September 16, 2024
  • September 16, 2024
Breaking News
February 4, 2024

வடக்குப்பட்டி ராமசாமி திரைப்பட விமர்சனம்

By 0 137 Views

வழக்கமான சினிமாவில் இருக்கக்கூடிய வடக்குப்பட்டி, தெக்குப்பட்டி என்ற இரண்டு ஊர்கள். தெக்குப் பட்டி பற்றி பெரிய செய்தி சொல்லாமல் வடக்குப்பட்டியில் மட்டும் கதை நகர்கிறது.

எண்பதுகளில் கதை நடக்கிறது. அதற்கு முன்னால் 60களில் நடக்கும் ஒரு பிளாஷ் பேக் சொல்லப்படுகிறது. அதன்படி அந்த ஊரில் தெய்வம் இல்லாமல் போய் பௌர்ணமியில் மட்டும் தென்படும் ஒரு கொள்ளிவாய் பிசாசு ஊரை பீதிக்குள் வைத்திருக்கிறது.

சாமி பூத நம்பிக்கைகளில் ஊரே மூழ்கிக் கிடக்க, அங்கு வசிக்கும் ராமசாமி என்கிற சிறுவன் மட்டும் இதை எல்லாம் நம்பாமல் இருக்கிறான்.

இந்நிலையில் பெளர்ணமி அன்று போலீஸ் துரத்திக் கொண்டு வரும் ஒரு திருடன் இவர்கள் வீட்டுப் பானையில் திருடிக் கொண்டு வந்த நகைகளை மறைத்து வைக்க, அந்த நேரம் பார்த்து கொள்ளிவாய் பிசாசு தோன்ற அதை அடித்துக் கொல்ல ஊர் மக்கள் துரத்த… இந்தக் களேபரம் ராமசாமி முன்னிலையில்  முடிவுக்கு வருகிறது.

கடவுளே இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்த ராமசாமிக்கு ஊர் மக்களின் முட்டாள்தனம் புதிய எண்ணத்தைத் திறந்து வைக்க, அதன் மூலம் அந்த சாமியை வைத்து பெரும் பணக்காரனாக திட்டமிட்டு தன் வீட்டுப் பானையில் மறைத்து வைத்த நகைகளைக் கொண்டு புதிய கோவிலை உருவாக்கி அந்தப் பானையை சாமியாக்கி பெரிய வசூல் பார்த்து வருகிறார்.

இந்த விஷயம் தாசில்தார் வரை எட்ட அவரும் தன் பங்குக்கு இந்தக் கோவிலை வைத்துக்  காசு பார்க்க நினைக்க ராமசாமிக்கும் தாசில்தாருக்குமான ஈகோ பிரச்சனை கோவிலை இழுத்துப் பூட்ட வைக்கிறது.

அதன் பின்னர் கோவில் திறக்கப்பட்டதா… ராமசாமி கடைசிவரை மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தாரா போன்ற கேள்விகளுக்கு எல்லாம் மீதிப் படம் பதில் சொல்கிறது.

சமீப காலங்களாக சந்தானம் கதாநாயகன் ஆகும் படத்தில் கதை என்ற ஒன்று  தூக்கடாவாக போய்க்கொண்டிருந்ததை மாற்றி இந்தப் படத்தில் உருப்படியான லைனில் ஒரு கதை சொல்லி இருப்பதற்காக இயக்குனர் கார்த்திக் யோகியைப் பாராட்டலாம்.

வடக்குப்பட்டி ராமசாமியாக சந்தானம். “கடவுள் இல்லைன்னு சொல்லிட்டு இருப்பியே அந்த ராமசாமி நீ தானா..?” என்று அவர் சிறுவனாக இருக்கும் போதே கேள்வி வர, “அது நான் இல்லை…” என்கிறார். இதுதான் படம் வெளிவதற்கு முன்னர் பெரிய சர்ச்சையை கிளப்பியது.

