ந்து விட்டு வந்த உணர்வுதான் நமக்கு ஏற்படுகிறது.

போகிற போக்கில் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டில் கொட்டப்படும் மாமிச கழிவுகள், அங்கே மாட்டு இறைச்சியில் நாய் இறைச்சியும் கலக்கப்பட்டதாக வந்த செய்தி, ரேபிஸ் நோயின் கொடூரத் தாக்கம் என்று கதைக்குத் தேவையான எதையும் தவறவிடாமல் திரைக்கதையில் இணைத்திருக்கும் சக்திவேலின் சினிமா அரசியல் வெகு எதார்த்தம்.

அவருக்கு இரு கண்களாகச் செயல்பட்டு இருக்கும் இசையமைப்பாளர் அஜீஷும், ஒளிப்பதிவாளர் பாண்டித்துரையும் பாராட்டுக்குரியவர்கள். 

காடு என்பதால் இடையே வரும் யானை, பாம்பு, ஓநாய்கள் என்று அனைத்தையும் காட்சியில் கொண்டு வந்திருக்கும் கவனம் நன்று.

(இயக்குனரிடம் கேட்க வேண்டிய ஒரே கேள்வி… அழிந்து போன நாய் வகையான அலங்கு என்று படத்துக்கு ஏன் டைட்டில் வைத்தீர்கள் என்பதைத்தான்.)

இப்படி ஒரு படத்தைத் தயாரிக்க முன்வந்த சபரிஷ், சங்கமித்ரா செளமியா அன்புமணியையும் பாராட்டாமல் விட்டால் தவறு.

வெற்றியும், விருதுகளும் தேடி வரும் சாத்தியம் பெற்ற இந்தப் படத்தைக் குடும்பங்கள் கொண்டாடலாம்.

அலங்கு – அடைக்க இயலா அன்பு..!

– வேணுஜி.