April 29, 2024
  • April 29, 2024
Breaking News
February 3, 2024

சிக்லெட்ஸ் திரைப்பட விமர்சனம்

By 0 92 Views
இன்றைய 2k கிட்ஸ் இளைஞர்களைக் கவரும் வகையில் காதல், காமம் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு படம் எடுத்தாக வேண்டும் என்றால் அதற்கு இருக்கும் ஒரே வழி, அவர்களுக்கு அட்வைஸ் செய்வதாகக்  கதையை அமைப்பதுதான்.
 
அந்த வகையில் இயக்குனர் முத்து புத்திசாலித்தனமாக இப்படி ஒரு லைனைப் பிடித்திருக்கிறார்.
 
பள்ளி இறுதி முடித்து கல்லூரியில் சேரவிருக்கும் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகிய தோழிகளுக்கு ஒரு திடீர் ஆசை. பாலியல் விஷயங்கள் பற்றிய தெளிவு பிறக்க வேண்டும் என்று தங்களது ஆண் நண்பர்களுடன் வீட்டில் தோழிக்கு திருமணம் என்று சொல்லிவிட்டு பார்ட்டிக்கு செல்கின்றனர்.
 
ஆனால் அவர்களது பெற்றோருக்கோ தங்கள் வாரிசுகள் எப்படி படித்து முன்னேற வேண்டும் என்கிற திட்டம் இருக்கிறது. இந்நிலையில் இவர்கள் பொய் சொல்லி பார்ட்டிக்கு சென்ற விஷயம் அவர்களுக்குத் தெரிய வர அவர்களைத் தேடிப் புறப்படுகிறார்கள்.
 
மாணவிகளின் திட்டம் நிறைவேறியதா அல்லது பெற்றோர் அவர்களைத் தடுத்து நிறுத்தினரா என்கிற கேள்விக்கு பதில் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது சிக்லெட்ஸ்.
 
நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீராவின் இளமையையும் அழகையும் நம்பித்தான் முழுப் படமே நகர்கிறது. அவர்களது பாடி லாங்குவேஜ், இரட்டை அர்த்த வசனங்கள் எல்லாமே வணிக ரீதியில் ரசிகர்களைக் கவரும் விதமாக அமைந்துள்ளது.
 
அவர்களின் ஆண் நண்பர்களாக வரும் சாத்விக் வர்மா, ஜேக் ராபின்சன், ரசீம் ஆகியோரும் அப்படியே.
 
பெண்களைப் பெற்றவர்களாக வரும் சுரேகா வாணி, ஸ்ரீமன், ராஜகோபால் மூவரும் தங்கள் பதட்டத்தை நடிப்பின் மூலம் நன்றாகவே காட்டியிருக்கிறார்கள் அந்த பதட்டத்திலும் கொஞ்சம் நகைச்சுவை கலந்து அங்கங்கே நம்மை சிரிக்கவும் வைக்கிறார்கள்.
 
இந்த இளமை அழகிகளை எப்படி எல்லாம் கவர்ச்சியாகக் காட்ட முடியுமோ அப்படி எல்லாம் வளஞ்சி, நெளிஞ்சி படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமார்.
 
பால முரளி பாலுவின் இசையும் இந்தப் பாலியல் படத்துக்கு தோதாக பால் வார்த்திருக்கிறது.
 
இன்றைய 2k கிட்ஸ் நாடி அறிந்து இந்தப் படத்தை இயக்கியிருப்பதால் அவர்களை வெகுவாக கவரும் வாய்ப்பு இருக்கிறது . ஆனால், இதில் இருக்கும் நல்லவற்றை விட கெட்ட விஷயங்கள்  அவர்களை அதிகமாக பாதித்தால் அது தவறுதான்.
 
அதே சமயத்தில், டீன் ஏஜ் வயதில் தங்கள் குழந்தைகள் எப்படி எல்லாம் கெட்டுப் போக இந்த சமூகத்தில் வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக இந்தப் படத்தை பெற்றோரும் பார்க்கலாம்.
 
சிக்லெட்ஸ் – பால் வீதி..!