November 22, 2024
  • November 22, 2024
Breaking News
February 3, 2024

சமூக செயல்பாட்டாளர்கள் 25 பேருக்கு ஒரு கோடி உதவித் தொகை அளித்த நடிகர் கார்த்தி

By 0 162 Views

கார்த்தி25 –

இந்த சமூகத்திற்கு வெவ்வேறு தளங்களில் உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் உதவித் தொகை அறிவித்த நடிகர் கார்த்தி, அதில் 25 சமூக செயற்பாட்டாளர்களின் செயல்களை கெளரவப்படுத்தி, தலா 1 லட்சம் வீதம் 25 லட்சம் வழங்கினார்.

இந்நிகழ்வில் கார்த்தி பேசியதிலிருந்து…

 “இங்கு அன்பு சார்ந்த இத்தனை பேரை ஒருங்கிணைத்ததே மிகப்பெரிய சந்தோசமாக இருக்கிறது. 25வது படத்தை முடித்து விட்டோம். இந்த தருணத்தில் மக்களுக்கு நன்றி சொல்ல ஏதாவது ஒரு சந்தர்ப்பம் வந்தாலும் அதன் மூலம் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தோம். முதல் கட்டமாக ஒரு கோடி ரூபாய் அளவில் அன்னதானம் வழங்க முடிவு செய்தோம். நான் பணமாக தான் கொடுத்தேன். ஆனால் என்னுடைய தம்பிகள் ஒவ்வொரு பகுதியாக சென்று தினமும் ஆயிரம் பேருக்கு அவர்கள் கையால் சாப்பாடு போட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி சொல்ல எனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்த தருணத்தில் அவர்களுக்கு நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.

ஒரு விஷயம் செய்தாலும் அதில் பல பேருக்கு பலன் கிடைக்க வேண்டும் என்பதால் தான் 25 பள்ளிகளை தேர்வு செய்து அவற்றுக்கு உதவி செய்ய முடிவு செய்தோம். அதேபோல ஆதரவற்ற 25 முதியோர் இல்லங்களை தேர்வு செய்தோம். தம்பிகள் கொடுத்த யோசனைப்படி தன்னார்வலர்களை அழைத்து கௌரவிக்க முடிவு செய்தோம். இங்கு எத்தனையோ தன்னார்வலர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களை இப்படி ஒரு விழாவிற்கு அழைத்தால் வருவார்களா என்கிற சந்தேகம் இருந்தது. அவர்களுக்கு நாம் என்ன தொகை கொடுத்தாலும் அது உடனே மக்களுக்கு தான் போய் சேரும். அப்படிப்பட்ட தன்னார்வலர்கள் ஒரு 25 பேரை மட்டும் இப்போது அழைத்து கௌரவப்படுத்தியுள்ளோம். எங்கள் அழைப்பை ஏற்று இங்கே வந்து இந்தத் தொகையைப் பெற்றுக்கொண்டு எங்களை கௌரவித்த அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்.

சின்ன குழந்தைகளுக்கு என்ன சொல்லித் தரலாம் என்று கேட்டால் என்ன படிக்கலாம், எப்படி சம்பாதிக்கலாம் என்பதை தாண்டி அன்பாக இருங்கள் என்று கற்றுக் கொடுக்க வேண்டும். தங்களுக்கு உதவி வேண்டும் என்று கேட்கத் தெரியாதவர்களை கூட தேடிச் சென்று சந்தித்து உதவி செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. இங்கே வந்திருப்பவர்கள் யாருமே பெரிய வசதி வாய்ப்பு கொண்டவர்கள் இல்லை. ஆனால் தன்னால் முடிந்தவற்றை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பது பெரிய விஷயம். தங்களுக்கு இது தேவை என்று நினைக்காமல் சுற்றியுள்ள மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் இவர்களை இங்கே அழைத்து மீடியா முன்பாக அவர்களை அடையாளப்படுத்தியதில் மகிழ்ச்சி. 

ஏனென்றால் இங்கே உதவி பண்ண வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட பல பேர் இருக்கிறார்கள். ஆனால் யார் மூலமாக உதவி செய்வது என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கிறது. பலரிடம் பணம் இருக்கிறது நேரம் இல்லை.

அப்படி தங்களது பொன்னான நேரத்தை செலவழித்து உதவி தேவைப்படுபவர்களை தேடிச் சென்று உதவி செய்யும் தன்னார்வலர்கள் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம் என்று சொல்லலாம். இதன் மூலம் இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள உதவி செய்ய மனம் படைத்த வசதியானவர்களுக்கு இவர்களைப் பற்றி தெரிய வரும். இந்தப் பணி இன்னும் தொடரும்”என்று கூறினார்.