January 13, 2025
  • January 13, 2025
Breaking News
December 27, 2024

மழையில் நனைகிறேன் திரைப்படம் விமர்சனம்

By 0 100 Views

கவித்துவமான தலைப்பை பார்த்த உடனேயே இது காதல் கதை தான் என்பது தெரிந்து விடும். அதனால் இதுவரை பார்த்த அத்தனை காதல் படங்களின் பாதிப்புகளும் இந்த படத்தில் இருப்பதை இயக்குனர் டி. சுரேஷ்குமாரால் தவிர்க்க முடியவில்லை. 

நாயகன் அன்சன் பால் ஒரு கோடீஸ்வரர் வீட்டுப் பிள்ளை. அதற்குரிய இலக்கணங்களோடு(!) அப்பாவின் தொழிலையும் கவனிக்காமல், கல்லூரிப் படிப்பையும் முடிக்காமல் நண்பர்களுடன் சுற்றித் திரிகிறார். 

ஒரு சுபயோக சுப தினத்தில் மழையில் நனையும் நாயகி ரெபா மோனிகா ஜானைப் பார்த்த அன்சன், ஆன் தி ஸ்பாட் அவர் மேல் காதல் கொள்கிறார். ஆனால் ரெபாவோ அமெரிக்கா சென்று மேற்படிப்பு படிக்கும் திட்டத்தில் இருக்கிறார். 

இதனால் தன்னைச் சுற்றிச் சுற்றி வரும் அன்சனை தவிர்க்க நினைக்கிறார். அன்சன் தன் காதலை எடுத்துக் கூறியும் அதை ஏற்க மறுக்கிறார் ரெபா. “நீ காதலிக்காவிட்டால் பரவாயில்லை… நான் உன்னைக் காதலித்துக் கொண்டுதான் இருப்பேன் ஆனால் ஒருநாள் நீ என்னை தேடி வருவாய்..!” என்று அன்சன் தன் காதலை தன் மனதுக்குள்ளயே போட்டு புதைத்துக் கொள்கிறார். 

அவர் எதிர்பார்த்தது போலவே (நாமும் எதிர்பார்த்ததைப் போலவேதான்) ஒரு கட்டத்தில் ரெபாவுக்கு அன்சன் மேல் காதல் துளிர்க்க அவர்கள் காதல் கைகூடியதா என்பது மீதிக் கதை. 

அன்சனுக்கு அம்சமான உடல் வாகு. நல்ல உயரம், நிறம், அழகு எல்லாமே அமையப்பெற்ற அவர் தன் பாதையை செப்பனிட்டுக் கொண்டால் முதல் நிலை நடிகராக வலம் வர முடியும். நடனம், சண்டை எல்லாவற்றிலும் திருப்திகரமாக செய்திருக்கும் அன்சன் நடிப்பிலும் குறை சொல்ல முடியாத அளவில் திறமை காட்டி இருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ரெபாவுக்கு அவரது  தெற்றுப் பல்லும் அழகுதான். நடிப்பையும் சிறப்பாக வெளிக்காட்டி இருந்தாலும் சில காட்சிகளில் சற்றே எடை கூடித் தெரிவது ஏன் என்று தெரியவில்லை.

அன்சனின் அப்பா மேத்தீவ் வர்கீஸ், அம்மாவாக வரும் அனுபமா குமார் இருவரும் கோடீஸ்வர தம்பதிகள் என்பதற்கு பொருத்தமாக இருக்கிறார்கள். ஆனால் அத்தனை பெரிய கடற்கரை பங்களாவில் இவர்களை மூன்று பேர் மட்டுமே வசிக்கிறார்கள் என்பது ஏற்க முடியவில்லை. 

நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் சங்கர் குரு ராஜா, அன்சனின் நண்பராக நடித்திருக்கும்  கிஷோர் ராஜ்குமார் எல்லோருமே பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள். 

ஆனால் அவர்கள் காதலுக்கு வரும் பிரச்சினைகள் எல்லாமே பல படங்களில் பார்த்து சலித்தவையாக இருக்கின்றன. ஆனால் அதெல்லாம் கிளைமாக்சில் வந்து மாறிவிடும் என்று இயக்குனர் கணக்குப் போட்டு ஒரு டர்னிங் பாயிண்டு கொடுத்து இருக்கிறார். ஆனால் அதுவும் கூட பல படங்களில் பார்த்தது தான்.

விஷ்ணு பிரசாத்தின் இசை காதலுக்குத் தோதாக ஒலிக்கிறது.

ஜெ.கல்யாணின் ஒளிப்பதிவும் இளமைக்கு குறைவில்லாத. வண்ணப்பதிவாக ஒளிர்கிறது.

வசனங்கள் இயல்பாக இருக்கின்றன. ஓரிடத்தில் கிறிஸ்துவரான அன்சன், அய்யங்காரான ரெபாவைக் காதலிக்கப்போய் வறியவர் ஆனதைப் பார்த்து, “ஆயிரம் கார்களை வாங்க முடிஞ்ச நீ அய்யாங்கார் மட்டும் போதும்னு முடிவு பண்ணிட்ட..” என்று வரும் வசனம் ஹைலைட் ஆக இருக்கிறது.

காதலுக்கான பிரச்சினைகளை வித்தியாசமாக சிந்தித்து இருந்தால் இந்த படத்தை முழுமையாக ரசித்திருக்க முடியும். 

வெளியீடு என்று மழை வரும் என்கிறார்கள். மழையில் நனைந்து கொண்டே இந்தப் படத்தைப் போய்ப் பார்க்கலாம்.

– வேணுஜி