February 28, 2026
  • February 28, 2026
Breaking News
February 27, 2026

ஆழி திரைப்பட விமர்சனம்

By 0 9 Views

நாகர்கோயிலைச் சேர்ந்த சரத்குமார் லீகலாக படகு மெக்கானிக்காக இருக்கிறார். ஆனால், இல்லீகலாக போதைமருந்து, ஆயுதக் கடத்திலிலும் ஈடுபடுகிறார். அதன் காரணமாக செல்வந்தராக வாழ்கிறார்.

அப்படியே தன் மகளை இளவரசியாக வளர்க்கிறார். இந்நிலையில் அவர் மகளை ஒரு அன்றாடங்காய்ச்சி இளைஞன் காதலிப்பதை அறிந்து அவனைத் தங்கள் வாழ்வில் குறுக்கிடாமல் இருக்க செய்ய படகில் நடுக்கடலுக்கு அவர் தூக்கிச் செல்ல, அதன் பின் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள்தான் கதை.

சரத்குமாரை இவ்வளவு கொடூரமாகக் காட்ட எப்படி நினைத்தாரோ இயக்குனர்..?

கொடூர வில்லன் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்பவர், கொலை மட்டும்தான் செய்யவில்லை. திரைக்கதை ஒத்துழைத்து இருந்தால் அதையும் செய்திருப்பார். 

முதல் காட்சியிலேயே தன்னை பற்றிய புகார் சொல்லும் சமூக சேவகர் நிகில் முருகனை அடித்துத் துவைத்து தெருவில் வீசும் காட்சி பயங்கரம்.

அவரது மகளாக நடித்திருக்கும் தேவிகா சதீஷ் அழகான முகம் மற்றும் அந்த.வயதுக்கேயுரிய அப்பாவித்தனத்துடன் நடித்திருக்கிறார்.

காதலனாக நடித்திருக்கும் இந்திரஜித் ஜகஜித் மேல்தான் மொத்தக் கதையும் செல்கிறது.

சரத்குமாரிடம் அவர் சரமாரியாக அடி.வாங்கும்போது நமக்கே பதறுகிறது. அத்தனை வலி பொறுத்து நடிப்பது அத்தனை சுலபமல்ல. ஆனால், அத்தனை வலியையும் நடிப்பில் காட்டிச் சிறப்பாக நடித்திருக்கிறார் இந்திரஜித் ஜகஜித்…

சமூக சேவகர் நிகில் முருகனை இன்னும் கூட படத்தில் பயன்படுத்தி சரத்குமார் செய்யும் கொடுமைகளை வெளி உலகுக்கு அம்பலப்படுத்தி இருக்கலாம்.

ஒரு போட் மெக்கானிக் அத்தனை பெரிய ஆடம்பர மாளிகையில் வசிப்பது யார் கண்ணையும் உறுத்தவில்லையா என்ன..?

தலைப்புக்கு ஏற்றாற்போல் முக்கால்வாசிப் படமும் கடலுக்குள்தான் நடக்கிறது.என்றாலும் அது படகுக்குள்ளேயே நடப்பதில் ஒளிப்பதிவாளர் ஆனந்த் என் நாயருக்கு இடம், பொருள், ஏவல் உள்ளிட்ட ஒளிப்பதிவு சவாலாக அமைய, அதை சாமர்த்தியமாகக் கடந்திருக்கிறார் அவர்.

மெதுவாக நகரும் படத்துக்கு ஆங்கிலப் படம் போல பின்னணி இசை அமைத்து அதை நிறை செய்கிறார் இசையமைப்பாளர் வில்லியம் பிரான்சிஸ். ஜாசி கிப்ட் இன் இசையில் அமைந்த பாடல்களும் அருமை.

எழுதி இயக்கியிருக்கும் மாதவ் ராமதாசன் கடலின் ஆழத்தை விட மனித மனத்தின் ஆழம் பெரிது என்று சொல்ல முயன்றிருக்கிறார். அதை தொழில் நுட்ப ரீதியாக நேர்த்தியாகவும் கொடுத்திருக்கிறார்.

ஒரே இடத்தில் நகரும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்த்திருக்கலாம். கடலுக்குள் வந்து விட்டதற்காக கடைசி கடைசியாக ஒரு பெருமழை கட்சியை அற்புதமாகக் காட்சிப் படுத்தி இருக்கிறார்.

ஆழி – அன்புதான் தோணி..!

– வேணுஜி