இந்தி(ய) நடிகரான அக்ஷய் குமாரை நமக்கு 2.ஓ பட வில்லனாகத்தான் தெரியும். ஆனால், அவர் ஹீரோவாக நடித்த இந்திப் படங்களில் அற்புதமான வேடங்களை ஏற்று நடித்திருக்கிறார்.
இப்போது அக்ஷய் குமார் செய்திருக்கும் காரியம் அத்தனை இந்திய ஹீரோக்களையும் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.
இப்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படும் பொருள் செலவுகளைச் சமாளிக்க மத்திய மாநில அரசுகள் பொருள் உதவி வேண்டி நிற்க, முன்னதாக தெலுங்கு ஹீரோக்கள் பிரதமர் மற்றும் முதல்வர்கள் நிதிக்கு உதவி புரிந்தனர். அதில் பிரபாஸ் அதிக பட்சமாக நான்கு கோடி கொடுத்தார்.
சினிமா ஹீரோக்களை பின்னுக்குத் தள்ளும் விதமாக கிரிக்கெட் வீரர் தோனி 20 கோடி ரூபாய் கொடுத்தார். இதுவே இதுவரை அளிக்கப்பட்ட நிதியில் பெரும்தொகையாக இருந்தது.
இந்நிலையில் அக்ஷய் குமார் தன் சேமிப்பிலிருந்து 25 கோடி ரூபாய் கொடுத்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். இந்த தொகையைத் தாண்டி வேறு ஒருவர் உதவ முடியுமா என்று தெரியவில்லை.
அக்ஷய் குமாரின் தாராள மனதுக்கு அவருக்கு ஒருநாள் கைத்தட்டி ஆரவாரம் செய்யலாம். ஆனால், என்ன செய்ய… அவர் நம்மைப் பொறுத்தவரை ஒரு வில்லன் நடிகர்தான்..!
மௌனம் சாதிக்கும் நம் ஹீரோக்கள் என்ன செய்யப் போகிறார்கள்..?