October 30, 2025
  • October 30, 2025
Breaking News
October 30, 2025

ஆர்யன் திரைப்பட விமர்சனம்

By 0 57 Views

தொலைக்காட்சி ஒன்றிய முன்னணி ஹீரோவை லைவாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேட்டி எடுக்க, பார்வையாளர்கள் பகுதியில் இருந்து துப்பாக்கியுடன் வரும் செல்வராகவன் அவரை சுட்டு தள்ள… முதல் காட்சியிலேயே நம் முதுகெலும்பை நிமிர்த்தி வைக்கிறார் இயக்குனர் பிரவீண் கே.

ஆரோக்கியமான மற்றும் ரசிக்கத்தக்க படங்களையே எடுக்கும் விஷ்ணு விஷாலின் விவி ஸ்டுடியோசிலிருந்து தயாராகி இருக்கும் இந்தப்படமும் அந்தவகையைச் சேர்ந்ததுதான். 

இதுவரை வந்த சீரியல் கில்லர் படங்கள் அத்தனையிலும் கொல்லப்படும் நபர்கள் நிறைய கொடுமைகளை செய்த கொடூரர்களாக இருப்பார்கள். ஆனால், இந்திய சினிமாவில் முதல் முறையாக இந்தப்படத்தில் நல்லவர்கள் கொல்லப்படுகிறார்கள்.

அதுவே புதுமை என்றிருக்க, முதல் காட்சியிலேயே கொலையாளியை அறிமுகப்படுத்தி அவர் கொல்லவும் படுவது அதைவிட ஆச்சரியம்.

அதற்கு பின் நடப்பவை எல்லாம் நம்பமுடியாத சுவாரசியங்கள்.

ஏற்கனவே ஒரு போலீசாக ராட்சசன் படத்தில் நடித்து விட்ட விஷ்ணு விஷால், இதில் வித்தியாசம் காட்டவேண்டி கெட்டப், உடல்மொழி என்று எல்லா அம்சங்களிலும்  இன்னொரு முகம் காட்டி இருக்கிறார். 

மீசைதான் தைரியத்துக்கு அடையாளம் என்பதை மாற்றி மீசை எடுத்தும் ரௌத்திரம் காட்டியிருக்கிறார்.

அத்துடன் தயாரிப்பாளராகவும் அவருக்கு இந்தப்படம் இன்னொரு வெற்றியைக் கொடுத்திருக்கிறது.

செல்வராகவன் அமைதியாகவே வந்தாலும் அவர் வரும் காட்சி ஒவ்வொன்றும் மிரள வைக்கிறது. அதுவும் அவர் செய்யப்போகும் கடைசிக் கொலை பற்றிய வீடியோ பேச்சு மிரட்டல்.

நாயகி ஆகியிருந்தாலும் ஷ்ரத்தா ஶ்ரீநாத், விஷ்ணு விஷால் ஜோடியாக வராததும் ஒரு புதுமை. 

ஆனால், உண்மையில் விஷ்ணுவுக்கு ஜோடியாக வரும் மானசா சௌத்ரிக்கும் அவருடன் ரொமான்ஸ் செய்ய வாய்ப்பு குறைவு.

பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். 

ஹரிஷின் ஒளிப்பதிவும் தரமாக இருக்கிறது.

கடைசிக் கொலையும் அதை முறியடிக்க முயலும் விஷ்ணு விஷாலின் தீரமும் தரும் பரபரப்பு அல்டிமேட்..!

ஆர்யன் – ராட்சசன் 2..!

– வேணுஜி