ஆனால் சாமி நம்பிக்கை இல்லாத அவர் சாமியை வைத்து வருமானம் பார்ககும் ராமசாமி ஆவது புது ஐட்டம் தான். சந்தானம் இந்தப் படத்திலும் பல பஞ்ச்சுகள் அடித்தாலும் அவருக்கென்று பெஞ்ச் மார்க்காக இருக்கும் பஞ்ச் இந்த படத்தில் தேடிப் பார்த்தாலும் கிடைக்கவில்லை.

அவருடன் எல்லாப் படங்களிலும் செட் பிராப்பர்ட்டி போல மாறனும், சேஷுவும் அங்கங்கே சிரிக்க வைக்கிறார்கள். அந்த காமெடிகளும் எல்லா படத்திலும் பார்த்து அலுத்தவைதான்.

அந்த ஊரில் எதிரும் புதிருமாக இருக்கும் இரண்டு பெரிய மனிதர்கள் ஜான் விஜய்யும், ரவி மரியாவும். எந்த சம்பந்தமும் இல்லாமல் அவர்களுக்குள் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அவர்கள் செய்வது எல்லாம் காமெடி என்றால் சிரிப்புதான் வருகிறது.

நிழல்கள் ரவியும் தன் பங்குக்கு மேஜர் சந்திரகாந்த் என்ற ரோலில் வந்து கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். கடைசி கடைசி என்று மொட்டை ராஜேந்திரனும் களத்தில் இறங்க காமெடி என்ற பெயரில் நிறைய காமெடி செய்கிறார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் பவர் ஸ்டாரை நடனமாட விட்டு நம்மை சிரிக்க வைத்தது போல் இதில் சேஷுவை ஆடவிட்டு இருக்கிறார்கள். பவர் ஸ்டார் ஞாபகம் வராதவர்கள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கதாநாயகி மேகா ஆகாஷ் ஆரம்பத்திலிருந்து சந்தானத்துடன் கீரியும், பாம்புமாக சண்டை போட்டுக் கொண்டே வருகிறார். கடைசியில் மட்டும் சந்தானத்தின் குணம் புரிந்து இணைவது ஒரு ஆறுதல்.

எண்பதுகளில் சென்னையில் பிரபலமாக இருந்த ‘மெட்ராஸ் ஐ’ என்ற கண் நோயை வைத்து பாதிப் படத்தை உருட்டி இருக்கிறார்கள்.

சந்தானத்தைப் பாட வைத்திருப்பது தவிர வேறு ஒன்றும் உருப்படியாக செய்யவில்லை இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். ஒளிப்பதிவாளர் ஆறுதல் பரிசு பெறுகிறார்.

சென்டிமென்ட் கலந்த கிளைமாக்ஸ் மட்டும் ஒரு படம் பார்த்த திருப்தியைத் தருகிறது.

சந்தானம் இந்த படத்தில் பெரியாரை இழிவுபடுத்தினாரா என்ற கேள்விக்கு கடைசியில் பதில் கிடைக்கிறது பெரியாரின் கொள்கைகளை கண்டிப்பாக இழிவுபடுத்தி தான் இருக்கிறார்கள்.

அதிலும் ஊரில் கடவுள் பெயரால் சொல்லப்படும் அத்தனை மூடத்தனமான விஷயங்களையும் தன் பகுத்தறிவால் எதிர்த்து கொண்டு இருக்கும் சிங்கம்புலி ஜெகன் கூட மின்னலில் தெரியும் மலையைப் பார்த்து கடவுள் என்று வணங்கி ஆத்திகர் ஆகிறாராம். இதைவிட பெரியாரின் கொள்கைகளை இழிவுபடுத்தி விட முடியுமா என்ன..?

வடக்குப்பட்டி சந்தானம் கடைசியில் தெற்குப்பட்டி சந்தானமாக மாறுவதோடு  முடிகிறது படம் 

வடக்குப்பட்டி ராமசாமி – எடக்கு முடக்கு காமெடி..!