இதுவரை வந்த ஆவி கதைகள் அத்தனை யிலும் அடிப்படையாக ஒரு கட்டடம் அல்லது மாளிகை இருக்கும். அதில் குடியேறுபவர்களை அங்கிருக்கும் ஆவிகள் விரட்டி அடிக்கும் அல்லது வெளியேறவே விடாது. அங்கிருக்கும் ஆவிகளுக்கு ஒரு நெகிழ்ச்சியான பிளாஷ்பேக் இருக்கும்.
இந்த அடிப்படையை வைத்துதான் காமெடியாகவோ சீரியஸ் ஆகவோ இதுவரை ஆவிக் கதைகளை பின்னி வந்திருக்கிறார்கள் கோலிவுட் இயக்குநர்கள்.
இதிலும் கிட்டத்தட்ட அதேதான் அடிப்படை. என்றாலும் மற்ற கதைகளில் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்ட முடிவெடுத்த இந்த படத்தின் இயக்குனர் பா விஜய், அதை நிறைவேற்றியும் காட்டியிருக்கிறார்.
தமிழ் மருத்துவத்தின் பெருமையை உலகறியச் செய்வதுதான் அது. இடையில் புகுந்துவிடட ஆங்கில மருத்துவத்தால் கிட்டத்தட்ட நம் பாரம்பரிய மருத்துவத்தை மருந்தே போய்விட்ட சூழலில் அதை மீண்டும் நினைவுபடுத்தும் முகமாக வந்திருக்கிறது இந்த படம்.
படத்தின் நாயகன் ஜீவா படத்துக்குள்ளும் சினிமாக்காரராகவே வருகிறார். ஆர்ட் டைரக்டராக இருக்கும் அவர் புதுச்சேரிக் காட்டுக்குள் இருக்கும் ஒரு பங்களாவை பிடித்து தன் சொந்த செலவில் புது படத்துக்கு செட் எல்லாம் போட்டு வைக்க, திடீரென்று தயாரிப்பாளர் படப்பிடிப்பை நிறுத்தி விடுகிறார்.
கையிலிருந்த காசை எல்லாம் அந்த செட்டுக்கு செலவழித்து விட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் ஜீவா அதை அப்படியே ஒரு டூரிஸ்ட் அட்ராக்ஷனாக மாற்றி ‘ஸ்கேரி ஹவுஸ்’ என்ற திகில் மாளிகையாக்கி விடுகிறார்.
எதிர்பார்த்தது போலவே அந்த விஷயம் கிளிக் ஆகும் வேளையில் உண்மையிலேயே அந்த வீட்டுக்குள் குடியிருக்கும் ஆவிகள் வருபவர்களை அளவுக்கு மீறி பயமுறுத்த அதில் ஒரு இளைஞர் காணாமல் போகிறார்.
எனவே அந்த வீட்டுக்கு போலீஸ் சீல் வைக்கிறது. வருமானமோ, தொழிலோ இல்லாமல் ஜீவா இருந்தாலும் அந்த ஆவிகளுக்கும் தனக்கும் ஏதோ தொடர்பு உண்டு என்று உணர்வதுடன், தன் தாயை பிடித்திருக்கும் கொடிய நோயிலிருந்து காப்பாற்றவும் அந்த மர்மத்தை அறிய முயல்கிறார். அதற்காக அவர் செய்தது என்ன என்பதுதான் மீதிப் படக் கதை.
நாயகனாக இருந்தாலும் ஜீவாவுக்கு பெரிய வேலை இல்லை. எனவே இலகுவாக நடித்துக் கடக்கிறார். எதிர்பாராத சர்ப்ரைஸாக வரும் இரண்டாவது வேடத்தில் அசத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ராஷி கண்ணா, ஜீவாவை காதலித்த காரணத்துக்காக அவருடனே படாத கஷ்டமெல்லாம் பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் மருந்துக்காவது கொஞ்சம் காதல் காட்சிகளை வைத்திருக்க வேண்டாமா, இயக்குநர்..?
இன்றைய சித்த மருத்துவர்கள் சிலர் கூட வேட்டி சட்டையிலேயே இருக்க, 1940 ல் சித்த மருத்துவராக வரும் ஆக்சன் கிங் அர்ஜுன் கோட் சூட்டுடன் வருவது வியப்பாக இருக்கிறது. ஆனால் அவர் பிரெஞ்சு வாழ் தமிழராக சித்த மருத்துவர் கதாபாத்திரத்தில் வருவதால் லாஜிக் இடிக்காமல் தப்பிக்கிறது.
இவர்களுடன் எட்வர்ட் சோனென், ப்ளிக் மாடில்டா ஆகியோர் திரைக்கதைக்கு பொருத்தமாக பயன்பட்டிருக்கிறார்கள்.
செந்தில், யோகி பாபு, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி என பல காமெடியன்களும் இருப்பது படத்துக்கு பெரிய பலம்.
யுவன் சங்கர் ராஜாவின் பங்களிப்பும் படத்தின் தூண் போன்றது. அவரது வழக்கப்படியே பாடல்களுக்கான இசை இருந்தாலும் அவரது அப்பாவின் ”என் இனிய பொன் நிலாவே…”வை ரீமிக்ஸ் மூலம் செய்து நம்மைக் குதூகலிக்க வைக்கிறார்.
ஒளிப்பதிவாளர் தீபக் குமாரின் பங்கு எந்த அளவுக்கு இருக்கிறதோ கலை இயக்குநர் பி.சண்முகத்தின் பங்களிப்பும் அதே அளவுக்கு இருப்பது பாராட்டத்தக்கது.
எழுதி இயக்கியிருக்கும் பா.விஜய், சித்த மருத்துவத்தின் பெருமையை உலகுக்கு உரக்கச் சொல்லி இருக்கிறார்.
அகத்தியா – தமிழனின் பெருமை..!
– வேணுஜி