சந்தானத்தின் அடுத்த படமாக வெளிவருவது ‘ ஏஜென்ட் கண்ணாயிரம்’. இந்தப் படத்தில் துப்பறிவாளராக வருகிறார் சந்தானம்.
‘லேபிரிந்த் பிலிம்ஸ் ‘ சார்பாக மனோஜ் பீதா தயாரித்து இயக்கி இருக்கும் இந்த படம் தெலுங்கில் ஓடி வெற்றி பெற்ற ‘ ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா ‘ என்ற படத்தின் தமிழ் மறு உருவாக்கம் ஆகும்.
“ஆனால் அந்தப் படத்தை அப்படியே ரீமேக் செய்யவில்லை..!” என்கிறார் படத்தின் இயக்குனர் மனோஜ் பீதா. ஏற்கனவே வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீதா படம் பற்றிப் பேசியதிலிருந்து…
“தெலுங்கில் பார்த்த உடனேயே மனதைக் கவர்ந்த அந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நான் வாங்கி வைத்திருந்தேன். அதைத் தமிழில் எடுக்க ஆசைப்பட்டவுடன் முதலில் தோன்றிய நடிகர் சந்தானம்தான்.
சந்தானத்தை சந்தித்து கதை சொன்ன போது அவர் அதை மிகவும் ரசித்தார். ஆனால் உங்களது வழக்கமான காமெடி பஞ்ச் எதுவும் இந்த படத்தில் தேவைப்படாது என்று சொன்னபோது அவருக்கு அதிர்ச்சிதான்.
வழக்கமாக சந்தானத்தை நாம் எப்படி பார்க்க ஆசைப்படுகிறோமோ, எப்படி பார்ப்பதற்கு பழகி இருக்கிறோமோ அதுபோல் அமையாத ஒரு சந்தானம் படத்தை தரும் ஆவல் எனக்கு இருந்தது. எனவே என்னுடைய விருப்பத்தை புரிந்து கொண்டு சந்தானம் இந்த படத்துக்குள் வருவதற்கு கிட்டத்தட்ட ஒரு வாரம் பிடித்தது.
அதனால் அவர் இந்த இடத்தில் நான் இப்படி பேசுகிறேன் என்று பஞ்ச் வைத்த போதெல்லாம் அப்படி வேண்டாம் என்று சொல்லி அவரைத் தடுத்து இருக்கிறேன். ஒரு கட்டத்தில் அவரும் அதை புரிந்து கொண்டு என்னுடைய விருப்பப்படியே நடித்து முடித்தார். இந்தப் படத்துக்கு சந்தானம் கொடுத்த ஒத்துழைப்பை என்னால் மறக்க முடியாது.
அதற்காக படத்தில் காமெடியே இல்லை என்று சொல்லிவிட முடியாது அங்கங்கே தூவல் மாதிரி நகைச்சுவை இருக்கும் இருந்தாலும் நாம் தெரிந்து வைத்திருக்கக்கூடிய எதார்த்தமான ஒரு துப்பறிவாளன் எப்படி ஒரு விஷயத்தை கண்டுபிடிப்பாரோ அப்படித்தான் இந்த படத்தின் ட்ரீட்மெண்ட் இருக்கும்.
விஷால் நடித்த ‘ துப்பறிவாளன்’ படம் போலவோ அல்லது ஆங்கிலப் படங்களில் டிடெக்டிவ் வருவது போலவோ மிகவும் புத்திசாலித்தனமாக இந்தப் படம் நகராது. இருந்தாலும் படத்துக்குள் ஒரு அற்புதமான துப்பறியும் கதை இருக்கிறது.
இந்த துப்பறியும் கதைக்குள் ஒரு அம்மா மகன் சென்டிமென்ட்டுடன் கூடிய நெகிழ்ச்சியான பகுதியும் இருக்கிறது. அதுதான் படத்தின் அடிநாதம் என்று சொல்லலாம்.
யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த படத்துக்கு பெரும்பலமாக அமைந்திருக்கிறது அவரது இசைதான் இந்த இயல்பான துப்பறிவாளன் கதையை ஒரு மேற்கத்திய பாணியிலான துப்பறியும் படம் போல் எடுத்துக்காட்டுவதற்கு உதவி இருக்கிறது.
தேனி ஈஸ்வர் மற்றும் சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவும் அதற்கு உறுதுணையாக இருக்கிறது.
இதன் மூலப் படத்தை பார்த்தவர்களுக்கு கூட அதுதான் இந்த படம் என்று தெரியாத அளவில் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறோம். மூலப் படத்தின் கதை ஆந்திர தமிழ்நாடு எல்லையில் இருக்கும் ஒரு ஊரில் நடப்பதாக இருக்கும். இந்தப் படத்தில் வேறு ஒரு களம் வேண்டி கேரள தமிழக எல்லையோரத்தில் இருக்கும் ஒரு ஊரில் கதை நடப்பதாக எடுத்திருக்கிறேன்.
படத்தின் நாயகியாக ரியா சுமன் நடித்திருந்தாலும் இதில் சந்தானம் ரியா சுமனுக்கான வழக்கமான காதல் காட்சிகளோ பாடல்களோ இருக்காது.
சந்தானத்தின் இயல்புப்படி அவர் ஒரு துப்பறிவாளராக இருந்தால் அவர் என்னென்ன செய்ய முடியுமோ அந்த சாத்தியங்கள்தான் படத்தில் இருக்கும். இதில் வரும் சண்டைக் காட்சிகளும் அப்படியே.
படத்தில் சந்தானத்துடன் முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி இருவரும் இருப்பதால் அவர்கள் பகுதியில் நகைச்சுவை இருக்கும். இந்த மாத இறுதியில் வெளியாகவிருக்கிறது ‘ ஏஜென்ட் கண்ணாயிரம்..!”
படங்களில் வித்தியாசம் தேவைப்படுபவர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படமாக இருக்கும் ‘ ஏஜென்ட் கண்ணாயிரம்’ என்று நம்பலாம்.